யாழ். மே தினத்தில் தென்பகுதி மக்களை கலந்துகொள்ளவிடாது தடுக்கும் நடடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: ஐ.தே.க.
30-04-2012 03:03 PM
Comments - 0       Views - 383

                                                                                                           (கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மே தினத்தில் தென்பகுதியிலிருந்து வருபவர்களை கலந்துகொள்ளவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்  முன்னெடுத்துவருவதாக ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். எக்ஸ்போ விடுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.  அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

'யாழ்ப்பாணத்தில் நாளையதினம் நடைபெறவுள்ள மே தினத்தில் கலந்துகொள்ளுவதற்காக தென்பகுதியிலிருந்து வரும் மக்களுக்கு பாதைத்தடைகளை விதித்து அவர்களை எதிர்க்கட்சிகளின் மே தினத்தில் கலந்துகொள்ளவிடாமல் தடுப்பதற்கு அரசாங்கம் திரைமறைவில் செயற்பட்டுவருகின்றது.

யாழ்ப்பாணத்தில் நாங்கள் நடத்தவுள்ள மே தினத்தில் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக   எதிர்க்கட்சிகளாகிய நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம். இதனை எவராலும்  தடுக்க முடியாது.

நாங்கள் பயங்கரவாதிகளோடு இணைந்து மே தினத்தை நடத்துவதாகவும் அதன் மூலம் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் மீண்டும் புத்துயிர் கொடுப்பதாகவும் தென்பகுதியில் விசமத்தனமான பிரசாரங்களை முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் சமூக மாற்றத்தை உண்டுபண்ணுவதே எமது நிலைப்பாடாகும். சவால்கள் எது வந்தாலும் அதனை எதிர்கொண்டு யாழ்ப்பாணத்தில் மே தினத்தை சிறப்பாக நடத்தவுள்ளோம்.

மேலும் நெடுந்தீவில் அராஜக ஆட்சி நடைபெறுவதை நாம் நேரில் பார்த்தோம். இங்கு ஜனநாயக்த்தை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது' என்றார்

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  மகேஸ்வரன் விஜயகலா இங்கு உரையாற்றுகையில்,

'எனது கணவர் நடத்த வேண்டிய இந்த மே தினத்தை நான் இங்கு தனித்து நின்று நடத்துகின்றேன்.  யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளின் மே தினம் நடந்தே தீரும். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்றார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவர்களில் ஒருவரான வேலாயுதம், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஆர்.யோகராஜன், யோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

"யாழ். மே தினத்தில் தென்பகுதி மக்களை கலந்துகொள்ளவிடாது தடுக்கும் நடடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது: ஐ.தே.க." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty