(எஸ்.ஜெனி)
தள்ளாடியில் இருந்து ஆரம்பித்து மாந்தை ஊடாக பாப்பாமோட்டை செல்லும் ஏ - 32 வீதியின் இருபக்கங்களிலும் காட்டு மரங்கள் வளர்ந்து வீதியினை மூடியவாறு காணப்படுவதினால் விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் இதனால் பற்றைகளையும் மரங்களையும் வெட்டி அகற்றுமாறு கோரி மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதிலும், இதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என மாந்தை மேற்கு பிரதேசசபையின் உறுப்பினர் ஜேம்ஸ் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
ஏ - 32 வீதியை மூடியுள்ள பற்றைக்காடுகளினாலும் வளர்ந்து காணப்படும் மரங்களினாலும் தொடர்ந்து மாந்தை பிரதான வீதியில் விபத்துக்களும், வாகன நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. பற்றைகளையும் மரங்களையும் வெட்டி அகற்றி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போக்குவரத்து மேற்கொள்ள உதவுமாறு கோரி மன்னார் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளரின் கவனத்திற்கு கடந்த 24ஆம் திகதி கடிதம் மூலம் கொண்டு வந்தேன். எனினும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
வாகன விபத்துக்கள் மாத்திரமன்றி காட்டுப் பன்றிகளும் மாடுகளும் பற்றைக்குள் இருந்து விட்டு திடீர் என்று வீதியை நோக்கி ஓடி வருவதினாலும் விபத்துக்கள் சம்பவிக்கின்றன.
எனவே, தொடர்ந்தும் காலம் தாமதிக்காது ஏ - 32 வீதியில் உள்ள பற்றைக்காடுகளையும் மரங்களையும் வெட்டி அகற்றுமாறு மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜேம்ஸ் சுதாகரன், உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

