(எஸ்.ஜெனி)
எரிபொருட்களின் விலையேற்றத்தினைக் கண்டித்தும் தமக்கு எரிபொருள் மானியம் வழங்கக்கோரியும் மன்னார் மாவட்ட விவசாயிகள் அனைவரும் நாளை வியாழக்கிழமை காலை மௌன ஊர்வலத்தை மேற்கொள்ளவுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எரிபொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக மேட்டுநில பயிர்ச்செய்கை முழுமையாக பாதிக்கும் நிலைமையேற்றபட்டுள்ளதுடன், நெல் அறுவடைக்காலமான இக்காலத்தில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பால் அரிவு வெட்டும் இயந்திரத்தின் கூலியும் அதிகரித்துள்ளது. ஆனால் நெல்லின் விலையோ வீழ்ச்சியடைந்த நிலையில் உள்ளது.
விவசாயிகளுக்கும் எரிபொருள் மானியமாக மண்ணெண்ணை, டீசல் ஆகியவற்றை வழங்கக்கோரி மன்னார் நகரில் நாளையதினம் மாபெரும் மௌன ஊர்வலத்தை நடத்தவுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்குமான மகஜர்களும் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட விவசாய அமைப்புக்களின் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

