(ஸரீபா)
முஸ்லிம்களின் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற 2012ஆம் ஆண்டு தயாராகவுள்ள அனைவரும் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் மூலம் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்தார்.
வாழைச்சேனை - கோறளைப்பற்று மத்தி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வு இயக்குநர் சபைத் தலைவர் எம்.ஏ.சலாம் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்கு இவ்வருடம் தயாராகவுள்ள அனைவரும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் 25,000.00 ரூபா செலுத்தி தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும்போது செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து தாங்கள் செலுத்திய பதிவுக் கட்டணம் கழித்தே பெறப்படும்.
முதன்முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுவந்தவர்களுக்கு அதற்குப் பிறகுதான் சந்தர்ப்பம் வழங்கப்படும்' என்றார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமையப் பெற்ற நிர்வாகக் காரியாலயத் திறப்பு விழாவில் கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர், தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடிப் பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

