செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

மரணமான சிலாபம் மீனவருக்காக 2 நாட்கள் கடலுக்கு செல்லாதிருக்க நீர்கொழும்பு மீனவர்கள் தீர்மானம்

 

(கே.என்.முனாஷா)

சிலாபத்தில் மீனவர்கள் இன்று புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் மரணமான மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு தினங்கள் கடலுக்கு தொழிலுக்காக செல்லாமல் துக்க தினம் அனுஷ்டிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன , நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, கத்தோலிக்க மத தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்புக்காக மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்குவதாக இன்று அறிவித்துள்ள மண்ணெண்ணை மானிய தொகைக்கு நீர்கொழும்பு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த விசேட கூட்டத்திலேயே இந்த இணக்கம் காணப்பட்டது. "இதனால் நாளைய தினம் முதல் நீர்கொழும்பு எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீர்கொழும்பு மீனவர்கள் உள்ள ஒரு லீற்றர் மண்ணெண்ணையை 81 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கான வேலைத்திட்டம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளது" என நீர்கொழும்பு கடற்கரை தெரு ஐக்கிய மீனவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .

இதேவேளை, இன்றைய தினமும் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

Views: 559

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.