வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014
 

இனப்பிரச்சினைக்கு உடனடிதீர்வு கண்ட ஒரே தலைவர் ரணில்: டாக்டர் ஜயலத்

 

'இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு 1948ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் பல்வேறு தலைவர்கள் தீர்வு காண்பதற்கு முயற்சித்த போதிலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. உண்மையான முயற்சிகளாகவும் முற்றுப்பெறவில்லை.

இருப்பினும் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கண்ட ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க' என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'2001ஆம் ஆண்டு பிரதமராக பதவிவகித்த ரணில் விக்கிரமசிங்க, தனது அரசியல் எதிர்காலம் உட்பட அனைத்தையும் முன்வைத்து குறுகிய அரசியல் இலாப நோக்கம் கருதாமல் 2001.02.22ஆம் திகதி சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான உடனடி தீர்வொன்றை பெற்றுக்கொடுத்தார். இது எமது நாட்டின் வரலாற்றுப் பக்கத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சராக பதவிவகித்த எனக்கும் இதன்போது கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது வன்னி மக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உட்பட அத்தியாவசிய வசதிகள் எதுவும் இன்றி இன்னல்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலும் மக்கள் இப்படியான கஷ்டங்களை அனுபவித்திருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

 

மேலும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரைப் பாதுகாத்துக்கொள்ள தென்னிந்தியாவுக்குச் சென்று அங்குள்ள அகதி முகாம்களில் நெரிசல்களுக்கு மத்தியில் வாழ்ந்தனர். இவை அனைத்திற்கும் சமாதான உடன்படிக்கை மூலமே நிவாரணம் கிடைத்தது. எனினும் தென் இலங்கையிலுள்ள சில இனவாதிகள் ரணில் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் முத்திரை குத்தினர்.

இவ்வாறான பல்வேறு பரிகாசங்களுக்கும், உயிர் அச்சுறுத்தலுக்கும் நானும் உள்ளானேன். இப்படியானோர் இருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அகிம்சையான தமிழ் மக்களுக்கான முன்வந்து பேசுகின்றமை குறித்து நான் சந்தோஷப்படுகின்றேன்.

தேசியப் பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமாதானத்துடனான அரசியல் தீர்வு ஒன்றை நாட்டிற்குள் தேடிக்கொள்ள இலங்கை வரலாற்றில் மிகச்சிறந்த மக்கள் சிநேகிதமான துரித நடவடிக்கை என இந்த சமாதான ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டலாம்.

எமது நாட்டின் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைப் பாதுகாக்க ஜாதி, மதம் என்ற பேதமின்றி நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். என்றும் இதற்காக நான் முன்நிற்பேன் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை. எப்போதும் உண்மையே வெல்லும்' என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: 918

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.