'ஸ்ரீலங்கா யூத்' வீடமைப்புத் திட்டமானது பெறுமதியான பங்களிப்பை வழங்கும்'
01-04-2012 11:35 AM
Comments - 0       Views - 423

(எஸ். எம். மும்தாஜ்)


'இந்நாட்டில் வாழும் சகலருக்கும் வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு 'ஸ்ரீலங்கா யூத்' வீடமைப்புத் திட்டமானது பெறுமதியான பங்களிப்பை வழங்கும்' என்று என வடமேல் மாகாண இளைஞர் விவகார, கடற்றொழில், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நாடு முழுவதிலுமுள்ள பிரதேச செயலகப்பிரிவுகளில் செயற்படும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களுக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்கும் 'ஸ்ரீலங்கா யூத்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற பிரதான வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

2014 ஆம் ஆண்டில் இந்நாட்டில் நிலவும் வீடில்லாப் பிரச்சினைக்கு முடிவு காண அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் நாடு முழுவதிலுமுள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இளைஞர் ஒருவருக்காக வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க தேசிய இளைஞர் சேவை மன்றம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செயற்பாடாகும்.

தற்போது வடமேல் மாகாணத்தில் தமக்கென ஒரு வீடு இல்லாத 74 ஆயிரம் குடும்பங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தொகையில் 44 ஆயிரம் குடும்பங்கள் புத்தளம் மாவட்டத்திலேயே வாழ்கின்றனர். வீடில்லாத சகலருக்கும் அடுத்த 2014ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்னர் வீடொன்றை அமைத்துக் கொடுப்பதற்கு எமது அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

எனினும் இந்நாட்டில் வீடின்றி இருக்கும் தொகையினை பூஜ்ஜியமாக்க எம்மால் ஒருபோதும் முடியாது. இதற்கான காரணம் இன்று திருமண பந்தத்தில் இணையும் புதிய குடும்பம் ஒன்றுக்கும் அவர்களுக்கென்று வீடு ஒன்று தேவைப்படுவதாகும். எனவே தாம் திருமணம் செய்து கொள்ளும் முன்னர் தமக்கென்று ஒரு வீட்டை நிர்மாணித்துக் கொள்வதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

 'ஸ்ரீலங்கா யூத்' எனும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ்  புத்தளம் மாவட்டத்தில் 16 வீடுகள் நிர்மாணிக்கபட உள்ளன. இதற்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஒரு இலட்சம் ரூபாவும், வடமேல் மாகாண வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலம் இருபத்தி ஐயாயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

இந்த நிதிகளையும், பிரதேச இளைஞர் மன்ற உறுப்பினர்களின் உடல் உழைப்பையும் பெற்றுக் கொண்டு நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள இவ்வாறான ஒரு வீட்டின் பெறுமதி எட்டு லட்சத்தி எழுபத்தி ஐயாயிரம் ரூபாவாகும் என்று தெரிவித்தார்.


"'ஸ்ரீலங்கா யூத்' வீடமைப்புத் திட்டமானது பெறுமதியான பங்களிப்பை வழங்கும்'" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty