அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் குறைபாடுகளைக் கொண்டுள்ளதெனவும் ஆகையால் தற்போதைய சூழ்நிலையில் இதனை அதிகாரப்பரலாக்கலின் அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா உட்பட சில தரப்புக்கள் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கருத்தை வெளியிட்டுள்ளது.
13ஆவது திருத்தச்சட்டம் ஏற்கெனவே அரசியலமைப்பின் ஒருபகுதியாக உள்ளதெனவும் ஆகையால் அதனை அர்த்தமுடையதாக அமுல்படுத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
'இது தொடர்பில் அரசாங்கம் உண்மையான உறுதியுடன்; இருந்தால், எங்களுடனான கலந்துரையாடல் தேவையில்லை. இன்று 13ஆவது திருத்தச்சட்டம் பல குறைபாடுகளைக் கொண்டுள்ளது.
மாகாண சபைக்கு அரசாங்கம் வலுவூட்டுவதற்குப் பதிலாக ஆளுநர்களிடம் அதிகாரங்களை கையளிக்க முடியும். இதுவொரு அரசியலமைப்பு ரீதியான தவறாகும்' என அவர் கூறினார்.
13ஆவது திருத்தச்சட்டம்; முன்வைக்கப்பட்டபோதிலும், தேசிய கொள்கைத்திட்டமிடல் தற்போதும் மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
'மாகாணசபைக்கு நிலம், பொலிஸ் மற்றும் இறை அதிகாரங்கள் தேவை. அரசாங்கம் இவற்றை தான் வைத்துக்கொண்டால் மாகாணசபைகளின் கரங்கள் அரசியலமைப்பு ரீதியாக இறுக்கப்படும்' என அவர் கூறினார்.
அரசாங்கத்துடன் ஒரு வருடமாக நடைபெற்ற அரசியல் பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், அதிகாரப்பரவலாக்கம் குறித்தோ அல்லது பகிர்வு குறித்தோ முக்கிய கலந்துரையாடல் இதுவரையில் நடைபெறவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
'காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களுக்கான அதிகாரப்பரவலாக்கம் குறித்து நாங்கள் கலந்துரையாடவில்லை. அத்துடன் வடக்கு, கிழக்கு மீளிணைப்புக் குறித்தும் நாங்கள் கலந்துரையாடவில்லை' என அவர் கூறினார்.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பின்னர் 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டில் மாகாண சபைகளை அமைக்க வகை செய்தது. இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணசபையில் பிரேமச்சந்திரனின் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப். பிரதான கட்சியாக பங்கேற்றது.
இதேவேளை, தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் இறைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்த அதிகாரமும் மாகாணங்களுக்கு கையளிக்கப்படக்கூடாதென மத்திய மாகாணத்தின் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
'எனது பார்வையில் சில கட்டுப்பாடுகளுடன் நாங்கள் காணி அதிகாரத்தை அனுபவித்து வருகின்றோம். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க பொலிஸ் அதிகாரம் தேவை. ஆனால் எங்களது நாட்டில், யுத்த காலத்தின்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எந்தவித அதிகாரங்களையும் மத்திய அரசு கையளிக்கக்கூடாது' என அவர் கூறினார்.
அரசியல் தீர்;வு காணப்படும்போது முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு தேவையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள கிழக்கின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய தேர்தல் தொகுதிகளை இணைத்து தனியானதொரு அலகு உருவாக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கிலுள்ள தொடர்ச்சியாக அமையாத முஸ்லிம் பகுதிகள் இந்த நிர்வாக அலகின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எமது அதிகூடிய கோரிக்கையெனவும் அவர் கூறினார். (கெலும் பண்டார)


Comments
RSS feed for comments to this post