(சந்துன் எ. ஜயசேகர)
சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா குற்றவாளி அல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்றுக் குழு கண்டறிந்துள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சமுர்த்தி ஊழியரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பிரதியமைச்சர் பதவியிலிருந்து மேர்வின் சில்வா நீக்கப்பட்டதுடன் அவரின் கட்சி அங்கத்துவமும் ரத்துச் செய்யப்பட்டது.
டெங்கு ஒழிப்புத் திட்டத்தினை பிரபல்யப்படுத்தவே தானும் களனி பிரதேச சபை அங்கத்தவரும் தன்னை மரத்தில் கட்டி நாடகம் போட்டதாக மரத்தில் கட்டப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் சத்திய கடதாசியொன்றை சமர்ப்பித்திருந்தார்.
எனவே, இங்கு குற்றவாளியோ சட்டத்துக்கும் புறம்பான நிகழ்வோ இடம்பெறவில்லை. இதனால், மேர்வின் சில்வா மீதான குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார் என ஒழுக்காற்று நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில், மக்களது எதிர்ப்பினைத் தணிக்கவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த ஒழுக்காற்று குழுவினை நியமித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்துக்கு ஒருபோது மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இருக்கவில்லை. கள்வனின் தாயாரிடம் போய் களவு பற்றி ஜோதிடம் கேட்ட கதைதான் இது. இது இப்படித்தான் முடியும் என எமக்கு முன்னரே தெரியும் என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

