செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் டபிள்யூ.பி.பி.அபேதீர காலமானார்

 

(ஏ.எச்.ஏ.ஹூஸைன்)

இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டபிள்யூ.பி.பி.அபேதீர, நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு ஆசிரி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். இறக்கும் தறுவாயில் அன்னாருக்கு 71 வயது.

1987ஆம் ஆண்டு இலங்கை கனடா அபிவிருத்தி நிதியம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் உள்நாட்டில் ஆயுத முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக பல நிலையான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தி வந்திருக்கிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

சமூக சேவையில் கலாநிதிப்பட்டம் பெற்ற அமரர் அபேதீர, வடக்கு கிழக்குப் பகுதிகளில் ஆயுத முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழ்வாதாரத் திட்டங்களை  கிராம மக்களின் காலடிக்கே சென்று கையளித்திருக்கின்றார்.

சுனாமிக்குப் பின்னரான மீளமைப்புப் பணிகளுக்காக பல காத்திரமான நீண்டகாலத் திட்டங்களை வடிவமைப்பதில் மிகுந்த அர்ப்பணிப்போடு கலாநிதி அபேதீர பணியாற்றி இருந்தார்.

இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமாக கூட்டிணைக்கும் ஆலோசனையை முதனிலைப்படுத்தி மாவட்டமெங்கும் அரசார்பற்ற நிறுவனங்கள் கூட்டிணைந்து உருவாவதற்கு சகல வழிவகைகளையும் அவர் மேற்கொண்டிருந்தார். 

நாடு பூராகவும் சுமார் 500 இற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களைப் பலப்படுத்தி அந்த நிறுவனங்களுக்கூடாக சமூக, கல்வி, பொருளாதார முகாமைத்துவ அபிவிருத்தி, கொள்ளளவு விருத்தி போன்ற செயற்திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் நிதி இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் நாடு பூராகவும் 18 அரச சார்பற்ற நிறுவனங்களுடன் அடிமட்ட மக்களின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதி வழங்கி வருகின்றது.

சமூக அந்தஸ்து, கல்வி, பொருளாதாரம், அரசியல் செல்வாக்கு என்பனவற்றில் பின்னடைந்த நிலையிலுள்ள பல இலட்சம் வறிய மக்கள் நன்மை பெறுவதற்கு இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் உதவியிருக்கிறது.

காலஞ்சென்ற கலாநிதி அபேதீரவின் இறுதிக் கிரியைகள் கல்கிஸை பொது மயானத்தில்  நாளை புதன்கிழமை இடம்பெறும் என்று இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் பிராந்திய இணைப்பாளர் ஏ.சொர்ணலிங்கம் தெரிவித்தார்.

Views: 87

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.