
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் சேர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் சம்பியனாகியுள்ளார்.
மெல்பேர்ன் நகரில் சற்றுமுன் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் இரண்டாம் நிலை வீரரான ஸ்பெய்னின் ரபாயெல் நடாலை நடப்புச் சம்பியனும் உலகின் முதல் நிலை வீரருமான நோவாக் ஜோகோவிச் 5-7-, 6-4, 6-2-, 5-7, 6-5 விகிதத்தில் தோற்கடித்தார்.
5 மணித்தியாலம் மற்றும் 53 நிமிடங்கள் நீடித்த இப்போட்டி கிரான்ட்ஸ்லாம் டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்டநேரம் நடைபெற்ற போட்டியாகும்.
மிக மிக கடுமையாக நடைபெற்ற இப்போட்டியில் சம்பியனாகிய ஜோகோவிச் 2,367,850 அமெரிக்க டொலர் (சுமார் 26 கோடியே 92 லட்சம் இலங்கை ரூபா) பணப்பரிசையும் வென்றுள்ளார். இரண்டாமிடம் பெற்ற நடால் 1,183,926 டொலர்களை (சுமார் 13 கோடியே 46 லட்சம் ரூபா) வென்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பகிரங்க சுற்றுப்போட்டியில் ஜோகோவிச் மூன்றாவது தடவையாக சம்பியனாகியுள்ளார். அவர் வென்ற 5 ஆவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையர் பட்டம் இதுவாகும்.
24 வயதான நோவாக் ஜோகோவிக் 2008 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில் சம்பியனானதன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். கடந்த வருடம் அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடர், விம்பிள்டன் மற்றும் அமெரிக்கப் பகிரங்கத் தொடர்களில் சம்பியனாகியிருந்தார். (படங்கள் :ஏ.எவ்.பி.)








Comments
RSS feed for comments to this post