இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தன்னைவிட சிறந்த தலைவரை நியமிக்க முடியும் என கிரிக்கெட் சபை கருதினால் அப்பதவியிலிருந்து விலகத் தயார் என மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இந்திய அணி இறுதியாக விளையாடிய இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வியை தழுவியதையடுத்து, டோனியின் தலைமைத்துவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே டோனி இவ்வாறு கூறியுள்ளார்.
'தலைமைத்துவம் என்பது ஒருவருக்கும் சொந்தமானதல்ல. இப்போது அப்பதவியை நான் வகிக்கிறேன். அது பொறுப்புக்களை மேலும் அதிகரிக்கிறது. அப்பதவியில் இருக்கும்வரை நான் அப்பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கின்றேன தவிர, நான் அதில் ஒட்டிக்கொண்டிருக்க விரும்பவில்லை. சிறந்த மாற்றீடான ஒருவர் இருந்தால் அவர் வரலாம்' என டோனி கூறியுள்ளார்.
அவுஸ்திரேலிய -இந்திய அணிகளுக்கிடையிலான இருபது20 சுற்றுப்போட்டி இன்று புதன்கிழமை ஆரம்பமாகும் நிலையில் நேற்று டோனி இவ்வாறு கூறினார்.
'இந்திய அணி சிறப்பாக செயற்படுவதையே நீங்கள்விரும்புவீர்கள். சிறந்த பணியாற்றக்கூடிய ஒருவர் இருந்தால் அவரிடம் தலைமைத்துவம் ஒப்படைக்கப்பட வேண்டும்' என அவர் கூறினார்.

