இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பில்.எல்.) கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 14 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரமான முத்தையா முரளிதரன் 220,000 டொலர்களுக்கு பெங்களூர் ரோயல் சலெஞ்சர்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். 5 ஆவது தொடருக்கான ஏலம் பெங்களூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
கடந்த வருடம் ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் அணி கலைக்கப்பட்டுவிட்டதால் அவ்வணியைச் சேர்ந்த மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், ரவீந்திர ஜடேஜா பிரெண்டன் மெக்கலம் முதலான வீரர்களும் ஏலம் விடப்பட்டனர். இதனால் இம்முறை இந்த ஏலம் அதிக கவனத்தை ஈர்த்தது. மொத்தமாக11 நாடுகளைச் சேர்ந்த 144 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
ரவீந்திர ஜடேஜாவை வாங்குவதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜஸ் அணிகளிடையே கடும் போட்டி நிலவியது. இரு அணிகளும் 20 லட்சம் டொலர்களை வழங்க முன்வந்தன. இதில் அறிவிக்கப்படாத தொகையொன்றை வழங்கி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஜடேஜாவை பெற்றது.
மஹேல ஜயவர்தனவுக்கு அடிப்படை தொகையாக 3 லட்சம் டொலர் நியமிக்ப்பட்டிருந்த நிலையில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 1.4 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியது.
முத்தையா முரளிதரனை ரோயல் சலெஞ்சர்ஸ் அணி 220,000 டொலர்களுக்கு வாங்கியது. பிரெண்டன் மெக்கலம் 900,000 டொலர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் வாங்கப்பட்டார். இந்திய வீரர் வினய் குமாரை 10 லட்சம் டொலர்களுக்கு ரோயல் சலெஞ்சர்ஸ் வாங்கியது. வீரர்களின் ஏலம் தொடர்கிறது.


Comments
RSS feed for comments to this post