இந்திய கிரிக்கெட் அணியின் நீண்டகால அனுசரணையாளராக விளங்கிய சஹாரா நிறுவனம், இந்திய கிரிக்கெட் சபையுடனான நிதித் தொடர்புகளை முடித்துக்கொள்வதாக இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளது. அத்துடன் ஐ.பி.எல். தொடரில் புனே வாரியர்ஸ் அணியின் உரிமையிலிருந்தும் அந்நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது.
ஐ.பி.எல். 2012 போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் இன்று நடைபெறுவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பை சஹாரா நிறுவனம் வெளியிட்டது.
கடந்த 11 வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியின் அனுசரணையாளராக சஹாரா நிறுவனம் விளங்கியது. இது தொடர்பான புதிய ஒப்பந்தம் 01.07.2010 ஆம் திகதி கையெழுத்திடப்பட்டது. 31.12.2013 ஆம் திகதியே இந்த ஒப்பந்தத்தின் முடிவுத் திகதியாகும்.
இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு டெஸ்ட், ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் சர்வதேச இருபது20 போட்டிகளுக்கும் சஹாரா நிறுவனம் 3.34 கோடி இந்திய ரூபாவை வழங்கி வந்ததமை குறிப்பிடத்தக்கது.
'11 வருடகால எமது அனுசரணையாளர் பயணத்தின் பின்னர், கிரிக்கெட்டானது மிகச் செல்வச்செழிப்பானதாக மாறியுள்ளதென எம்மால் உறுதியாக கூற முடியும். பல செல்வந்த மனிதர்கள் கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்க மிக ஆர்வமுடன் வருகிறார்கள். எனவே நாம் கனத்த இதயத்துடன்; இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் கீழுள்ள கிரிக்கெட்டிலிருந்து நாம் வெளியேறுகிறோம்' என சஹாரா நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
'இந்த அனுசரணையில் நாம் ஈடுபட ஆரம்பித்த ஓர் உணர்வுபூர்வமான தீர்மானமாகும். ஆனால் எமது உணர்வுகள் அங்கீகரிக்கப்படவில்லை. பல உண்மையான வாய்ப்புகள் உரிய முறையில் கருத்திற்கொள்ளப்படவில்லை' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தொகை பணம் கொட்டப்படும் ஐ.பி.எல். தொடரிலும் கொச்சி டஸ்கர்ஸ் அணியூடாக சஹாரா பிரவேசித்தது. எனினும் இப்போட்டிகளுக்கான வீரர்கள் போட்டிகளின் எண்ணிக்கை குறித்து தாம் முன்வைத்த பல கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
' கடந்த வருடம் ஐ.பி.எல். தொடரில் நாம் உள்நுழைந்தபோது, 10 அணிகளுக்கிடையில் 94 போட்டிகள் நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டன. ஏலங்களுக்கான விலைகள் இதன்படியே கணிக்ப்பட்டன. ஆனால் 74 போட்டிகள் மாத்திரமே விளையாடப்பட்ட. மேலதிக பணத்தை விகிதாசாரப்படி திருப்பிக்கொடுக்குமாறு நாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையை இப்போதும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் விதிகளை காட்டி அதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அனைத்து வீரர்களையும் ஏலத்தில் விடுமாறு நாம் கோரினோம். இதன் மூலம் வீரர்களின் சமநிலையை பேணியிருக்கலாம். எனினும் அக்கோரிக்கை மறுக்கப்பட்டது. சிறந்த 12 வீரர்களையும் ஏற்கெனவே இருந்த அணிகள் தம்வசம் வைத்திருந்தன' எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தனது அணிக்காக புதிய அனுசரணையாளரை தெரிவு செய்யும் வரை எதிர்வரும் சில மாதங்களுக்கு அணியின் போட்டிகளுக்கான அனுசரணைக் கொடுப்பனவுகளை சஹாரா நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள், உத்தியோகஸ்தர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுப்பாட்டுச் சபைக்கு நாம் எந்த பிரச்சினையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. புதிய அனுசரணையாளரை தேடிக்கொள்ள கிரிக்கெட் சபைக்கு நிச்சயம் 2-4 மாதங்கள் செல்லும். அதுவரை நாம் அனுசரணைப் பணத்தை வழங்குவோம்' என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் சபைக்கான அனுசரணையை வாபஸ் பெற்றதையடுத்து 1000 கோடி ரூபாவை நலநிதியமொன்றில் வைப்புச் செய்யப்போவதாகவும் இதன்மூலம் கிரிக்கெட், கால்பந்தாட்டம், ஹொக்கி, போர்மியூலா வன், குத்துச்சண்டை, டென்னிஸ், கோல்வ், மல்யுத்தம் போன்ற விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கு கிராமிய நகர மட்டங்களில் ஊக்குவிப்பு நிலையங்களை ஸ்தாபிக்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

