.jpg)
கொமன்வெல்த் பாங்க் கிண்ணத்திற்கான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை அவுஸ்திரேலிய அணி 65 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
மெல்பேர்னில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக 32 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 216 ஓட்டங்களைப் பெற்றது.
அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் மத்தியூ வாட் 67 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் ஹஸி ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் மைக்கல் ஹஸி 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சாளர்களில் வினய் குமார் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களான கௌதம் காம்பீர் 5 ஓட்டங்களுடனும் சச்சின் டெண்டுல்கர் 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தபின் இந்திய அணி தடுமாறத் தொடங்கியது.
வீரட் கோலி 31 ஓட்டங்களையும் டோனி 29 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் 29.4 ஓவர்களில 151 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. கிளின்ட் மெக்கே 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மத்தியூ வாட் இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக தெரிவானர். மத்தியூ வாட்டின் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இத்தொடரின் அடுத்த போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதவுள்ளன.
.jpg)

