வீரேந்தர் ஷேவாக்கிற்கு ஓய்வளிப்பதற்காகவே நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என இந்திய அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார்.
ரோஹித் சர்மாவை அணியில் சேர்ப்பதற்காகவே ஷேவாக்கிற்கு ஓய்வளிக்கப்பட்டதாக டோனியின் கருத்து அமைந்தது.
' இதற்கு காயம் எதுவும் காரணமல்ல. ரோஹித் விளையாட வேண்டுமென்றால் அனுபவமிக்க வீரர் ஒருவர் அணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். இறுதிக்கட்டத்தில் இப்படி செய்வது கடினமாகும். பயிற்சி இல்லாமல் இத்தொடரின் இடையில் விளையாடுவது ரோஹித்துக்கு கடினமாக இருக்கும். இது மிக நீண்ட தொடராகும்' என அவர் கூறினார்.
ஷேவாக்கிற்கு ஓய்வளிப்பது அணியின் கூட்டுத் தீர்மானம் எனவும் டோனி தெரிவித்தார்.
மெல்பேர்னில் நடைபெற்ற இப்போட்டியில் அவுஸ்திரேலியா 65 ஓட்டங்களால் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. அதிரடி வீரரான ஷேவாக்அணியில் சேர்க்கப்படாமை குறித்து பலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே டோனி இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் மேற்கிந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஷேவாக் 219 ஓட்டங்களைப் பெற்று புதிய உலக சாதனை படைத்தார். அத்தொடரின் 5 ஆவது போட்டியில் ஷேவாக் ஓய்வுபெற்றுக்கொண்டார்.
அதன்பின் நேற்றைய போட்டியிலும் அவர் விளையாடவில்லை. அதாவது மேற்படி உலக சாதனையின்பின் இந்திய அணி விளையாடிய ஒருநாள் சர்வதேச போட்டிகள் இரண்டிலும் ஷேவாக் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஸஹீர்கானுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இத் தொடரின் கடைசிக் கட்ட போட்டிகளில் விளையாடுவர் எனவும் டோனி கூறினார்.

