செவ்வாய்க்கிழமை, 22 மே 2012

இலங்கை அணி வீசிய 5 பந்து ஓவரை சர்ச்சையாக்க விரும்பவில்லை: டோனி

 

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ணத் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய அணியுடனான போட்டியின் ஓவரொன்றில் இலங்கை அணி 5 பந்துகளை மாத்திரம் வீசியது.

அடிலெய்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் 30 ஆவது ஓவரை வீசிய லஷித் மாலிங்க 5 பந்துகளை மாத்திரமே வீசினார்.
இதை கள நடுவர்களான சிமோன் பிரை, நைகல் லோங், மூன்றாவது நடுவர் புரூஸ் ஒக்ஸென்போர்ட், போட்டி மத்தியஸ்தர் அன்டி பைகுரொவ்ட் ஆகியோரில் எவரும்  கவனிக்கத் தவறினர்.

இப்போட்டியில் இரு அணிகளும் 236 ஓட்டங்களைப் பெற்றதால் இப்போட்டி சமநிலையில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த ஓவரின் போது டோனியும் காம்பீரும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் 9 ஓட்டங்கள் பெறப்பட்டன.

பொதுவாக பாதிக்கப்படும் அணி, இவ்வாறான விடயங்களை சர்ச்சைக்குள்ளாக்க முயற்சிக்கும். ஆனால் இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி இவ்விடயத்தை புறக்கணித்துள்ளார்.

இது குறித்து டோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், பயிற்றுநர் டங்கன் பிளட்சர் இது குறித்து தனக்கு தெரிவித்தாக கூறினார்.

"கடந்த காலங்களில் 5 பந்துகள் கொண்ட ஓவர்கள் இருந்தன. ஆனால் மூன்றாவது நடுவர் தலையிட்டு விடுபட்ட பந்தை மீண்டும் வீசச்செய்ததையும் நாம் கண்டுள்ளோம். எமக்கும் அப்படி நடந்துள்ளது. ஆனால் இந்த போட்டியில் அது நடைபெறவில்லை. இனி இதில் அதிகம் எதுவும் செய்ய முடியாது"  என டோனி தெரிவித்தார்.

அந்த பந்துவீசப்பட்டிருந்தால் போட்டி சமநிலையில் முடிவடையாமல் இருந்திருக்குமா என்பது தெரியாது எனவும் டோனி கூறினார்.  அது ஓட்டமற்ற ஒரு பந்தாகவும் இருந்திருக்கலாம். கிரிக்கெட்டில் அப்படி நடக்கும். எனவே ஒரு 'டொட் போலாகவே' இருக்கட்டும்;' என டோனி கூறினார்.

மூன்றாவது நடுவர் ஏன் தலையிடவில்லை எனத் தெரியாது எனவும் இவ்விடயத்தை சர்ச்சையாக்க விரும்பவில்லை எனவும் டோனி கூறினார்.

அதேவேளை தீர்ப்பு மீளாய்வு முறைமையை  (டி.ஆர்.எஸ்.) பயன்படுத்துவதை இந்தியா எதிர்ப்பதை நியாயப்படுத்துவதற்கும் டோனி இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

'இப்படி நடக்க முடியும் என்றால்,  ஏன் டி.ஆர்.எஸ்ஸை மக்கள் ஆதரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. சிலர் டி.ஆர்.எஸ். தமக்கு ஆதரவாக இருந்தால் மகிழ்ச்சியடைவார்கள். இல்லையென்றால் மகிழ்ச்சியின்றி இருப்பார்கள். நான் இந்த 3 மனிதர்களில் (நடுவர்கள்) மகிழ்ச்சியடைகிறேன்' என அவர் கூறினார்.

இதேவேளை, மேற்படி 5 பந்து ஓவர் விடயமானது நடுவர்களால் புரியப்பட்ட நேர்மையான தவறு எனக்கூறி சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் மற்றும் கிரக்கெட் அவுஸ்திரேலி நிறுவனம் ஆகியனவும் புறக்கணித்துள்ளன.

'சர்வதேச வீரர்களைப் போன்று சர்வதேச நடுவர்களும் உயர்மட்டத்தில் செயற்படுகிறார்கள். ஆனால் அவர்களும் வீரர்களைப் போன்று மனிதர்கள் என்பதுடன் அவ்வப்போது தவறிழைக்கிறார்கள். ஆனால் ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அது மேற்கொள்ளப்பட்டதுதான். நாம் அதிலிருந்து முன்செல்ல வேண்டும்' என கிரிக்கெட் அவுஸ்திரேலிய அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இலங்கை அணித்தலைவர் மஹேல ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், இத்தவறு குறித்து தான் அறிந்திருக்கவில்லை கூறியுள்ளார். 'நான் முறைப்பாடு செய்யவில்லை' என ஜோக் அடித்துள்ளார் அவர். (சேது)
 

Views: 1164

Comments   

 
0#Risvi2012-02-17 00:16
டோனியின் தாராள மனப்பான்மை.
Reply
 
 
0#pithamahan2012-02-17 21:30
தோனி ஒரு வாய் சொல் வீரன்.
Reply
 

கருத்து



உங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.