பாகிஸ்தான் அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் இங்கிலாந்து அணி தனதாக்கியுள்ளது.
டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 222 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சஹீட் அவ்வரிடி 51 ஓட்டங்களையும் உமர் அக்மல் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஸ்டீவன் பின் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் ஸ்டுவர்ட் புரோட் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 37.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது.
இத்தொடரின் முதல் இரு போட்டிகளில் சதம் குவித்த அணித்தலைவர் அலஸ்டயர்குக் இன்று 80 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும் கெவின் பீட்டர்ஸன் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்றார். இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக கெவின் பீட்டர்சன் தெரிவானார்.
பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் 0-3 விகிதத்தில் தோல்வியைத் தழுவியபின் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து 3-0 விகிதத்தில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

