இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
17-04-2012 01:49 PM
Comments - 0       Views - 812

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம் பெற்றன. சமநிலையில் இந்த தொடர் நிறைவடைந்தது. இலங்கை அணி முதற் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. தொடரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அதுவும் சொந்த நாட்டில் போட்டியை சமப்படுத்த முடியாமல் போனது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?

இங்கிலாந்து அணி முதல் தர அணி என்றாலும் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் அடி வாங்கி வந்து இருந்தது. அங்கே மூன்று தோல்விகள். இலங்கையில் முதல் போட்டி தோல்வி. மொத்தம் நான்கு போட்டிகள் தோல்வி. இப்படியான நிலையில் எதிரணி மீது அழுத்தம் பிரயோகிப்பது மிக இலகு. இரண்டாவது போட்டியில் இலங்கை அணியின் மிக மோசமான துடுப்பாட்டமே அதற்கு முக்கியமான கரணம் ஆகும். துடுப்பாட்ட வீரர்களுக்கு சதம் தரக்கூடிய பி.சரவணமுத்து மைதானத்தில் இரண்டு இன்னிங்சிலும் 300 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்துள்ளனர். வெற்றி பெறக்கூடிய அளவில் பந்து வீச்சு அமையாவிட்டாலும் சமநிலை முடிவுக்கு கொண்டு செல்லக் கூடிய அளவு பந்து வீச்சு. முதற்ப் போட்டியிலும் துடுப்பாட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என்று சொல்லவதற்கு இல்லை. பந்து வீச்சு சிறப்பாக அமைந்ததன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. இலங்கை அணி துடுப்பாட்டத்தை இன்னும் சரி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிடின் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது கஷ்டம் என்ற நிலையை தரும்.


குமார் சங்ககார கை விட்டது இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பை தந்தது. 4 இன்னிங்சில் 35 ஓட்டங்கள் மாத்திரமே. அதிலும் இரண்டு தடவைகள் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

டில்ஷான் ஒரு நல்ல ஆரம்பத்தை தானும் தரவில்லை. இலங்கை அணியின் நம்பகரமான டெஸ்ட் போட்டி வீரரான திலான் சமரவீர பெரியளவில் கை கொடுக்கவில்லை. புதிய வீரர்களும் முற்றாகவே ஏமாற்றினர். துடுப்பாட்டம் முழுமையாக கைவிட இலங்கை அணியால் தொடரை சமப்படுத்தவே முடிந்தது. முதற்ப் போட்டியில் மஹேல ஜெயவர்தன பெற்ற 180 ஓட்டங்கள் மூலமாகவே இலங்கை அணி வெற்றி பெற முடிந்தது. இல்லாவிட்டால் முதற்ப் போட்டியும் அதோ கதிதான். இரண்டாவது போட்டியிலும் அவரே துடுப்பாட்டத்தில் சாதித்தவர். இலங்கை அணி தன் டெஸ்ட் எதிர்காலம் பற்றி நிச்சயமாக யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் டில்ஷானின் ஆரம்பம்? ஆரம்ப ஜோடி என்பன நிச்சயம் யோசிக்கப் படவேண்டியுள்ளது.


மறு புறத்தில் இங்கிலாந்து அணி. உண்மையில் நல்ல பெறு பேறு, நல்ல மீள்வருகை. நான்கு தொடர்ச்சியான தோல்விகளின் பின்னர் வெற்றி. தொடரை சமப்படுத்தியது. உப கண்ட ஆடுகளங்கள், ஆசிய ஆடுகளங்கள் என்றால் இங்கிலாந்து அணிக்கு வயிற்றில் புளியை கரைப்பது போன்று இருக்கும். அந்த நிலைமையில் அவர்களின் பெறுபேறு பாராட்டப் படவேண்டியது. குறிப்பாக பந்து வீச்சு. இலங்கையில் வைத்து இலங்கை அணியின் நாற்பது விக்கெட்களையும் தகர்த்தது என்பது பெரிய விடயமே. அதுதான் வெற்றிக்கான முக்கியமான காரணியாகவும் இருந்தது. துடுப்பாட்டத்தில் எல்லோரும் பிரகாசிக்காவிட்டலும் கெவின் பீற்றர்சன், ஜொனதன் ட்ராட், அலிஸ்டயர் குக் ஆகியோர் நல்ல முறையில் பிரகாசித்தனர். நல்ல சகலதுறை பெறு பேறு அவர்களுக்கு சமநிலையான முடிவை தந்தது.

இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் இலங்கையில் சமநிலையில் தொடர் நிறைவடைந்தமை இதுவே முதற் தடவையாகும். 12 வருடங்களின் பின்னர் இலங்கையில் வைத்து இங்கிலாந்து அணி ஒரு டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது. 2000ஆம் ஆண்டு தொடரை கைப்பற்றிய வேளையில் பெற்ற வெற்றியே அந்த வெற்றி ஆகும். எனவே இலங்கை அணி தம் வசம் வைத்து இருந்த ஆதிக்கத்தை இழந்துள்ளது. இங்கிலாந்து அணி முதல் தர அணியாக இருக்க பொருத்தமான அணி என்றும் சொல்லக் கூடியதாகவும் உள்ளது.


இரண்டு அணிகளுக்குமிடையிலான முதற்ப் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஆரம்பமானது. காலி மைதானத்தில் இடம்பெற்ற முதல் சர்வதேச போட்டி இந்த இரண்டு அணிகளுக்குமிடையில் என்பது நீங்கள் அறிந்ததே. நான்கு நாட்களுக்குள் நிறைவடைந்த இந்த போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி - மஹேல ஜெயவர்தனவின் போராட்டமான 180 ஓட்டங்களுடன் சமாளிக்கக்கூடிய 318 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்த கூடிய ஓட்டங்கள் 27, தினேஷ் சந்திமால் பெற்றது. 15/3 என்ற மோசமான நிலை. பின்னர் 67/4 என்ற நிலை. இவற்றை தாண்டி தனித்து நின்று துடுப்பெடுத்தாடிய மஹேல, உண்மையில் பாராட்டுதலுக்கு அப்பாற்பட்டவர். இந்த சதம் அவருடைய 30ஆவது சதமாகும். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் 5 விக்கெட்கள். தன்னுடைய அறிமுகப் போட்டியில் விளையாடிய சமிட் பட்டேல் 2 விக்கெட்டுகள். பதிலழித்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை இலங்கையின் சுழல்ப் பந்து வீச்சாளர்கள் இலகுவாக தகர்த்தனர். 193 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். இயன் பெல் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். ரங்கன ஹேரத் 6 விக்கெட்கள். சுராஜ் ரண்டீவ் 2 விக்கெட்கள். வேகப் பந்து வீச்சாளர்களுக்கு இரண்டு விக்கெட்கள். இந்த கட்டுப்படுத்தலே இலங்கை அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.


இந்த நிலையைப் பார்த்ததும் இலங்கை அணிக்கு இலகுவான வெற்றி எனத்தான் எல்லோரும் நினைத்து இருப்பார்கள். இரண்டாவது இன்னிங்சில் நிலை மாறியது. 214 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி. பிரசன்ன ஜெயவர்தன ஆடமிழக்காமல் 61 ஓட்டங்கள். திலான் சமரவீர 36 ஓட்டங்கள். 14/3, 41/4, 72/5 என்ற நிலைமைகளில் இருந்து இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றது பெரிய விடயமே. இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் கிரேம் சுவான் 6 விக்கெட்கள். பனேசர் 2 விக்கெட்கள். தான் வைத்த பொறியிலேயே மாட்டுப்பட்ட கதையாக இலங்கை அணியின் நிலை மாறிப்போனது. இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 340 ஆக அமைந்தது. 2 1/2 நாட்கள் மீதமாகவுள்ள நிலையில் வெற்றி பெறலாம் என்ற நிலை. அதை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடினாலும் இரணடாவது இன்னிங்சிலும் சுழல்ப் பந்து வீச்சாளர்களிடம் மாட்டிகொண்டனர். துடுப்பாட்டத்தில் ஜொனதன் ட்ராட் சிறப்பாக செயற்பட்டு 112 ஓட்டங்களைப் பெற்ற போதும் நல்ல இணைப்பாட்டங்கள் கிடைக்காமை தோல்வியடைய வேண்டிய நிலையை உருவாக்கியது. ரங்கன ஹேரத் மீண்டும் 6 விக்கெட்கள். சுராஜ் ரண்டிவ் 4 விக்கெட்கள். ரங்கன ஹேரத் 171 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்களை இந்த போட்டியில் கைப்பற்றினார். இதுவே ஒரு போட்டியில் அவர் பெற்ற சிறந்த பந்து வீச்சு பெறுதியாகும். போட்டியின் நாயகனும் அவரே.


முதற்ப்போட்டியில் வெற்றி. இரண்டாவது போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் போட்டியை சமப்படுதினால் போதும் என்ற நிலை. ஆனால் நிலைமை மாறிப் போனது. இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடி 275 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. வழமையான ஆரம்ப கதைதான் இந்த போட்டியிலும். 30/3 என்ற நிலை. மஹேல ஜெயவர்தன, திலான் சமரவீர ஆகியோர் 124 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். 54 ஓட்டங்களுடன் திலான் சமரவீர ஆட்டமிழந்தார். அடுத்து மஹேல ஜெயவர்தன 105 ஓட்டங்களைப் பெற்றவேளையில் ஆட்டமிழந்தார். முதற்ப் போட்டியில் உபாதை காரணமாக விளையாடாத அஞ்சலோ மத்தியூஸ் 57 ஓட்டங்களைப் பெற்றார். தினேஷ் சந்திமாளின் இடத்தையே அவர் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் கிரேம் சுவான் 4 விக்கெட்கள். ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்கள். இங்கிலாந்து அணி தன்னுடைய சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் கெவின் பீற்றர்சன் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 151 ஓட்டங்களைப் பெற்றார். அலிஸ்டயர் குக் 94 ஓட்டங்கள். ஜொனதன் ட்ராட் 64 ஓட்டங்கள். அன்று ஸ்ட்ரோஸ் 61 ஓட்டங்கள். நல்ல ஆரம்பம். இங்கிலாந்து அணி 460 ஓட்டங்களைப் பெற்றது. ரங்கன ஹேரத் ஹட்ரிக் முறையில் 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். டில்ஷான் 2 விக்கெட்கள். இலங்கை அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்சில் 278 ஓட்டங்களைப் பெற்றது. இந்த தொடரைப் பார்க்கும் போது இலங்கை அணியால் பெறக்கூடியது இவ்வளவுதான் போல் தெரிகிறது. மஹேல ஜெயவர்தன 64 ஓட்டங்கள். திலான் சமரவீர 47 ஓட்டங்கள். அஞ்சலோ மத்தியூஸ் 46 ஓட்டங்கள். பந்துவீச்சில் கிரேம் சுவான் 6 விக்கெட்கள். இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு வெறும் 94 ஓட்டங்கள். இரண்டு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அலிஸ்டயர் குக் 49 ஓட்டங்கள். கெவின் பீற்றர்சன் 42 ஓட்டங்கள். இருவரும் ஆட்டமிழக்காமல் இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றனர். போட்டியின் நாயகனாக கெவின் பீற்றர்சனும், போட்டி தொடர் நாயகனாக மஹேல ஜெயவர்தனவும் தெரிவாகினர்.


இந்த தொடரில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தவர்கள்
மஹேல ஜெயவர்தன          2    4    354    180    88.50    2    1
கெவின் பீற்றர்சன்                  2    4    226    151    75.33    1    0
ஜொனதன் ட்ராட்                    2    4    193    112    43.66    1    1
அலிஸ்டயர் குக்                     2    4    157    94      52.33    0    1
திலான் சமரவீர                        2    4    157    54    39.25     0    1
(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, சதம், அரைச்சதம்)


இந்த தொடரில் பந்துவீச்சில் பிரகாசித்தவர்கள்
ரங்கன ஹேரத்                        2    341/19        74/6    171/12    17.94     37.5      3
கிரேம் சுவான்                          2    355/16        82/6    181/10    22.18      45.4      2
ஜேம்ஸ் அன்டர்சன்              2    196/9          72/5    98/5          21.77    48.6      1
சுராஜ் ரண்டிவ்                          2    223/7          74/4    100/6        31.85    61.00    0
(போட்டிகள், ஓட்டங்கள்/விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி ஸ்ட்ரைக்  ரேட், 5 விக்கெட்கள்)

"இலங்கை - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty