வியாழக்கிழமை, 18 டிசெம்பர் 2014

இறுதிப்போட்டியில் முரளி விளையாடுவார்: பயிற்றுநர்

 

முத்தையா முரளிதரனின் உடல் திடநிலை குறித்து கவலைகள் நிலவிய போதிலும் நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் அவர் விளையாடுவார் என இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ட்ரவோர் பெய்லீஸ் தெரிவித்துள்ளார்.

39 வயதான முத்தையா முரளிதரன் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியின்போது கணுக்கால், முழங்கால், கவட்டுப் பகுதி என உடலின் பல பகுதிகளில் உபாதைகளுக்குள்ளானார்.

அரையிறுதிப் போட்டியின் போது முரளிக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை பலரால் முன்வைக்கப்பட்டது. எனினும் அவர் அப்போட்டியில்  சிறப்பாக பந்துவீசி இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஆனால் அவர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று வியாழக்கிழமை மும்பை வாங்கெட் அரங்கில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஏஞ்சலோ மத்தியூஸும் காயமடைந்துள்ளார். அதனால் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், சுழற்பந்துவீச்சாளர் சுராஜ் ரந்தீவ் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்திய அணியுடனான உலகக் கிண் இறுதிப்போட்டியில் முரளி விளையாடுவார் என அணியின் பயிற்றுநர் பெய்லீஸ் கூறியுள்ளார்.

முரளி விளையாடுவதற்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. அவர் அரையிறுதிப்போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசினார். அவர் அப்படியான குணவியல்பு கொண்ட அவர் அசௌகரியமான நிலையிலும் விளையாடுவார்' என அவர் கூறினார்.

இப்போட்டியுடன் முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

Views: 7401

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.