ஜெனீவா வாக்கு சாதித்தது என்ன?
28-03-2012 02:18 PM
Comments - 4       Views - 1063
இலங்கையில் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பேற்றல் குறித்த ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் வாக்கெடுப்பு முடிந்து நாட்கள் ஓடிவிட்டன. ஜெனிவாவில் நடந்த வாக்கெடுப்பின் முடிவு இலங்கைக்கு எதிராக அமைந்தது என்னவோ உண்மை. ஆனால், அந்த முடிவு எதனை சாதித்துவிடமுடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வாக்களிக்கப்பட்ட பிரச்சினை கடந்த காலத்தை குறித்தது. வாக்களிப்பு நிகழ்கால நிதர்சனம். ஆனால், அதன் தாக்கமோ எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய செயல்கள் மற்றும் செயல்படுத்தப்படவேண்டிய முடிவுகளை ஒட்டிய விடயம்.

இலங்கை அரசை பொறுத்தவரையில், மனித உரிமை அவையின் தீர்மானம் தங்களை பாதிக்கவில்லை என்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அப்படியென்றால், அந்த தீர்மானத்தை தோற்கடிக்க ஏன் பகீரத பிரயத்தனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. அந்த தீர்மானம் குறித்து விட்டேந்தியாக இருந்திருந்தால் அதுவே ஒரு சிறந்த அரசியல் யுக்தியாக இருந்திருக்கும். இப்போதுபோல், 'சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்' என்ற கதையாக நிலைமை மாறி இருக்காது. என்றாலும், உள்நாட்டு அரசியல் நிலைமைகளை வைத்து நோக்கும் போது, அரசின் தற்போதைய நிலைப்பாடு சிலகாலம் தொடரும் என்று நம்பலாம். அதற்கு அப்பால் சென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் தலைமை இதே நிலைப்பாட்டில் தொடருமானால் அதன் விளைவுகளும் அரசு எதிர்பார்ப்பதற்கு மாறாக அமையலாம்.

களநிலைகள் என்னவோ அத்தகைய சூழ்நிலையைதான் சுட்டிக்காட்டுகிறது. ஜெனீவா வாக்கடுப்பு 'வெற்றிக்கு' பின்னால், புலம்பெயர்ந்த தமிழின தலைவர்களும் தங்களுடைய எதிர்கால யுக்திகளுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பிப்பார்கள். அவர்களது எதிர்கால அரசியல் தேவைகள், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு சுமத்துவதோடு நின்றுவிடுமா, அல்லது பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் பெற்றுதர முடியுமா, அல்லது அமைதிப் போராட்டங்கள் மூலம் ராஜபக்ஷ அரசை நிலைகுலைய வைப்பதா, அல்லது 'தனிநாடு' கோரிக்கையை ஒட்டியே இருக்குமா என்பவற்றை பொறுத்தே, அவர்களது அடுத்தகட்ட வியூகங்கள் இருக்கும். இந்த பின்னணியில், இனப்போர் முடிந்துவிட்ட காலம் தொட்டே, அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளையும் அரசியல் யுக்திகளையும் விட்டுவிடவில்லை என்பது கண்கூடு.

இதன் தாக்கம், இலங்கையில் மட்டுமல்ல, இந்தியாவிலும் இருக்கும். குறிப்பாக, தமிழ் நாட்டில், ஜெனிவா வாக்ககெடுப்பிற்கு பின், தமிழின குழுக்களின் குரல் அதீதமாகவே இருக்கும். குறிப்பாக, புலம்பெயர்ந்த தமிழர்களின் வியூகத்திற்கு ஏற்ப, தமிழக குழுக்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் யுக்திகளையும் அமைத்துக் கொள்ளும். இதுவே, முக்கிய திராவிட கட்சிகளான, ஆளும் அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளினுள்ளும் தமிழினம் குறித்த போட்டி அரசியலுக்கு தூபம் போடும். இது தான் கடந்தகாலம் உணர்த்தும் உண்மை.

ஜெனீவா தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்ததற்கு தானே காரணம் என்று அஇஅதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா முரசு அடித்தார். அதனால் தான் என்னவோ, திமுக தலைவர் கருணாநிதி 'தமிழ் ஈழம்' குறித்து தனது மறந்துபோன கருத்துகளை வெளியிட்டார். ஒரு விதத்தில், இலங்கையில் இனப் போர் முடிந்தகாலம் தொட்டு அவருக்கு எதிரான மன உளச்சலை மறக்கடிப்பதற்கான முயற்சியின் அடுத்தகட்டமாகவும் கொள்ளலாம். அதனால் தானோ என்னவோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், இலங்கையில் உள்ள களநிலைகளை அறிந்துகொள்ளாமல் தமிழ்நாட்டு தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் சுமந்திரன் முன்வைத்த கோரிக்கை, தமிழ்நாட்டு தலைவர்களை மட்டும் கருதி சொல்லப்பட்டதாக முடிவு எடுத்துவிட கூடாது. இனப்போர் முடிந்தகாலம் தொட்டே, கூட்டமைப்பு தலைமை, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, ஒன்றுபட்ட இலங்கையின் உள்ளேயே இருக்கவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறது. அந்த நிலைப்பாடு நம்பிக்கை அளித்ததால் தான், ராஜபக்ஷ தலைமையும், கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அந்த பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுத்தடிக்கப்படுவதற்கு, இருசாராரின் இடையே உள்ள இயற்கையான கருத்து வேறுபாடுகள் ஒருகாரணம். திடீரென்று மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் குரல் எழுப்பியது மற்றொரு காரணம். ஜெனிவா முயற்சிகள் தொடங்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே, புலம்பெயர்ந்த இலங்கை தமிழர் குழுக்களின் அதீதமான அரசியல் முயற்சிகள் எங்கே தனிநாடு கோரிக்கை மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட முயற்சிகளுக்கு, உள்நாட்டிலேயே தங்கிவிட்ட தமிழ் மக்களிடையேயும் அ10தரவு இருக்குமா என்ற இலங்கை பாதுகாப்பு அமைப்புகளின் கவலைகளும் பிறிதொரு காரணம்.

எது எப்படியோ, சுமந்திரனின் சென்னை அறிவிப்பு, தமிழ் நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினையை வைத்து போட்டி அரசியல் மற்றும் தீவிரவாதமான கொள்கை அரசியல் செய்யும் கட்சிகள் மற்றும் குழுக்களை சரியான தருணத்தில் அம்பலப்படுத்தி உள்ளது. அவர்களில் பலரும், இலங்கை அரசியலின் உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல், சிங்கள எதிர்நிலை அரசியல் செய்யும் தமிழ் கூட்டமைப்பு தலைமையின் சூஷ்மங்களையும் அறிந்துகொள்ளாமல், புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் பிரசார கர்தாக்களாகவே இருந்துவந்துள்ளனர்.

கூட்டமைப்பின் மிதவாத அரசியலிலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஏன், அடிக்கடி தமிழ்நாடு வந்து செல்லும் கூட்டமைப்பு தலைமையை அவர்களில் பலரும் அண்மை காலங்களில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பார்களா? என்பதும் கூட சந்தேகமே. விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை என்றால் பிறகு 'இன பிரச்சினை' குறித்த அவர்களது அரசியல் முடிவுகள் இலங்கை தமிழர்களில் யாருடைய அறிவுரையை ஒட்டி அமைந்திருக்கிறது என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அது, 'தனிநாடு' கோரிக்கையை கைவிடாத புலம்பெயர்ந்தோரின் கருத்துக்களின் வெளிப்பாடாகவே இருந்தால், அது களநிலைகளின் பிரதிபலிப்பாக இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவே ஆகும்.
ஜெனிவா வாக்குக்கு பின்னால், இலங்கை அரசில் ஒருசிலரும் சிங்கள பேரினவாதிகளும், நாட்டின் அரசியலில் காணாமல் போய் வரும் இந்தியாவை எதிர்ப்பது என்பதை தனது அறிவிக்கப்பட்ட கொள்கையாகவே கொண்டு அரசியல் செய்யும் இடதுசாரி, சிங்கள-பொளத்த ஆயுதக் குழுவாக அவதாரம் எடுத்து அரசியல் கட்சியாக உருமாறி உள்ள ஜே.வி.பி. இந்திய எதிர்ப்பு அரசியலை மீண்டும் கையில் எடுப்பது, தடுக்க முடியாததாகிவிடும். அதுபோன்றே, பேரினவாத பிரச்சினைகளுக்கு அப்பாற்சென்று, இலங்கை பாதுகாப்பு குறித்த நாட்டின் இராணுவத்தின் கருத்தும் நிலைப்பாடும். இடைபட்டகாலத்தில் தமிழினத்தை அவர்கள் சந்தேக கண்ணுடனேயே பார்ப்பார்கள். ஜெனிவாவாக்கு, புலம்பெயர் தமிழர்களின் மீதும் அதன் காரணமாக நாட்டில் வாடும் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் பாதுகாப்பு அணிகளின் இந்த சந்தேகத்தை அதிகரிக்கவே செய்யும்.

தற்போது. இந்தியாவின் ஜெனிவா வாக்கை, தமிழக அரசியல் நிர்பந்தங்களோடு தொடர்புபடுத்தி, ராஜபக்ஷ தலைமை ஆசுவாகமடைந்துள்ளதாகவே கருத முடிகிறது. ஆனால், அவர்களை நோண்டிவிடும் முயற்சியை அங்குள்ள சிங்கள பேரினவாதிகளில் பலரும் அத்தனை எளிதாக கைவிட்டுவிடமாட்டார்கள். அவர்களை சீண்டிப் பார்த்து, நோண்டிப் பார்த்து, நாட்டில் உள்ள அப்பாவி தமிழர்களின் வாழ்வை மீண்டும் ரணகளம் ஆக்கும் முயற்சியையும் புலம்பெயர் தமிழர்களின் ஒருசாரார் அத்தனை எளிதாக கைவிட்டுவிடமாட்டார்கள்.

மற்றபடி, ஜெனீவா வாக்கெடுப்பின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, இலங்கை மீது, ஐநா சபை நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், அந்த முயற்சிக்கு பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் இருவரான சீனா மற்றும் ரஷ்யா ஆகியோரின் ஒப்புதல் கிடைக்காது என்று ஏற்றுக்கொள்ளலாம். ஜெனிவா வாக்களிப்பில் வெற்றிபெறுவதற்கே 'தண்ணி' குடித்த அமெரிக்கா, ஐநா பாதுகாப்பு சபையையும் தாண்டி பொதுக்குழுவில் இது குறித்து வாக்களிப்புக்கு கோரிக்கை முன் வைக்கும் நிலைமை உருவானால், அதில் வெற்றிபெற கர்ணம் போடவேண்டிவரும். அவ்வாறு வெற்றிபெற்றாலும், இலங்கைமீது விதிக்கப்படும் பொருளாதார தடைகள் போன்ற தண்டனைகளால் அதிகமாக பாதிக்கப்படப்போவது, சிங்களவர்களா, அல்லது தமிழர்களா?

அதுபோன்றே போர்க் குற்றங்கள் குறித்து யாரேனும் சர்வதேச சமூகத்தால் தண்டிக்கப்படும் சூழல் உருவானால், அதன் தாக்கமும் தாக்குதலும் அப்பாவி தமிழர்களை மிகமோசமாக பாதிக்குமா இல்லையா? அப்படியென்றால், யாருக்கு பயன்படப்போகிறது ஜெனிவா வாக்கு?
"ஜெனீவா வாக்கு சாதித்தது என்ன?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (4)
FAR2CO 28-03-2012 10:44 PM
புரியுமா இந்திய அரசியல்வாதிகளுக்கு விளங்காது! கட்டுரை எப்படித்தான் இருக்கவேண்டுமென்று மற்ற தமிழ் ஊடகவியல் அறிவாளிகள் விளங்கி மக்களை குழப்பாமல் இருந்தால் சரியாய் இருக்கும்.
Reply .
0
0
jeyarajah 28-03-2012 10:57 PM
ஐயா, இது மனித சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி.. இது தமிழனுக்கோ ,சிங்களவனுக்கோ கிடைத்த வெற்றி அல்ல.
கருணாநிதியின் கனவில் சுமத்திரன் தலையிட்டு எதிர்ப்பை தேடி ஆவது ஒன்றும் இல்லை.
அமெரிக்கா பிரேரணையைச் சமரப்பித்தது. அதை பிழை என யாரும் சொல்லவில்லை. கால அவகாசம் கொடுக்கும் படி தானே எல்லா நாடுகளும் கேட்டன. இன ஒற்றுமைக்காக பயந்து அழிந்த எம் இனத்துக்கு நடந்த கொடுமையை நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?. இந்தியா அமெரிக்க இப்போ எமது பக்கம். அதுவே போதும்.
Reply .
0
0
kokuvilan 29-03-2012 12:11 AM
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறைகட்டுமே.. ஒரு கடவுள் இருக்கிறான்.. கண் திறப்பான்...
Reply .
0
0
Mohammed Hiraz 29-03-2012 01:47 AM
மனதில் பட்டதை மிக எதார்தமாக எழுதியமைக்கு மிக்க நன்றிகள் .சிலருக்கு இந்த கருத்து பிடிக்ககூடும். பலருக்கு இதில் உடன்பாடில்லாமல் இருக்க கூடும். ஆனால் கண்டிப்பாக அடுத்த இருபது வருடங்களின் பின் படிக்க கூடிய இரு ஆய்வாளருக்கு இந்த கட்டுரை குறித்து இந்த கால அரசியல்வாதிகள் கிஞ்சித்தும் கவனம் எடுக்காதது அவருக்கு மிக பெரிய ஆச்சரியமான விடயமாக தென்படும்!!!
Reply .
0
0
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty