2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சிறுகதையல்ல நிஜம்...

George   / 2016 ஜூன் 05 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணப்பொதி
பாதி நிறைந்த வயிறு
விரிகிற கனவு ... இவற்றோடு நான்
இசைத்துறையில் சாதித்துவிடவேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு கொழும்பில் தனியாக வந்திறங்கியிருக்கிறேன் . கொழும்பு .. பொய்யர்களும் காசு பறிப்பவர்களும் சூழ இருக்கும் ஆபத்தான மாநகரம்  என்ற விதை மனத்தில் விதைக்கப்பட்ட விருட்சமாக நின்றிருந்தேன். நண்பனின் வாடகைவீட்டு விலாசம் தாங்கலாக , கைத்தொலைபேசி பற்றி கேட்டுமட்டுமே அறிந்திருந்தவனாக நின்றிருந்த என்னை கவனித்திருக்கவேண்டும் அந்த முச்சக்கரவண்டி சாரதி.எங்கு போகவேண்டுமென்று அவர் சிங்களத்தில் கேட்டார். சிங்கள மொழி அப்போது எனக்கு ஓரளவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும், பேசுவதில் சிக்கலாகவும் இருந்தது. எனக்குத்தெரிந்த விதமாக வெட்டி வெட்டி சொன்னேன். அதை அவர் ஒட்டி ஒட்டி புரிந்து கொண்டார் போலும். விலாசத்தை நீட்டினேன். அந்த இடம் அவருக்கு  நன்றாக தெரிந்த இடமாகவே இருந்திருக்கும் என்பதை அவரது முகபாவனை காட்டியது. மூன்று பேருந்துகள் மாறிப்போகவேண்டுமென நண்பன் கூறியது நினைவுக்குவர, விலை பேசிக்கொள்ளாமலேயே சிறு தயக்கத்துடன் உள்ளே எறியமர்ந்தேன் . வண்டியும் கிளம்பியது. வாகன நெரிசல், இரைச்சல் , புகை என்பன என்னை ஒவ்வாமை சார்பாக ஓரம்கட்டியது . சிக்கலான பாதை , சாரதியின் சம்பாஷனை .. தலையை ஆட்டியவனாக இடத்தை அடைந்தேன்.என் வருகையை எதிர்பார்த்திருந்த நண்பன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கூலியை கொடுத்துவிட்டு ' எப்படி கொழும்பு ' என்றான். 'அச்சிங்' என்ற எனது தும்மல் ஒலியே அதற்கு பதிலாக அமைந்தது. சிரித்துக்கொண்டே வீட்டினுள் நுழைந்தோம். நான் சென்றிறங்கிய நேரம் மாலையையும் தாண்டிவிட்டது. உணவை உண்டுவிட்டு உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை

 நண்பன் வேலைக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது , நுளம்புகளின் வீர விளையாட்டின் விளைவுகள்  என் உடலெங்கும் சிவப்பாக தடித்துக்காணப்பட்டன .
' என்ன மச்சான் இது ' நான்
' இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா ' நண்பன்
' அதுக்காக ஒரு மனிஷன இப்படியா பண்றது ' நான்
' ஹி ஹி ஹி இன்னிக்கு வேலை விட்டு வரும் போது நுளம்பு வலையோடு வாறன் மச்சான் , சாப்பாடு முன்னால கடையில வாங்கி சாப்பிடு, உன்ற பாட்டு சீடி யை  நாளைக்கு ரேடியோ ஸ்டேஷன்களுக்கு கொண்டு போய்குடுப்போம் , நீ இன்னிக்கு ரெஸ்ட் எடு ஓகே டா ' என்று கூறி விடைபெற்றான் நண்பன்.

மூடியிருந்த ஜன்னலை திறந்து வெளியே பார்த்தேன். கொழும்பிலிருந்து சற்று வெளிப்புறப்பகுதி இது என்பதால் , நாம் இருந்த வீட்டுக்குப்பின்புறமாக பற்றைகளும் பெரிய வடிகால் காண்  ஒன்றும் அதற்கு அடுத்து சேரிவீடுகளும்  தென்பட்டன. இங்கே சராசரி வருமானத்தில் இப்படியான இடம்தான் பெறக்கூடியதாக இருக்க வேண்டுமென அப்போது உணரக்கூடியதாக இருந்தது.

காலையை உணவின்றி கடத்திவிட்ட எனக்கு மதியஉணவு அவசியமாக தேவைப்பட்டது. வெளியே சென்று உணவுப்பொதியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கதவருகே வந்தபோதுதான் அந்த வயோதிபரை முதன் முதலாக பார்க்கக்கிடைத்தது. கந்தலான சட்டை. முழங்கைவரை மடிக்கப்பட்டிருந்தாலும் அவை நேர்த்தியாக இல்லை. சட்டைப்பையில் ஒரு பழைய புகைப்படம். மடித்துக்கட்டிய பழைய சாரண். கையில் ஒரு மண்வெட்டி.அநேகமான கிராமவாசிகளையொத்த முகசாயல், சொட்டை விழாத அடர்த்தியில்லாத தலைமயிர் . குறுகுறுவென பார்வை. ஏதோ  முணுமுணுத்துக்கொண்டு பற்றைகளையும் புற்களையும் கொத்திக்கொண்டும், குப்பைகளை தீயிட்டுக்கொளுத்திக்கொண்டுமிருந்தார். சிறிது நேரம் அவரை வேடிக்கை பார்த்தவனாக நின்றிருந்த நான் பிறகு  உள்ளே சென்றுவிட்டேன் .

மறுநாள் எனது பாடல்களடங்கிய இறுவெட்டை வானொலிகள் சிலவற்றில் கையளித்துவிட்டு மீண்டும் நண்பனோடு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மாலைமங்கிக்கொண்டிருந்தது . கொழும்பு நகர்போலல்லாது , நாமிருந்தபகுதியும் சூரியன் தன் பிரகாசத்தைக்குறைத்துக்கொண்டு மறைந்துகொண்டிருந்த விதமும் எனக்கு, எனது ஊரையே நினைவுக்கு கொண்டுவந்தது. மீண்டும் அதே வயோதிபர் , அதே போன்ற  செயலுடன் எமது வீட்டுக்கு சற்று தொலைவில் .
' யாருடா மச்சான் அவரு?' என நான் கேட்க
' அது ஒரு லூசுடா ... இப்படித்தான் எதையாவது கொத்திக்கொண்டும் பற்றவைத்துக்கொண்டும் திரியும் ' என்றான் என் நண்பன்.
சிறுவயது முதலே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற பழக்கமுள்ள எனக்கு , இந்த வயோதிபர் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

சிலநாட்கள் கழிந்தன.

மீண்டும் அதே வயோதிபரை காணக்கிடைத்தது. அப்போதும் அவர் பற்றைகளை  கொத்திக்கொண்டும், தீமூட்டிக்கொண்டும் தான் இருந்தார். அவர் மூட்டிய தீயின் சுவாலை, புகையை அதிகளவாக வெளியேற்றிக்கொண்டிருந்தது. அதற்கு அருகிலிருந்த வீட்டுப்பெண்மணி இந்த புகையை சகித்துக்கொள்ளமுடியாமல் வெளியே வந்து திட்டிவிட்டுபோனாள் . 'இவருக்கு இதுவே வேலையாகிபோய்விட்டது' என்பது போலவே அது இருந்திருக்க வேண்டும்.அவரிடம் சென்று பேசக்கூடிய இடமாக அது இருக்கவில்லை.

இன்னொரு சந்தர்பத்துக்காக காத்திருந்தேன். அப்படியொரு நாள்  வந்தது. இம்முறை எப்படியாவது அவரிடம் பேசிவிடவேண்டுமென்று அவரருகே சென்றேன். சிங்கள மொழி பேசக்கூடியவர் போலவே தோன்றியதால், எனக்குத்தெரிந்த சிங்களத்தில் பேசத்தொடங்கினேன்.

' ஐயா என்ன செய்றிங்க ? ' நான்
' வேலை வேலை ... இனி யாரும் சாகக்கூடாது ' என்று பதிலாக மறுமடியும் மறுபடியும் கூறிக்கொண்டே புற்களை கொத்திக்கொண்டிருந்தார்.
' யாரு சாகக்கூடாது ' என்றேன்
' எல்லாரும் தான் ' என்றார். ஆனாலும்  என்முகத்தை அவர் பார்த்துப்பேசவே இல்லை.
' சாப்பிடுறீங்களா  ? ' என்று கேட்டுக்கொண்டே பையிலிருந்த மரக்கறி ரொட்டியை நீட்டினேன். உடனே என்னை ஒருகணம் பார்த்து விட்டு அதை வாங்கி உண்ணத்தொடங்கினார் .

அவரது நடவடிக்கை  சிறுபிள்ளைத்தனமாகவே இருந்தது. உண்டுமுடித்த பின் போத்தல் தண்ணீரை மடமடவென குடிக்கலானார். மீண்டுமொருமுறை என்னை பார்த்துவிட்டு குப்பைகளை தீமூட்டத்தொடங்கினார்.அவை கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த போதே அருகிலிருந்த சாக்கடையில் இறங்கி அடைபட்டிருந்த கழிவுகளை வெறுங்கையால் அள்ளி வெளியேற்றினார். இந்த செயல்கள் பார்பவர்களுக்கு கிறுக்குத்தனமாக தெரிந்தாலும், எனக்கென்னவோ அது  அவரின் ஆழ்மனத்தின் தீராத வடுவையே படமாக்கிக்காட்டிக்கொண்டிருந்தது.

இப்படியாக இருக்கும்போது , வயதான பெண்மணியொருவர் தூரத்திலிருந்து சத்தமிட்டவாறே எம்மை நோக்கி வந்துகொண்டிருந்தார். வந்தவர் ஒருமுறை என்னை பார்த்துவிட்டு அந்த வயோதிபரை நோக்கிச்சென்றார்.
' இந்த மனிஷனுக்கு சொல்லி விளங்காதா? இத்தனை வருடமாக இப்படியே இவருக்கு பின்னால திரியிறத விட நான் செத்துப்போயிருக்கக்கூடாதா? ' என்பதுபோல் அழுகையும் கடுகடுப்பும் கலந்த குரலில் கூறிக்கொண்டே அவரை சாக்கடையில் இருந்து வெளியே இழுத்து எடுத்தார். வெளியே வந்தவர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது  தனது மண்வெட்டியை தேடத்தொடன்கினார்.

' வாங்க சாப்பிட போவோம் ' என்று அந்த பெண் கூற
' சாப்பிட்டாச்சி சாப்பிட்டாச்சி ' என்று கூறியவாறு மண்வெட்டியை எடுத்து கொத்தத்தொடங்கினார் . என்னையும் உணவுப்பொதியையும் ஒருமுறை நோட்டமிட்ட அந்த வயோதிபப்பெண்மணிக்கு அவர் ஏன் அப்படி கூறியிருப்பாரென  புரிந்திருக்க வேண்டும்.அதன் பிறகு அவருடன் நீண்ட சிங்கள வசனங்களில் பேசிக்கொண்டார் . அப்போது எனக்கு அது என்னவென்று அவ்வளவாக புரியவில்லை.

சிறிது நேரத்தில் நான் அந்த வயோதிபப்பெண்ணிடம் சென்றேன்.
' அம்மா இவருக்கு என்ன பிரச்சினை ' என்று கேட்டேன் .

அவரும் மனம் திறக்கலானார்.
மகன்! எங்கள் இருவருக்கும் திருமணமாகி இருபத்தைந்தாண்டுகள் ஓடிவிட்டன. திருமணமாகி ஐந்து வருடங்களில் பின்னரே  எங்களுக்கு ஆண் குழந்தையொன்று கிடைத்தது. இவருக்கு அந்த குழந்தை மீது அப்படியொரு பாசம். மகனை தூக்கிக்கொண்டு திரிவதும். மாரோடு சாய்த்து கதைகள் சொல்வதுமான  தந்தை மகன் உறவு , என்னையே  பொறாமைப்படவைக்கும் விதமாக இருந்தது. மகனுக்கு எட்டு வயதாக இருந்த போது ,  இவர் வேலை விடயமாக கொழும்பை விட்டு வெளியே சென்று தங்கவேண்டிய நிலையேற்பட்டது. அப்படி அவர் போன மூன்றாவது நாளிலிருந்து மகனுக்கு காய்ச்சல் ஆரம்பமானது . நானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கைமருந்துகளே கொடுத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒருவாரத்துக்கு மேலாகியும் அது குறைவதாக இல்லை. ஒரு நாள் காய்ச்சல் அதிகரித்து மகன் பேச்சு மூச்சின்றி விழுந்து விட்டான். உடனடியாக அருகிருந்தவர்கள் உதவியோடு  மகனை வைத்தியசாலைக்கு கொண்டுவந்து சேர்த்தேன்.

இதற்கிடையில் அவருக்கும் இந்த சேதியை அறிவித்துவிட்டேன். அவரும் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டார். மகனை தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைத்திருந்தார்கள். பெரிய வைத்தியர் வந்தார் . மகனை பரிசோதிப்பதற்கு  செல்லும் போது  அவரிடம் அழுது  புலம்பி , காப்பாற்றுமாறு கேட்டோம். மகனை சோதித்த அவர், மகனுக்கு மலேரியா காய்ச்சல் வந்திருப்பதாகவும், அது தீவிர நிலையை அடைந்துவிட்டதாகவும் கூறியதோடு, வீட்டை சுற்றிய இடங்களை சுத்தமாக வைக்கத்தெரியாதா? உங்கள் மகனின் இந்த நிலைக்கு நீங்கள் தான் காரணம்  என்று , சத்தமாக இவரைப்பார்த்து பேசிவிட்டு சென்றுவிட்டார். மறுநாளே தவமிருந்து பெற்றமகன் தவறிவிட்டான். மகன் இறந்து சிலகாலம், யாரோடும் பேசாமல் , சரியாக சாப்பிடாமல் தூங்காமலிருந்த இவர், பிறகு இப்படி மாறிவிட்டார். என்று கூறியதோடு அந்த பெண் வயோதிபரருகே சென்று , அவரது சட்டைப்பையிலிருந்த மகனும் அவரும் கட்டியணைத்த படியான புகைப்படத்தை என்னிடம் காட்டிய போது , என் கண்கள் குளமாகிவிட்டது .  

' இப்போது இருந்திருந்தா உங்க வயசில இருந்திருப்பார், ஏன் தெய்வம் எங்கள இப்படி சோதிக்கிதோ? ' என்று முடித்தபோது , என் கண்களின் குளம்,  அணை உடைத்த  வெள்ளமாய் எட்டிப்பார்த்துவிட்டது.
அந்த இருவரும் சென்று மறையும்வரை நான் அவ்விடத்திலேயே நின்றிருந்தேன்.
                             
இந்த சம்பவம் எனது நெற்றிக்கண்ணை திறந்துவிட்டது.
தெய்வம் ஏமாற்றிவிட்டதாக அந்த வயோதிபப்பெண்ணும் , தானேதான் இறப்புக்குக்காரணம் என அந்த சிறகொடிந்த தந்தையும் எண்ணும் நிகழ்வுக்கு நாமும் தானே காரணம்.

அவர் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றி சூழலை சுத்தமாக வைக்கவேண்டுமென எண்ணுவது , நம்  அனைவருக்கும்  மனநல குறைபாடுபோல தெரிகிறது. உண்மையில் அக்குறைபாடு , அவருக்கா? இல்லை எமக்கா?
எனக்குத்தெரிந்தது இந்த ஒரு நிகழ்வே

இன்னும் எத்தனை குணதாசவோ ? எத்தனை கந்தசாமியோ ? எத்தனை பீற்றரோ? எமக்குத்தெரியாமலே இந்த நிலையில் இருக்கலாம். ஏன் இதை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கும் இப்படியான நிலை ஏற்பட்டிருக்கலாம்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் நான் எனது சூழலை சுத்தமாகவே வைத்திருக்க முயற்சிக்கிறேன். கழிவுகள் சாக்கடையில் அடைபட்டு நிற்பதைக்கண்டால் ,  எனக்கென்ன என்று  சொல்ல இயலவில்லை. குப்பைகளை வீதியில் கண்டால் பார்த்தும் பாராததுபோல் போக  என்னால் முடியவில்லை. நான் மாத்திரம் இல்லை, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் , நான் இதையே ஏவுகிறேன். இன்று நான் ஒரு இசைக்கலைஞனாக மாறிவிட்டேன். தூய்மையான மனத்திலேயே  இசை பிறக்கிறது. இந்த இசை, வெளிச்சென்று ஒலிக்கும்  இடங்களும் தூய்மையானவைகளாக இருக்கவேண்டுமென்றே என் மனமும் விரும்புகிறது.

இதனை எழுதிக்கொண்டிருந்த போது  நான் அருந்திய நீரைச்சுமந்த, பிளாஸ்டிக் போத்தலை நான் இந்த கடற்கரையில் எறியப்போவதில்லை. அதை போடுவதற்கு ஒதுக்கிய இடத்தில் தான் போடப்போகிறேன். இயற்கையை நாம் பாதுகாத்தால், அது எம்மை பன்மடங்கு பாசத்துடன் பாதுகாக்கும்.

சூழலை பாதுகாப்போம்..
சூழல் மேல் காதல் கொள்வோம்..
இதை எம்மாக செய்வோம்
எம் சந்ததியினருக்காக செய்வோம்

இன்னும் என் கண்களில் மறையவில்லை அந்த வயோதிபரின் விம்பம்.
நான் சூழலுக்காக என்னை அர்ப்பணித்துவிட்டேன்
நீங்கள்???

-ஷஸ்னா ஷமீல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X