வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014

நல்லிணக்கம் இல்லாத மௌனங்கள்


உனது நல்லிணக்கம் இல்லாத மௌனங்களை
அடை காத்துக் கொண்டிருக்கும் வரை
உனக்கும் எனக்குமான
காதல் தீர்மான வரைபு
ஜெனீவா மேசையிலும் எட்டப்படாது

வேறு வழித்துணை இல்லாத நான்
எனதான காதல் வலயத்து துயரங்களை
சனல்- 4 போல
கூட்டிக் குறைத்தும் சொல்லவில்லையே

அதி பயங்கரமான
உனது மௌன வலயங்களில்
தடை செய்யப்பட்ட
என் காதல் பற்றி
ஐ.நா. வின் காதல் உரிமை பேரவைக்கு
ஒரு பிரேரணை சமர்ப்பிக்கப் போகிறேன்

ஒருவேளை
அமெரிக்காவின் அனுசரணை உனக்கிருந்தால்
எனதான காதல் பிரேரணையை
நீ தோற்கடித்தும் விடலாம் - ஆயினும்
தோற்கடிக்க முடியாது
உன்னோடு மௌனமாய் சமர் செய்கிற
எனது காதலை
நீ - சுயாதீனம் இழந்து
மூன்றாம் தரப்புகளுக்குள்
மூழ்கி இருக்கும் வரை
நமக்கான ஒருமைப்பாடு
சாத்தியமில்லை என்பது மட்டும் புரிகிறது

உனக்குள்ளே கற்றுக்கொண்ட
காதல் பாடங்களை
ஆணைக்குழு வைத்து ஆராய்ந்திட
திராணியில்லை எனக்கு

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்
நமதான காதல் போரில்
குற்றவாளி யாரென்பதை
அறிவிக்கத் தேவையில்லை

பிள்ளையும் கிள்ளி
தொட்டிலையும் ஆட்டுகிற
மூன்றாம் தரப்புகளை நிராகரித்து
என்னுடன் நல்லிணக்கத்துக்கு வா சகி

சுயாதீனம் மரித்துப் போகாத
இறைமை மிக்க காதல் தேசத்தில்
இதய சுத்தியுடன்  களிப்புறுவோம்

கவிதை ஆக்கம்:- எஸ்.ஜனூஸ்

Views: 3033

Comments   

 
-0 +1 # Ranja 2012-05-11 10:13
என்ன ஒரு புலமை. புல்லரிக்குது ஜனூஸ். கவிதை ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்ததுக்கள். உங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்.
Reply
 

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.