சமூக ஒன்றிணைப்பில் கூத்துக் கலை
03-04-2012 05:02 PM
Comments - 0       Views - 1320


பாரம்பரியக் கலைகள் என்ற வரிசையில் நாம் கூத்துக்கலையை பிரதானப்படுத்துவோம். கூத்துக்கள் சார்ந்த செயற்பாடுகளை மக்கள் தமது வாழ்க்கைச் செயற்பாட்டில் ஒரு விடயமாகவே பார்க்கின்றனர். இந்த கலையானது மனிதர்களை ஒன்றிணைத்து இயங்கச் செய்யும் ஓர் செயற்பாட்டு மையாமாக ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இருந்து வருகின்றது.

'கூத்தாட்டம்' என்று வெறுமனே வார்த்தைகளை விட்டு செல்பவர்களே எம்மில் அதிகம். கூத்து என்பது ஊரை கூட்டி நடு மத்தியில் ஆடும் சாதாரண செயற்பாடன்று. அதனை நிகழ்த்த வேண்டும் என்று நினைப்பது முதல் நிகழ்த்தி முடிப்பது வரை எத்தனை இழப்புகளை, விட்டுக்கொடுப்புகளை, தியாகங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது கூத்துக் கலைக்கென தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

தொழில் செய்து களைத்த மக்கள் மாலை நேரங்களில் ஒன்றுகூடி கோயிற் காலங்களின்போது தாம் கூத்தாட வேண்டும்மென்பது சார்ந்த உரையாடலை ஆரம்பிப்பர். இது தனி ஒரு முடிவல்ல. சமூகத்தவர் இணைந்த உரையாடலாக அமையும்.       

அதன்பின் இந்த கூத்தைதான் ஆடுவது என்று தீர்மானிப்பர். அக்கூத்தை எழுதி, வாசித்து, உரையாடல்கள் வடிவமைத்து, பின் அனைவரும் ஆடல், பாடல்களை சேர்ந்து பழகுவர். குறித்த ஒரு தினத்தில் பாத்திரத் தெரிவு என்கின்ற சட்டம் கொடுத்தல் நிகழ்வு இடம்பெறும்.

அதன்பின் சுமார் ஆறுமாத காலங்கள் தொடர்ந்து பழகி பின் கூத்தை ஒரு நல்ல நாளில் ஆலய வெளியில் களரிகட்டி அரங்கேற்றுவர்.இந்த கூத்து இரவு நேர கூத்துக்களாக அமையும். அதன் பின் அடுத்த நாள் ஒவ்வொரு வீடுகளுக்குமாக சென்று வீட்டு முற்றத்தில் ஆட  கிராமத்தவர் கூத்தாடுபவர்களுக்கு சில பொருட்கள், காசுகள் கொடுப்பர். இந்த பொருட்களை, காசுகளை கூத்து கலைஞர்கள் தமக்குள் பகிர்ந்து கொள்வர்.  

இப்படியாக ஆடிவரும் எமது பாரம்பரிய கூத்துகள் என்பது எடுத்த எடுப்பில் ஆரம்பிக்கப்பட்டதில்லை. அவற்றிற்கே உரியதான ஆடல், பாடல், மெட்டுக்கள், உடை  அலங்காரங்கள், கைப்பொருட்கள், களரி கட்டுதல் என்;பதான பல சிறப்பான தன்மைகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.


வட்டக்களரியில் கூத்துக்கள் ஆடப்படும்போது, அண்ணாவியார், மத்தளத்துடன் நிற்க அவருக்கு அருகில் ஒருபக்கம் ஏட்டண்ணாவியாரும், மறுபக்கம் தாளக்காரரும், பின்னால் பக்கபாட்டுக்காரரும் நிற்பார்கள். இவர்கள் களரியின் நடுவே நிற்கும் சபையோர்கள் எனப்படுவர்.

இந்த சபையோரையும் தன்னையும் சுற்றிக்கொண்டு பார்வையாளர்களை பார்த்தபடி கூத்துக் கலைஞர்கள் ஆடுவர். இவர்கள் ஆடும்போது ஒரு பக்கம் பாடல் பாடிவிட்டு அதே பொருள்பட பாடும் வகையான இன்னுமொரு பாட்டை மறுபக்கம் பார்த்துப்படுவதாக நான்கு திசைகளிலும் பார்த்துப் பாடிய வண்ணம் ஆடுவர்.இவ்வாறு கூத்தில் சபையோர், பார்ப்போர் அமர்ந்திருக்க கூத்தாடுவது அதன் இலக்கணம் என்று கூடக்கொள்ளலாம்.         
இன்றைய வாழ்க்கை முறையில் சமூக ஒருங்கிணைவுக்கு பாலமாக அமையும் கலந்துபேசுதல், புராண இதிகாசங்களை நேரடியாக நாட்டிய நயத்துடன் பார்த்து ரசித்தல், போன்றவற்றுக்கு  களமாக எமது பாரம்பரியக் கூத்து அமைகின்றன.                        

அதற்கு எடுத்துக்காட்டாக 'கூத்து என்று ஏற்றுக்கொள்வதாயின், பூமி தன்னைத்தானே சுற்றி, சூரியனையும் சுற்றி வருவது போல, கூத்தர் தன்னையும் சுற்றிக்கொண்டு, கூத்துக்களரியையும் சுற்றிக்கொண்டு தாளங்களுக்கு ஏற்றாற்போல சுற்றியாடும் பாரம்பரியமான ஆடும் முறையே கூத்துக்களில் உண்டு.வட்டக்களரியில் கூத்தை ஆடும் போது, பல சுதந்திரங்களை பார்வையாளர்கள் பெறுவார்கள். நிலத்தில் படுத்துக் கொண்டே கூத்தை இரசிப்பார்கள். பக்கத்தில் உள்ளவர்களிடம் கூத்தின் செயற்பாடுகளைப் பகிர்ந்து கொள்வார்கள். நினைத்த நேரத்தில் களரியை விட்டு, வெளியில் சென்று வருவார்கள்.

 'கூத்தாடுவதால் சமூகமாக ஒன்றுசேர முடிகின்றது. சுயாதீன மனிதராக வாழ முடிகின்றது. பாடசாலை வகுப்பறையில் பெற முடியாதுள்ள அனுபவம் சார்ந்த கல்வியினை கூத்தரங்குகளில் பெறமுடிகின்றது. வளர்ந்தவர்களும், முதியவர்களும் கல்வி கற்கும் திறந்தவெளிக் கல்விக் கூடமாக கூத்தரங்குகள் உள்ளன என்பதனையும் உழைத்துக் களைத்த மனிதர்கள் இனிமையாக கலை இரசனையுடன் பொழுதைக் களிக்கும் பொழுது போக்கிடமாக கூத்தரங்குகள் திகழ்கின்றன என்பதனையும் ஒட்டுமொத்தமாக மனிதர்கள் சமூகமாக ஒன்று சேர்ந்து சுயாதீனமாக வாழ்வதற்கான செயற்பாடாக கூத்தரங்குகள் உள்ளன என்பதனையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது' என்பதான அனுபவப் பகிர்வு எனக் கூறும் கருத்துகளும் கூத்தின் முக்கியத்துவத்தை குறித்து நிற்கின்றன.

கூத்தரங்க செயற்பாட்டில் சிறுவர்களின் பங்கு எத்தகையது என்பதனை இங்கு கூறியே ஆகவேண்டும்.
கூத்தரங்கு ஒன்று நிகழ்கையில் அதை ஆரம்பிக்கும் செயற்பாடு முதல் இறுதி வரை அவதானிக்கும் சிறுவர்கள் அதனை தமது வாழ்வில் பிரதிபலிக்கும் முறை அவர்களை வளர்ச்சிப் பாதைக்கே அழைத்து செல்கின்றது.

கூத்தரங்க செயற்பாடுகளை நுணுக்கமாக அவதானிக்கும் சிறார்கள் அதனூடாக பல்வேறு விடயங்களை பெற்றுக்கொள்கின்றனர். பிள்ளைகள் 'வாய் பார்த்துத் திரிதல்' பற்றி பலர் கூற கேள்விப்பட்டிருக்கின்றோம்.
எடுத்துக்காட்டாக  பாரம்பரியக் கூத்தில் 'வாய்பார்த்தல்' என்பதன் அர்த்தம் கூர்மையான அவதானம் என்பதாக இருக்கிறது.

அதுவும் சிறுவர்களுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. கூத்துப் பழகும் காலங்களில் நடைபெறும் விடயங்களை வீட்டில் இருப்பவர்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கு விலாவரியாக விபரிப்பவர்களாக சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
விலாவாரியாக விவரிப்பதற்காக கூர்மையாக அவதானிக்க வேண்டியவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். விபரிப்பின் போது விடுக்கப்படும் கேள்விகள் மேலும் மேலும் சிறுவர்களை கூர்மையாகக் கவனிக்க தூண்டுகின்றது  என்பதைக் குறிப்பிடலாம்.         


கூத்தரங்கு மூலம் சிறுவர்கள் ஒரு கூட்டுச் செயற்பாடுகள் அறிந்துகொள்கின்றனர். திட்டமிடல்கள்;, ஆடல், பாடல் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றனர், கூத்தாற்றுகையின்போது பயன்படுத்திய கைப்பொருட்களின் நுட்பவேலைகளை தாமாகவே செய்து கொள்ளும் திறன்களையும், சமூகத்தில் பலருடன் உரையாடுவது, போன்றவற்றோடு அவற்றைப் பார்த்து தாமாகவே போலச்செய்து கற்பனைபண்ணி பலதிறன்களை வெளிப்படுத்துகின்றனர்.

பாடல்களை மனனம் செய்து கூத்தர்கள் போல் ஆடிப்பாடுதல், களறிகட்டும் நுட்ப வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்து அதைப்போல் கட்டிப்பழகுதல்;, கூத்து நிகழ்த்துகையை ஒரு விளையாட்டாக விளையாடிப் பழகுதல் போன்ற செயற்பாடுகள் கூத்து ஆற்றுகை நிறைவடைந்த பின்னும் சிறுவர்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் செயற்பாடாக அமைந்துள்ளது.
இந்த செயற்பாடுகளால்தான் இன்றும் கூத்துக் கலை பரம்பரை பரம்பரையாகக் கையளிக்கபட்டு இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உடை அலங்கார கைவினையாளர்கள், மரவேலைகள் என்கின்ற கைவினைகள் செய்பவர்கள், எழுத்தாளர்கள், நடன கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பல பரிமானங்களில் மிளிரும் பல்வேறுப்பட்ட இளம் கலைஞர்களை இந்த கூத்துக்கலை உருவாக்கியுள்ளது. உருவாக்கி வருகின்றது.

அத்தோடு கூத்தரங்கு மத்தள அண்ணாவியார், கூத்துக்கொப்பி எழுதுபவர், கூத்தர்கள், மேஸ்த்திரிமார்கள் என்கின்ற ஒப்பனையாளர்கள் திறமையானவர்களை உருவாக்கியிருப்பதுடன்;, அவர்கள் அனைவரும்; கூத்தின் முழுக் கலைகளின் பரீட்சயத்தையும் நன்கு பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கலைத் திறமை அவர்களுக்கு யாரும் அமர்ந்திருந்து சொல்லிக்கொடுத்துப் பெற்றதில்லை. அவர்களாக சிறுவயதிலிருந்து பார்த்தும், கேட்டும் தாங்களாகப் பாடி ஆடி வளர்த்துக் கொண்ட சுய ஆக்கத்திறமைகளே. மட்டக்களப்பில் இன்றும் கூட புலமையும், ஆளுமையும் கொண்ட அண்ணாவிமார்களும், கூத்தர்களும், கலைஞர்களும் கூத்துச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல பிரிந்த பலர் இணையும் சந்தர்ப்பம் அமையும் இடங்களாக சமூகத்தில் திருமண, மரணச் சடங்குகள் காணப்படுகின்றது போல, கூத்தரங்கும் அமைத்திருக்கின்றது.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு தமது சொந்த இருப்பிடங்களை இழந்து இடம்பெயர்ந்து முகாம்களில் அடைபட்டிருந்த மக்கள் தமது கவலைகளைப் போக்குவதற்கும் அங்கிருந்த நேரத்தை கடத்துவதற்கும் கூத்தினை பயின்று ஆடியுள்ளனர்.அனர்த்தங்கள் நடந்த பின் சிதறிக்கிடந்த சமூகங்களை ஒன்றிணைக்கின்ற, ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகளையும் கூத்தரங்கு செய்துள்ளது. சுனாமியின் கோரத் தாண்டவத்தின் பின் மட்டக்களப்பில் பலர் அந்த சம்பவங்களை மறப்பதற்காக கூத்து பயின்று ஆடியுள்ளனர்.

படுவான்கரைப் பகுதியில் நடந்த அனர்த்தங்களால் எழுவான் கரையில் வந்திருந்து பின் மீண்டும் படுவான்கரைப் பகுதிக்குச் சென்ற மக்கள் கூத்தரங்கு மூலம் தங்கள் பிரச்சினைகளை மறந்து இருந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

கூத்துக்கள் வெறுமனே பொழுதை போக்கும் ஒரு கலையாக்கச் செயற்பாடாக இல்லாமல் மகிழ்வூட்டுதல், ஒன்றினைத்தல், களைப்பை நீக்குதல், மீட்சியை தருதல் என பல உள ஆரோக்கிய செயற்பாடுகளை செவ்வனே செய்யும்    ஆற்றுகையாக இருந்து வருகின்றது.

கூத்துக்கலையின் இத்தகைய செயற்பாடுகளே அதனது வளர்ச்சியை தீர்மானித்து நிற்கின்றது.
"சமூக ஒன்றிணைப்பில் கூத்துக் கலை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty