2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அவன்ட் காட்: ஆட்சேபனைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்க உத்தரவு

Thipaan   / 2017 ஜூலை 13 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, அவன்ட் காட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உட்பட எழுவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வாய்மொழிமூல ஆட்சேபனைகளை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பினருக்கு, நேற்று (12) உத்தரவிட்டது.

அவன்ட் காட் மெரிடைம்ஸ் நிறுவனத்தினூடாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை அமைத்து, அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

வழக்கு ஆரம்பிப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மன்றுக்குள் பிரவேசித்ததுடன், சட்டத்தரணிகள் அமரும் கதிரையில் அமர்ந்து கொண்டார். வழக்கு ஆரம்பமாவதற்கு சற்று நேரத்துக்கு முன் வெளியேறி, வழக்கு முடிந்தவுடன், மன்றுக்கு வெளியே வந்தார். 

வழக்கு விசாரணை, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது, வாய்மொழிமூல ஆட்சேபனைகளை ஆற்றுப்படுத்தத் தொடங்கினார். 

இந்த வழக்கு இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்குத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன், பழைய வழக்குகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, தமது நீதவான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வழக்குத் தாக்கல் செய்தமைக்கு ஆட்சேபனையை வெளியிட்டார். 

அதற்குப் பதிலளித்த முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஜனக பண்டார, ஆணைக்குழுவின் அறிவுரைக்கு அமைய பணிப்பாளர் நாயகத்தால் வழக்குத்தாக்கல் செய்யமுடியும் எனக் குறிப்பிட்டார்.  

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச, ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தால், அதிகுற்றப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தொடர்பிலும் சுட்டிக்காட்டினார். 

மேல் நீதிமன்றத்தில், அதிகுற்றப்பத்திரம் சமர்ப்பித்து வழக்குத்தாக்கல் செய்யமுடியுமாயின், நீதவான் நீதிமன்றத்தில் ஏன் முடியாது என வினவியதுடன், அதற்கு சட்டத்தில் இடம் இருப்பதாகவும் அறிவித்தார். 

இருதரப்பினரின் வாய்மொழிமூல ஆட்சேபனை ஆற்றுப்படுத்துகையை அவதானித்த நீதவான், இருதரப்பினரும் வாய்மொழிமூல ஆட்சேபனையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.  

இதற்கு இடையில், ஏழாவது எதிராளி, ஜூலை 10ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதிவரை வெளிநாடு செல்லவுள்ளார் என கடந்த அமர்வில் அறிவித்த அவரின் சட்டத்தரணி, அதற்கு அனுமதி கோரி, 7ஆவது எதிராளி வெளிநாடுசெல்வதற்கும் நீதவான் அனுமதி வழங்கியிருந்த நிலையில், அதை நீதவானுக்கு நினைவூட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .