2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கறுப்பு நிறப் பையை வஜிரவே கொண்டுவந்தார்’

Thipaan   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா திபான்

தானும் சரணும், பச்சை நிற முச்சக்கரவண்டியின் பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கறுப்பு நிறப் பையொன்றைக் கொண்டுவந்த வஜிர, அதைத் துரிதமாக, பின்பக்க ஆசனத்துக்குப் பின்னாலுள்ள டிக்கியில் வைத்துவிட்டு, சாரதி ஆசனத்தில் அமர்ந்துகொண்டார் என, 16ஆவது சாட்சியாளரான லியனாராச்சிகே அபேரத்ன, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை (08) சாட்சியமளித்தார்.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரோஹந்த அபேசூரியவின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே, அவர் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியாக இருந்த நடராஜா ரவிராஜ், 2006.11.10அன்று படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையின் நேற்றைய அமர்வு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய விசேட ஜூரி சபை முன்னிலையில், முற்பகல் 11.55க்கு ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்போது, 16ஆவது சாட்சியாளரான லியனாராச்சிகே அபேரத்னவும் 36ஆவது சாட்சியாளரான ஜகத் சந்தன பண்டாரவும் ஆஜராகியிருந்தனர். 

16ஆவது சாட்சியாளரின் சாட்சியம், புதன்கிழமை (07) பிற்பகல் பதியப்பட்ட நிலையில், சாட்சியமளிப்பு தொடர்ந்தது, 

கேள்வி:  நீங்கள், நேற்றைய சாட்சியத்தின் போது, கொழும்பு - 07 கேம்பிரிட்ஜ் பிரதேசத்தில் அரச புலனாய்வுச் சேவையின் அலுவலகம் அமைந்திருந்ததாகக் கூறினீர்கள். அது தவிர கங்காராமை பிரதேசத்திலும் புலனாய்வுச் சேவை கட்டடம் இருந்ததா? 

ஆம். 

கேள்வி:  கங்காராமையிலுள்ள கட்டடத்துக்குப் போயுள்ளீர்களா? 

ஆம். 

கேள்வி:  எந்த வீதியில் அந்தக் கட்டடம் உள்ளது? 

பெரஹரா மாவத்தையில். 

கேள்வி:  பெரஹரா மாவத்தையிலுள்ள அந்தக் கட்டடத்துக்கு என்ன வேலையாகப் போனீர்கள்? 

புலனாய்வு தொழிநுட்பப் பிரிவு தொடர்பில் பேசுவதற்கு. 

கேள்வி:  பெரஹரா மாவத்தையிலுள்ள கட்டடத்தில், யாராவது இருந்தனரா?  

ஆம். 

கேள்வி:  அவர்கள் யாரென்று தெரியுமா? 

கடற்படை அதிகாரிகள். 

கேள்வி:  கடற்படை அதிகாரிகளுக்கும் உங்களுடைய பிரிவுக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? 

ஆம். 

கேள்வி:  என்ன சம்பந்தம்? 

அரச புலனாய்வு சேவை தொடர்பான சம்பந்தம். 

கேள்வி:  அந்தக் கட்டடத்தில் புலனாய்வு அதிகாரிகள் தவிர வேறு யாராவது தங்கியிருந்தனரா? 

தெரியாது. 

கேள்வி:  கருணா பிரிவைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைத் தெரியும் எனக் கூறியிருந்தீர்கள்? 

ஆம். 

கேள்வி:  சுரேஷ் தொடர்பில் ஏதாவது ஞாபகமிருக்கிறதா, அங்க அடையாளங்கள்? 

மெலிந்தவர், நீளமான தலைமுடி. 

கேள்வி:  சரண் சம்பந்தமாக? 

வெள்ளை, பருத்தவர், மொட்டை. 

கேள்வி:  சுரேஷ், சரண் ஆகிய இருவரும் இங்கு இருக்கின்றனரா? 

இல்லை. 

கேள்வி:  இவர்களை, கடைசியாகச் சந்தித்தது எப்போது? 

ஞாபகமில்லை. 

கேள்வி:  தற்போது எங்கு இருக்கின்றனர்? 

சரண், சுவிட்ஸர்லாந்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். 

கேள்வி:  பெரஹரா மாவத்தையிலுள்ள கட்டடத்துக்கு எத்தனை தடவைகள் போயுள்ளீர்கள்?  

இரண்டு தடவைகள். 

கேள்வி:  கருணா குழுவினருடன் தொலைபேசியூடான தொடர்பு இருந்தா? 

ஆம். 

கேள்வி:  கருணா குழுவினர் சம்பந்தப்பட்ட விசேட சம்பவம் ஏதும் ஞாபகமிருக்கிறதா? 

ஆம். 

கேள்வி:  படுகொலை தொடர்பில்? 

ஆம். 

கேள்வி:  யாருடைய படுகொலை தொடர்பில்? 

விசேடமாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜினுடைய படுகொலை தொடர்பில். 

கேள்வி:  எப்போது இடம்பெற்றது, வருடம்? 

2006. 

கேள்வி:  2006ஆம் ஆண்டின் முற்பகுதியிலா அல்லது பிற்பகுதியிலா? 

பிற்பகுதியில். 

கேள்வி:  அப்போது நீங்கள், எங்கு வேலை செய்து கொண்டிருந்தீர்கள்? 

கொழும்பில். 

கேள்வி:  சம்பவம் இடம்பெற்ற நாள்? 

2006ஆம் ஆண்டு நவம்பர் மாத முதல் வாரத்தில் இடம்பெற்றது. 

கேள்வி:  சம்பவம் இடம்பெற்ற அன்று காலை எங்கு இருந்தீர்கள்? 

புறக்கோட்டையில். 

கேள்வி:  ஏதாவது வேலையாகப் போனீர்களா? 

ஆம். 

கேள்வி:  புறக்கோட்டைக்கு ஏன் போனீர்கள்? 

ஞாபகமில்லை. 

கேள்வி:  புறக்கோட்டையிலிருந்து இன்னுமோர் இடத்துக்குப் போனீர்களா? 

ஆம். 

கேள்வி:  என்ன காரணத்துக்காகப் போனீர்கள்? 

சரண், அலைபேசியூடாக அழைத்து வரச்சொன்னார். 

கேள்வி:  யாருடைய அலைபேசிக்கு சரண் அழைப்பை ஏற்படுத்தினார். 

என்னுடைய அலைபேசிக்கு. 

கேள்வி:  அழைத்து என்ன சொன்னார்? 

டெக்னிக்கல் சந்தியில் இருக்கிறேன். வா எனக் கூறினார். 

கேள்வி:  டெக்னிக்கல் சந்தி எங்கு இருக்கிறது என்று அந்த நேரத்தில் உங்களுக்குத் தெரியுமா? 

ஆம். 

கேள்வி: டெக்னிக்கல் சந்தியென்று சொல்வது எதை? 

மருதானையிலிருந்து புறக்கோட்டைக்குத் திரும்பும் போது இருக்கும் நாற்சந்தி. 

கேள்வி:  அந்த வீதியூடாக நேராக வந்தால், நீதிமன்றக் கட்டடத் தொகுதியை அடையலாமா? 

ஆம். 

கேள்வி:  அங்கு போனீர்களா? 

ஆம். 

கேள்வி:  எந்த இடத்துக்குப் போனீர்கள்? 

டெக்னிக்கல் சந்தியிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள மெடிக் கெயார்க்கு அருகில். 

கேள்வி:  மெடிக் கெயார் என்ற இடத்தில் என்ன உள்ளது? 

வைத்திய பரிசோதனை நிலையம். 

கேள்வி:  சந்தியிலிருந்து மெடிக் கெயாருக்கு எவ்வளவு தூரம்? 

(எவ்வாறு சொல்வது என்று சாட்சியாளர் தடுமாறிய போது, ‘நீங்கள் இருக்கும் சாட்சிக் கூண்டிலிருந்து, நீதிமன்ற அறைக்குள்ளேயோ வெளியேயோ ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டுங்கள்’ என, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கேட்டுக்கொண்டார். அதற்கு சுவர் பகுதியொன்றை சாட்சியாளர் காட்டியதையடுத்து, சரி என அவர் கூறினார்) 

கேள்வி:  புறக்கோட்டையிலிருந்து டெக்னிக்கல் சந்திக்குச் செல்ல எவ்வளவு நேரம் எடுத்தது? 

7 நிமிடங்கள். 

கேள்வி:  வரச்சொன்னது எங்கு? 

டெக்னிக்கல் சந்திக்கு. 

கேள்வி:  சந்திக்கு நீங்கள் போனீர்களா? 

ஆம். 

கேள்வி:  அங்கு யாராவது இருந்தனரா? 

இல்லை. 

கேள்வி:  மெடிக் கெயாருக்கு அருகில் போகக் காரணம்? 

முச்சக்கரவண்டியில் இருக்கிறோம் அங்கு வருமாறு சரண் சொன்னார். 

கேள்வி:  சந்தியிலிருந்து மெடிக்கெயார் எவ்வளவு தூரம், மீற்றரில் சொன்னால்? 

20 மீற்றர் இருக்கும். 

கேள்வி:  மெடிக் கெயாருக்கு அருகில் போகும் போது நேரம் என்ன? 

முற்பகல் 11 மணி. 

கேள்வி: அங்கு போகும் போது முதலில் பார்த்து எதை?  

முச்சக்கரவண்டிக்குள் சரண் அமர்ந்திருந்தார். 

கேள்வி:  என்ன நிறமான முச்சக்கர வண்டி? 

பச்சை. 

கேள்வி:  முச்சக்கரவண்டியில், வேறேதாவது விசேட அம்சம் இருந்ததா? 

இல்லை. 

கேள்வி:  முச்சக்கரவண்டியின் இலக்கம் ஞாபகமா? 

இல்லை. 

கேள்வி:  சரண் என்ன செய்து கொண்டிருந்தார்? 

பின்பக்க ஆசனத்தில் அமர்ந்து, சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்தார். 

கேள்வி:  சரணுடன் பேசினீர்களா? 

ஆம். சில விடயங்கள் பேசிக்கொண்டிருந்தேன். 

கேள்வி:  சில விடயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, யாராவது வந்தனரா?  

பின்னால் வந்தனர். 

கேள்வி:  சரணுடன் பேசிக்கொண்டிருந்த எவ்வளவு நேரத்தில் அவர்கள் வந்தனர்?  

5 நிமிடங்களில். 

கேள்வி:  எந்தப் பக்கமாக அவர்கள் வந்தனர்? 

பின்பக்கமாக. 

கேள்வி:  எந்தப் பாதையிலிருந்து வந்தனர்? 

தெரியாது. 

கேள்வி:  பின் என்றது எதற்குப் பின்னால்? 

முச்சக்கரவண்டிக்குப் பின்னால். 

கேள்வி:  முச்சக்கரவண்டி எவ்வாறு நிறுத்தப்பட்டிருந்தது, எந்தப் பக்கம் பார்த்தவாறு? 

புறக்கோட்டைப் பக்கம் பார்த்தவாறு. 

கேள்வி:  எங்கு? 

வீதிக்கு அருகில். 

கேள்வி:  அப்பகுதியிலிருந்து நீதிமன்றம் நோக்கி வரும் போது, வைத்திய நிலையம் இருந்தது எந்தப்பக்கம்? 

வலது பக்கம் ( இதன்போது குறுக்கிட்ட 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, அந்தக்காலப்பகுதியில், அப்பாதை இருவழிப்பாதையாக இருந்ததாகவும் அண்மையிலேயே ஒரு வழிப்பாதையாக்கப்பட்டதாகவும் கூறினார்.) 

கேள்வி:  முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்தது, வலது பக்கமா, இடதுபக்கமா, மெடிக் கெயார் நிலையப் பக்கமா, அதற்கு எதிர்பக்கமா? 

மெடிக் கெயார் நிலையப் பக்கம். 

கேள்வி:  சரணுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது வந்தவர்கள் யார்? 

முச்சக்கரவண்டியில் இருக்கும் போது மூன்று பேர் வந்ததாக ஞாபகம். 

கேள்வி:  வந்தவர்கள் முச்சக்கரவண்டியில் ஏறினரா? 

ஆம். 

கேள்வி:  சாரதி ஆசனத்தில் ஒருவர் ஏறினார் என்றால் சரியா? 

ஆம். 

கேள்வி:  சாரதி ஆசனத்தில் ஏறியவரைத் தெரியுமா? 

ஆம். 

கேள்வி:  முச்சக்கரவண்டியில் ஏறும் வரை அவரைப் பார்த்துள்ளீரா? 

இல்லை. 

கேள்வி:  அந்த நபர், முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்தில் இருந்து என்ன செய்தார்? 

நான் இறங்கினேன். முச்சக்கரவண்டி போய்விட்டது. 

கேள்வி:  சாரதி ஆசனத்தில் இருந்தவர் நீங்கள் பார்த்த போது, ஏதாவது வைத்திருந்தாரா? 

 பையொன்று, ஞாபகமுள்ளவரை, கறுப்பு நிறப்பை. 

என்ன தேவைக்காகப் பயன்படுத்தக் கூடிய பை என கேட்கப்பட்டபோது, சாதாரண தேவைகளுக்கு என்றார். தோளில் கொழுவிச் செல்வதா அல்லது கையில் கொண்டு செல்வதா என கேட்டபோது, கையில் கொண்டு செல்வது என பதிலளித்தார். தோளில் போட முடியாதா எனக் கேட்டதற்கு தெரியாது என்றார். பையில் விசேட அடையாளங்கள் உள்ளனவா எனக் கேட்டதற்கும் இல்லை என்றார். 

கேள்வி:  பையைக் கொண்டு வந்தவரை பின்னர் சந்தித்துள்ளீர்களா? 

ஆம். 

கேள்வி:  அவருடைய பெயர் என்ன?  

வஜிர. 

கேள்வி:  டெக்னிக்கல் சந்தியில் நடந்த, நீங்கள் சொன்ன சம்பவம், ரவிராஜ் எம்.பியின் கொலைக்கு முன்னரா, பின்னரா நடந்தது? 

முன்னர். 

கேள்வி:  எவ்வளவு காலத்துக்கு முன்னர் என ஞாபகமா? 

நவம்பர் மாத முதல் வாரத்தில். 

கேள்வி:  முச்சக்கரவண்டியில் இருந்தபோது, மேலும் இருவர் வந்ததாகக் கூறினீர்கள்? 

ஆம். 

கேள்வி:  சரணுடன் கதைத்தனரா? 

இல்லை, அவர்கள் வந்ததும், முச்சக்கரவண்டி போய்விட்டது. 

கேள்வி:  அவர்களை முன்னர் பார்த்துள்ளீரா? 

இல்லை. 

கேள்வி:  பின்னர்? 

ஒருதடவை. 

கேள்வி:  அவர்களுடைய பெயர் என்ன என்று ஞாபகமா? 

ஆம். ஒருவருடைய பெயர் செனவி. 

கேள்வி:  முச்சக்கரவண்டியில் இருந்தபோது, பை கொண்டு வந்ததைப் பார்த்தீர்களா? 

பையைக் கொண்டுவந்த வஜிர, பின்பக்க ஆசனத்துக்குப் பின்னாலுள்ள டிக்கியில், அதனைத் துரித கதியில் வைத்து விட்டு முன்பக்க ஆசனத்தில் அமர்ந்தார். 

கேள்வி:  ஏதாவது சம்பவம் தொடர்பாக ஏதாவது தகவல் கிடைத்ததா? 

ஆம். 

அதன் பின்னர், டெக்னிக்கல் சந்தியிலிருந்து எங்கு சென்றீர்கள், தகவலை யாரிடம் வழங்கினீர்கள் என கேட்கப்பட்டதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றதாகவும் அதிகாரியான ஜயவர்தன என்பவரிடம் தகவலை வழங்கியதாகவும் கூறினார். என்ன தகவல் எனக் கேட்டதற்கு, ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பான தகவல் எனக் கூறினார். 

வஜிர என்பவரை எவ்வளவு நேரம் பார்த்துள்ளீர்கள், அவர் இங்கு இருக்கிறாரா, அவரை அடையாளம் காட்ட முடியுமா எனக் கேட்டதற்கு, அவரை, 10 நிமிடங்கள் பார்த்ததாகவும் ஓரளவு அடையாளம் காட்டமுடியும் எனவும் கூறிய அவர், பிரதிவாதிகள் கூண்டில், இடது புறம் முதலாவதாக இருப்பவரே வஜிர என, அடையாளம் காட்டினார். 

செனவி என்பவர் தொடர்பில் வினவியபோது, அவரை, ரவிராஜ் கொலைக்குப் பின், ஒருதடவை சந்தித்துள்ளதாகவும், அரச புலனாய்வுப் பிரிவுக்கு வஜிர வந்த போது, அவரும் வந்ததாகவும் கூறினார். அவர்கள், அதிகாரியின் அறையினுள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தாகவும் பின்னர், வஜிர தன்னுடன் தனிப்பட்ட விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். 

வஜிர, கடற்படையில் பணியாற்றியதாகவும் அதைத் தவிர புலனாய்வு சேவையிலும் பணியாற்றியதாகக் கூறிய சாட்சியாளர், செனவியை அடையாளம் காட்டுவது கடினம் என கூறினார். 

பச்சை நிற முச்சக்கரவண்டியை, தான் அதற்கு முன்னர் கண்டுள்ளதாகவும் தன்னுடை யசக பணியாளரான லக்நாத் என்பவருடையது எனவும் தெரிவித்தார். 17ஆவது சாட்சியாளரா அவர் என வினவப்பட்டதற்கு, ஆம் என பதிலளித்தார். 

முச்சக்கரவண்டியில், பெயர் குறிப்பிட்டவர்கள் தவிர வேறு யார் இருந்தனர் என கேட்டதற்கு, சுரேஷ் இருந்ததாகப் பதிலளித்த சாட்சியாளர், இதுதொடர்பில் எத்தனை வாக்குமூலங்கள் வழங்கியுள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, 2 எனவும் 2015ஆம் ஆண்டில் வழங்கியதாக ஞாபகமிருப்பதாகவும் திகதிகள் தெரியாது எனவும் கூறினார். முதலாவது வாக்குமூலத்தை விளக்குவதற்கே, 2ஆவது வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

வாக்குமூலம் வழங்கியபோது, புகைப்படம் ஒன்றை அடையாளம் காட்டி, கையெழுத்திட்டுள்ளீர்கள், எப்போது எனத் தெரியுமா எனக் கேட்டதற்கு, தன்னுடைய கையெழுத்து என்று அடையாளம் காட்டிய அவர், தனக்கு கண்ணில் பிரச்சினை இருப்பதால், திகதியை வாசிக்க முடியாதுள்ளதாக தெரிவத்தார். 

செனவியுடன் பேசியுள்ளீர்களா எனக் கேட்டதற்கு, ஆம் என பதிலளித்தார். தனது, கேள்விகள் முடிவடைந்தாக, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அறிவித்ததையடுத்து, 2ஆவது பிரதிவாதியின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசித் சிறிவர்தனவிடம் குறுக்குக் கேள்விகள் உள்ளனவா என நீதிபதி கேட்டதற்கு, இல்லை எனப் பதிலளித்தார். 

அதன்பின்னர், 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனுஜ பிரேமரத்னவிடம் கேட்டபோது, அவர் ஆம் என கூறி, குறுக்குக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். 

கேள்வி:  2015.05.02 அன்று முதலாவது வாக்குமூலம் வழங்கினீர் என்றால் ஏற்றுக்கொள்வீர்களா? 

ஆம். 

கேள்வி:  அந்த வாக்குமூலத்தில் கேகாலை என்று முகவரியிட்டுள்ளீர்கள்? 

ஆம், அப்போது கேகாலையில் இருந்தேன். 

கேள்வி:  ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளீர்கள்? 

ஆம். 

கேள்வி:  வாகரைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் ஏறாவூர் உள்ளது? 

இல்லை, வாழைச்சேனைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் உள்ளது. 

கேள்வி:  அதிகாலை 1 மணிக்கு மட்டக்களப்புக்கு போயுள்ளீர்கள், கேகாலையிலிருந்தா? 

ஆம். 

கேள்வி:  ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு கேகாலையிலிருந்த உங்களுக்கு எப்போது தகவல் கிடைத்தது? 

அதற்கு முன் தினம். 

கேள்வி:  ஒரு நாளைக்கு முன்னரா தகவல் வந்தது? 

அதற்கு முன்னர் கடிதம் வந்தது. 

தனக்கு, பகல் 1 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் பிற்பகல் 3 மணிக்கு கேகாலையிலிருந்து பஸ் ஏறி, அடுத்தநாள் அதிகாலை 1 மணிக்கு மட்டக்களப்பைச் சென்றடைந்தாகக் கூறினார்.  

உடனடியாக வரச் சொன்னதாலா போனீர்கள், எதற்கு என்று தெரியுமா எனக் கேட்டதற்கு, தன்னை உடனடியாக வரச் சொன்னதாகவும் ரவிராஜ் எம்.பியின் படுகொலை தொடர்பில் வாக்குமூலமளிக்க என தனக்குத் தெரிந்திருந்தாவும் சாட்சியாளர் தெரிவித்தார். 

துரித கதியில், பையைத் தூக்கிக் போட்டாரா என, கேட்டபோது, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறுக்கிட்டு, போடவில்லை, வைத்தார் என கூறினார். துரித கதியில் வைக்க முடியாது போடத்தான் முடியும், வைப்பது என்றால் மெல்ல வைப்பது என, சட்டத்தரணி அனுஜ வாதிட்டார். 

4ஆவது பிரதிவாதியான வஜிரவும் செனவியும், அரச புலனாய்வு சேவைத் தலைமையகத்தில் எந்த உயர்அதிகாரியைச் சந்தித்தனர் என்று கேட்டதற்கு, ஞாபகமில்லை என்று சாட்சியாளர் கூறினார். 

புலனாய்வு சேவைத் தலைமையத்தில், வஜிரவுடன் தனிப்பட்ட விடயம் தொடர்பில் பேசியதையோ, வஜிர, கடற்படை அதிகாரியென்றோ, 2015.05.02, 2015.06.27 ஆகிய தினங்களில் வழங்கிய வாக்குமூலங்களில், சாட்சியாளர் கூறியிருக்கவில்லை என, சட்டத்தரணி அனுஜ, மன்றுக்கு அறிவித்தார். 

10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என்பதால், 4ஆவது சந்தேகநபர்தான் ஏறினாரா என்பதை கூறமுடியாது என கேட்டதற்கு, சாட்சியாளர் அதை நிராகரித்தார். 

வாக்குமூலங்களிலும் பொய்கூறி, இந்த மன்றிலும் பொய் கூறுகிறார் இந்த சாட்சியாளர் என்று கூறிய அனுஜ பிரேமரத்ன, தனது குறுக்குக் கேள்விகளை முடித்துக்கொண்டார். அதனை சாட்சியாளர் நிராகரித்தார். 

ஜூரிகளிடம் கேள்விகள் உள்ளதா என நீதிபதி கேட்டதற்கு, ஆம் எனப் பதிலளித்து, கேள்விகளைத் தொடங்கினர். 

கேள்வி:  சரணுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருந்ததா? 

தகவல்களை பெற அவரைப் பாவித்தோம். 

கேள்வி:  முச்சக்கரவண்டியில் வைத்து சரண் என்ன சொன்னார்? 

ரவிராஜைக் கொல்ல திட்டமிட்டோம். சரிவரவில்லை எனக் கூறினார். (இதன் போது குறுக்கிட்ட சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல், இவை சட்டப்படி கேட்கப்பட முடியாத கேள்விகள் என நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.) 

இதுபோன்ற கேள்விகளைக் கேட்க சட்டத்தில் இடமில்லை எனக் கூறிய நீதிபதி, 16ஆம், 36ஆம் (கெலும் திஸாநாயக்க) ஆகியோரை நாளை சாட்சியமளிக்க மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணைகளை இன்று வெள்ளிக்கிழ மை (09) வரை ஒத்திவைத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .