2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'தனிநாடு தேவையா எனக்கேட்டு அடித்தே கொன்றனர்': பரபரப்புச் சாட்சியம்

Kanagaraj   / 2016 ஜூலை 26 , மு.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

நண்பரை, அடித்துக் கொலை செய்த சுன்னாகம் பொலிஸார், அந்தக் கொலையை தற்கொலையாக மாற்றி, மரணச் சான்றிதழ் வழங்கினர்' என, சுன்னாகம் பொலிஸாருக்கு எதிராக சந்தேகநபர்கள், மல்லாகம் நீதிமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை (25), பரபரப்புச் சாட்சியம் வழங்கியுள்ளனர்.

'உனக்கு தனி நாடு தேவையா?' எனக்கூறி நண்பரை அடித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்த சந்தேகநபர்கள், நண்பனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் பொலிஸாரையும் அடையாளங்காட்டினர். அவர்கள் அடையாளம் காட்டிய அனைத்துப் பொலிஸாரையும் கைது செய்யுமாறு, நீதவான் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

திருட்டுக்குற்றச்சாட்;டு தொடர்பான வழக்கு ஒன்று, மல்லாகம் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில், திங்கட்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் சந்தேகநபர்களான 4 பேர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களே இந்த பரபரப்பு வாக்குமூலத்தை மன்றில் வழங்கினர்.

அவர்கள் தங்கள் வாக்குமூலத்தில்,

'வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி புத்தகப்பைகளை அன்பளிப்புச் செய்தோம். அவ்வேளை அங்கு வந்த சுன்னாகம்

பொலிஸார், 'மாவீரர் தினத்தை முன்னிட்டு இதனை வழங்குகின்றீர்களா?' எனக் கேட்டனர். அதற்கு நாம் இல்லை, வறிய மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக உதவுகின்றோம் என்றோம். அதன் பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து, அன்றைய தினம் இரவு எங்கள் ஐந்து பேரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். ஏன் எங்களைக் கைது செய்தீர்கள்? எனக் கேட்டபோது, திருட்டுக்குற்றச்சாட்டு என்று கூறினர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தினுள் சித்திரவதை செய்வதற்கென பிரத்தியேக அறை ஒன்று உள்ளது. அந்த அறைக்குள் எம்மை அழைத்து சென்றனர். அங்கு ஊரெழு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுத் துறையினர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர், எம்மீது சித்திரவதைகளைப் புரியத் தொடங்கினர்.

எம்மீது மின்சாரத்தை பாய்ச்சினார்கள், கால்ப் பாதங்களில் ஆணிகளை அடித்தார்கள், கைப் பெருவிரலில் குழாய் ஒன்றினை நுழைத்து, அந்த குழாயை மேலே தூக்கிக் கட்டினார்கள். அதன்போது எமது முழு உடல் பாரமும் விரலிலேயே தூங்கியது. மேசைக்கு குறுக்கே கை, கால்களை இழுத்துக் கட்டி தாக்கினார்கள்.

இவ்வாறு மிகமோசமான சித்திரவதைகளை சுன்னாகம் பொலிஸார், எம்மீது மேற்கொண்டனர்.  இதன்போது எமது நண்பனான சுமன் என்பவரை இரண்டு மேசைகளுக்கு இடையில் கட்டி வைத்து 'உனக்குத் தனி நாடு வேணுமா' என கேட்டுத் தாக்கினார்கள்.

பொலிஸாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நண்பனின் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் சொட்டி நண்பன் உயிரிழந்துவிட்டான். அதனை அடுத்து எம்மை அந்த அறையில் இருந்து பொலிஸார் அப்புறப்படுத்திவிட்டனர்.

பின்னர், உயிரிழந்த எமது நண்பனின் உடலை கிளிநொச்சி, இரணைமடு குளத்தினுள் வீசியுள்ளனர். பின்னர் நண்பன் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டதாக மரணச்சான்றிதழ் கொடுத்து, பொலிஸார் அதனைத் தற்கொலையாக மாற்றிவிட்டனர்' என்றனர்.

இதனையடுத்து நீதவான், பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார்.

நண்பரைக் கொலை செய்ததாகவும், அவர்கள் மீது சித்திரவதை புரிந்ததாக சாட்சியங்கள் குறிப்பிட்டுள்ள பொலிஸார் அனைவரையும் உடனடியாக கைதுசெய்து மன்றில் முற்படுத்துமாறும் அத்தனை பேரிடமும் பூரண விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள், (எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி) விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு இட்டார்.

அத்துடன், இந்த வழக்கினைக் கைவிடுமாறு எவரேனும் கோரினாலோ அல்லது மிரட்டினாலோ, வேறுவிதமான அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் விடுக்கப்பட்டாலோ உடனடியாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். தேவை ஏற்படின் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் சாட்சியங்களிடம் நீதவான் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .