2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘எமது மக்கள் தனி ஈழம் கோரவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

200 வருட கால வரலாற்றைக் கொண்ட எமது மலையக மக்கள் தனி ஈழத்தையோ வேறு எதையுமோ கோரவில்லை. அவர்கள் கௌரவமான வாழ்க்கையையே கோருகின்றனர் என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம், பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாடிய போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.  

“இன்றைய தினம் மலையக மக்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் அதிகாரசபைக்கான முன்மொழிவு, இன்று சட்ட அந்தஸ்து பெறவுள்ளது. இந்த அதிகார சபையின் உருவாக்கத்தின் மூலமே, மலையக மக்களின் கனவு நிறைவேறும்” என்றார்.  

“தற்போது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அமைச்சுக்கான பௌதீக வளங்கள் மற்றும் மனித வளங்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த அமைச்சால் உருவாக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளன. இதனால் சில தாமதங்கள் ஏற்பட்டு வருவதை நான் அவதானித்து வருகிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

1997ஆம் ஆண்டு, அன்றைய ஜனாதிபதி சந்திரிகா அம்மையார், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தனியான அமைச்சை உருவாக்கினார். 2010ஆம் ஆண்டு வரைக்கும் இந்த அமைச்சு பல்வேறு அமைச்சர்களின் கீழ் எல்லா வளங்களையும் கொண்ட ஒரு பலம் மிக்க அமைச்சாக வளர்ச்சி பெற்று வந்தது.   

2006ஆம் ஆண்டு, இந்த அமைச்சு தேசிய நிர்மாண அமைச்சோடு சேர்க்கப்பட்டு அதனுடைய ஒரு பிரிவாகவே செயற்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டு இந்த அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டது.   

இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு, ஜனவரியில் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னரே மீண்டும் தோட்ட உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொது தேர்தலின் பின்னால் இந்த அமைச்சானது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி என பெயர் மாற்றம் பெற்றது.   

புதிய அமைச்சாக இருந்த காரணத்தால் இந்த அமைச்சைக் கொண்டு நடத்துவதற்கான வளங்கள் குறைந்த அளவாகவே இருந்தது. இதனை முழுமைப்படுத்தி, வலுவான ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதே இந்த அமைச்சின் சவாலாகும். இந்தச் சவாலை நிறைவேற்றுவதே, இந்த அதிகார சபையின் முக்கிய பணியாகும்.   

பெருந்தோட்டப் பகுதிகளில் முறையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க 2015 முதல் 2020 வரை உள்ளடக்கித் திட்டம் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவைக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு முழுமையான நிர்வாக கட்டமைப்பு அமைச்சிடம் இருக்கவில்லை. இந்த காரணத்துக்காகவே ஓர் அதிகார சபையின் தேவை உணரப்பட்டது.   

இதனையடுத்து, ஐந்தாண்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரசபை தேவை என என்னால் அமைச்சரவை அங்கிகாரத்துக்கு பத்திரமொன்று சமர்பிக்கப்பட்டது.   

இதன்படி, இந்த முன்மொழிவுக்கான ஆரம்ப வரைபு, அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் நிறுவப்பட்ட பணிக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலமாக சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரோடும் கலந்தாலோசனை செய்யப்பட்டது.   

இந்த அதிகார சபைக்கு இரண்டு முக்கிய குறிகோள்கள் உள்ளன. ஒன்று பெருந்தோட்ட சமுதாயத்தினரை, சமூக, பொருளாதார, கலாசார, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் அரச கட்டமைப்புகுள் சேர்ப்பதை உறுதிப்படுத்தலாகும்.   

இரண்டாவது தேசிய அபிவிருத்தி செயன்முறைக்குப் பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தலாகும். இந்த நோக்கங்களை அடைவதற்காக இந்த அதிகாரசபையினுடைய பணிகள் இந்த மசோதாவிலே எடுத்துக் கூறப்பட்டுள்ளன.   

அரசாங்கத்தால் வழங்கப்படும் பொதுசேவைகள் இம்மக்களை முழுமையாக போய்ச்சேர வேண்டும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .