2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பெண்களின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடர்: நாளை அரையிறுதிப் போட்டிகள்

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் பெண்களின் ஏழாவது இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.

சிட்னியில் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில், குழு ஏயில் முதலிடம் பிடித்த இந்தியாவும், குழு பியில் இரண்டாமிடம் பெற்ற இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடாத்தவுள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் அவ்வணிக்கு அதிரடியான ஆரம்பத்தை வழங்கியவராக ஷெஃபாலி வர்மா காணப்படுகின்றார். ஆக இவருடைய பங்களிப்போடு, பூனம் யாதவ், டீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயகவாட், ராதா யாதவ், ஷிகா பாண்டே ஆகியோரின் பெறுபேறுகளே இந்தியாவின் வெற்றிக்காரணிகளாகக் காணப்படுகின்றன.

மறுப்பக்கமாக இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், இந்திய துடுப்பாட்டவீராங்கனைகளை சோபி எக்கில்ஸ்டோன் எவ்வாறு எதிர்கொள்கின்றார் என்பதிலும் நட்டாலி ஷிவர், ஹீதர் நைட் ஆகியோர் இந்திய பந்துவீச்சுவரிசையை எவ்வாறு எதிர்கொள்கின்றார்கள் என்பதிலேயே இங்கிலாந்தின் வெற்றி தங்கியுள்ளது.

இதேவேளை, சிட்னியில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், குழு பியில் முதலிடம் பெற்ற தென்னாபிரிக்கா, குழு ஏயில் இரண்டாமிடம் பெற்ற நடப்புச் சம்பியன்கள் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கின்றது.

அவுஸ்திரேலியா சார்பாக, பெத் மூனி, அலைஸா ஹீலி, மெக் லன்னிங், அஷ்லெய் கார்ட்னர், றேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரில் ஓரிருவர் பிரகாசிக்கும்போதும் அவ்வணி வெற்றிக்கனியை எட்டக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்தியாவுடன் தமது ஆரம்பப் போட்டியில் தோற்றமை காரணமாக ஓரளவு அழுத்தத்திலிருக்கும் அவுஸ்திரேலியாவை ஷப்னிம் இஸ்மைல் தலைமையிலான தென்னாபிரிக்க பந்துவீச்சு வரிசை சாய்க்கும் பட்சத்தில் தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற முடியும்.

சிட்னியில் நாளை மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், போட்டிகள் இடம்பெறாத பட்சத்தில் குழுநிலைப் போட்டிகளில் சிறந்த முடிவுகளின்படி இந்தியா, தென்னாபிரிக்கா இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும்.

இதேவேளை, வழமையாக ஐந்து ஓவர்கள் வரை மட்டுப்படுத்தப்பட்டு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று முடிவுகள் பெறப்படுகின்றபோதும் சர்வதேச கிரிக்கெட் சபையின் விலகல் முறையிலான போட்டிகளின்போது 10 ஓவர்கள் வரையான போட்டி நடைபெற்றே முடிவு பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .