2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிரேஸிலியன் குரான் பிறீ: வென்றார் வெர்ஸ்டப்பன்

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெர்சிடீஸ் அணியின் லூயிஸ் ஹமில்டனை இரண்டு தடவைகள் முந்தியிருந்த றெட் புல் அணியின் மக்ஸ் வெர்ஸ்டப்பன், நேற்றிரவு நடைபெற்ற பிரேஸிலிய குரான் பிறீயை வென்றார்.

இந்நிலையில், இப்பந்தயத்தில் நான்காமிடத்துக்கான போட்டியிட்ட பெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல், மொனாக்கோ ஓட்டுநரான சார்ள்ஸ் லெக்கலெர்க் ஆகியோர் மோதிக் கொண்டிருந்தனர்.

இதேவேளை, றெட் புல் அணியின் அலெக்ஸான்டர் அல்போனுடன் பிரித்தானிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன் மோதியிருந்ததுடன், அவரை முந்த விடாமல் தடுத்து டோரோ றோஸோ அணியின் பிரெஞ்சு ஓட்டுநரான பியரி கஸ்லி இரண்டாமிடத்தைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தாய்லாந்து ஓட்டுநரான அலெக்ஸான்டர் அல்போனுடனான மோதலுக்கான தவறை லூயிஸ் ஹமில்டன் ஏற்றுக் கொண்டிருந்த நிலையில், பந்தயம் முடிவடைந்த பின்னர் ஐந்து செக்கன்கள் தண்டத்தைப் பெற்றிருந்தார்.

அந்தவகையில், பந்தயத்தை மூன்றாமிடத்தில் முடித்துக் கொண்ட லூயிஸ் ஹமில்டன், ஏழாமிடத்துக்கு கீழிறக்கப்பட்டிருந்தார். மக்கலெரன் அணியின் ஸ்பெய்ன் ஓட்டுநரான கார்லோஸ் சைன்ஸ் மூன்றாமிடத்துக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தார்.

இப்பந்தயத்தை முதலாமிடத்திலிருந்து ஆரம்பித்திருந்த நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன் ஆரம்பத்திலேயே முன்னிலையுடன் சென்ற நிலையில், பந்தயத்தை மூன்றாமிடத்திலிருந்து ஆரம்பித்த லூயிஸ் ஹமில்டனால் பின்தொடரப்பட்டிருந்தார்.

இந்நிலையில், புதிய டயர்கள் மூலமாக மக்ஸ் வெர்ஸ்டப்பனை முந்தும் பொருட்டு 20ஆவது சுற்றில் தனது டயர்களை லூயிஸ் ஹமில்டன் மாற்றியிருந்தார்.

இதேவேளை, அடுத்த சுற்றில் டயர்களை மாற்றுவதற்காக சென்றிருந்த மக்ஸ் வெர்ஸ்டப்பன் மீண்டும் பந்தயத்தில் இணையும்போது வில்லியம்ஸ் அணியின் போலந்து ஓட்டுநரான றொபேர்ட் குபிக்காவால் தடுக்கப்பட்டிருந்தார்.

அந்தவகையில், லூயிஸ் ஹமில்டன் முன்னிலை பெற்றபோதும், பின்னர் மக்ஸ் வெர்ஸ்டப்பனால் முந்தப்பட்டிருந்தார்.

பின்னர் 53ஆவது சுற்றில் லூயிஸ் ஹமில்டனின் சக மெர்சிடீஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ், இயந்திரக் கோளாறு காரணமாக பந்தயத்திலிருந்து  விலகியிருந்த நிலையில், பாதுகாப்புக் கார் ஒழுங்கு நடைமுறைக்கு வந்திருந்தது.

அப்போது டயர்களை மாற்றுவதற்காக மக்ஸ் வெர்ஸ்டப்பன் சென்றபோது, தொடர்ந்தும் பந்தயத்தில் லூயிஸ் ஹமில்டன் இருந்திருந்தார்.

இந்நிலையில், 60ஆவது சுற்றில் மீண்டும் பந்தயம் ஆரம்பிக்கும்போது மீண்டும் லூயிஸ் ஹமில்டனை மக்ஸ் வெர்ஸ்டப்பன் முந்திச் சென்றிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .