2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

றியல் மட்ரிட்டை வென்றது சிற்றி

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் கூட்டமைப்பின் சம்பியன்ஸ் லீக் தொடரில், ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட்டின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இப்போட்டியின் முதற்பாதியின் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் கப்ரியல் ஜெஸூஸால் தன்னை நோக்கி நேராகச் செலுத்தப்பட்ட உதையை றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் திபோ கோர்துவா தடுத்திருந்தார்.

பின்னர் றியல் மட்ரிட்டின் முன்களவீரர் கரிம் பென்ஸீமாவால் கோல் கம்பத்தை நோக்கி தலையால் முட்டப்பட்ட பந்தானது மன்செஸ்டர் சிற்றியின் கோல் காப்பாளர் எடெர்சனால் தடுக்கப்பட்டு றியல் மட்ரிட்டின் இன்னொரு முன்களவீரர் வின்ஷியஸ் ஜூனியரிடம் சென்றபோதும் அவர் அதைக் கோலாக்கத் தவறியிருந்தார்.

இதேவேளை, போட்டியின் முதற்பாதி முடிவில் மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் கெவின் டி ப்ரூனேயால் செலுத்தப்பட்ட மூலையுதையை திபோ கோர்துவா தட்டிவிட அதை கப்ரியல் ஜெஸூஸ் கோல் கம்பத்தை நோக்கி மீண்டும் செலுத்திய நிலையில் றியல் மட்ரிட்டின் அணித்தலைவரும் பின்களவீரருமான சேர்ஜியோ றாமோஸ், மத்தியகளவீரர்களான கஸேமீரோ, பெடெரிக்கோ வல்வேர்டேயால் அக்கோல் பெற முடியாமல் தடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இரண்டாவது பாதியில் மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரர் றியால் மஹ்ரேஸ் கோல் கம்பத்துக்கு வெளியே செலுத்தியிருந்ததுடன், மேலுமொரு கோல் கம்பத்தை நோக்கிய உதையை நேரேயே திபோ கோர்துவாவிடம் செலுத்திய நிலையில் அவர் அதைத் தடுத்திருந்தார்.

இதேவேளை, மன்செஸ்டர் சிற்றியின் பந்துப்பரிமாற்றமொன்றை இடைமறித்து வின்ஷியஸ் ஜூனியர் வழங்கிய பந்தை போட்டியின் 60ஆவது நிமிடத்தில் கோலாக்கிய றியல் மட்ரிட்டின் முன்களவீரர் இஸ்கோ தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்ரூனேயிடமிருந்து பெற்ற பந்தை தலையால் முட்டிக் கோலாக்கிய கப்ரியல் ஜெஸூஸ் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தொடர்ந்து அடுத்த நான்காவது நிமிடத்தில், மாற்றுவீரராகக் களமிறங்கிய மன்செஸ்டர் சிற்றியின் முன்களவீரர் ரஹீம் ஸ்டேர்லிங்கை றியல் மட்ரிட்டின் பின்களவீரர் டனி கர்வகால் வீழ்த்திய நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை கெவின் டி ப்ரூனே கோலாக்க மன்செஸ்டர் சிற்றி முன்னிலை பெற்றது.

இந்நிலையில், போட்டி முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில் கப்ரியல் ஜெஸூஸை வீழ்த்திய சேர்ஜியோ றாமோஸ் சிவப்பு அட்டை காட்டப்பெற்று களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட்டை மன்செஸ்டர் சிற்றி வென்றது.

இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான ஜுவென்டஸ் தோல்வியடைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .