2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லிவர்பூலை வென்று காலிறுதியில் செல்சி

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான விலகல் முறையிலான இங்கிலாந்து கால்பந்தாட்டச் சங்க சவால் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற லிவர்பூலுடனான ஐந்தாவது சுற்றுப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே காலிறுதிப் போட்டிக்கு செல்சி தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் 12ஆவது நிமிடத்தில் செல்சியின் முன்களவீரர் வில்லியனின் கோல் கம்பத்தை நோக்கிய உதையை அபாரமாக லிவர்பூலின் கோல் காப்பாளர் அட்ரியன் தடுத்திருந்தபோதும், கோல் கம்பத்திலிருந்து 20 அடி தூரத்திலிருந்து கோல் கம்பத்தை நோக்கி அடுத்த நிமிடத்தில் வில்லியன் செலுத்திய உதையானது அட்ரியனில் பட்டு கோல் கம்பத்துக்குள் புகுந்த நிலையில் செல்சி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

பின்னர், லிவர்பூலின் முன்களவீரர் கோல் கம்பத்துக்கருகிலிருந்து கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய பந்தை செல்சியின் கோல் காப்பாளர் கெபா அரிஸபலாகா தடுத்திருந்ததுடன், அதைத் தொடர்ந்து அவரின் சக முன்களவீரர் டிவோக் ஒரிஜி, சக மத்தியகளவீரர் கேர்ட்டிஸ் ஜோன்ஸின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகளையும் கெபா அரிஸபலாகா தடுத்திருந்தார். 

இந்நிலையில், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் தனது அரைப்பகுதியிலிருந்து பந்துடன் சென்ற செல்சியின் மத்தியகளவீரர் றொஸ் பார்க்லி, கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து பெற்ற அபாரமான கோலால் தமது முன்னிலையை செல்சி இரட்டிப்பாக்கியிருந்தது.

பின்னர் மாற்றுவீரராகக் களமிறங்கிய செல்சியின் மத்தியகளவீரர் மேஸன் மெளன்ட், கோல் கம்பத்திலிருந்து 25 அடி தூரத்திலிருந்து செலுத்திய பிறீ கிக்கானது கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்ததுடன், செல்சியின் இன்னொரு முன்களவீரரான ஒலிவர் ஜிரூட் கோல் கம்பத்தை நோக்கிச் செலுத்திய உதையை அட்ரியன் அபாரமாகத் தடுத்திருந்த நிலையில், இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .