2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்ட நடப்புச் சம்பியன்கள்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்கள் லிவர்பூல் வெளியேற்றப்பட்டுள்ளது.

ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டின் மைதானத்தில் நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் பின்தங்கியிருந்த இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியின் 43ஆவது நிமிடத்தில் தமது மத்தியகளவீரர் ஜோர்ஜினியோ விஜ்நால்டும் தலையால் முட்டிப் பெற்ற கோலுடன் போட்டியின் வழமையான நேர முடிவில் 1-0 என முன்னிலையில் இருந்து 1-1 என மொத்த கோல் எண்ணிக்கை சமநிலையில் இருக்க போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

இந்நிலையில், மேலதிக நேரத்தின் நான்காவது நிமிடத்தில் தலையால் முட்டி கோலொன்றைப் பெற்ற லிவர்பூலின் முன்களவீரர் றொபேர்ட்டோ பெர்மினோ தனதணியின் முன்னிலையை இச்சுற்றில் இரட்டிப்பாக்கியதோடு மொத்த கோல் எண்ணிக்கையில் லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார்.

எவ்வாறெனினும், அடுத்த மூன்றாவது நிமிடத்தில் மாற்றுவீரராகக் களமிறங்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் மத்தியகளவீரரான மார்கோஸ் லொரன்டே இரண்டாம் சுற்றில் லிவர்பூலின் முன்னிலையை ஒரு கோலாகக் குறைத்ததுடன், மொத்த கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

தொடர்ந்து மேலதிக நேரத்தில் முதற்பாதி முடிவில் மேலுமொரு கோலைப் பெற்ற மார்கோஸ் லொரன்டே, இரண்டாம் சுற்று கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தியதுடன் மொத்த கோல் எண்ணிக்கையில் அத்லெட்டிகோ மட்ரிட்டுக்கு முன்னிலையை வழங்கினார்.

பின்னர் மேலதிக நேரம் முடிவடையும் தறுவாயில், மாற்றுவீரராகக் களமிறங்கிய அத்லெட்டிகோ மட்ரிட்டின் முன்களவீரரான அல்வரோ மொராட்டா பெற்ற கோலுடன் சுற்றை 3-2 என்ற கோல் கணக்கிலும், மொத்த கோல் எண்ணிக்கையில் 4-2 என்ற ரீதியிலும் லிவர்பூலை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு அத்லெட்டிகோ மட்ரிட் தகுதிபெற்றது.

இந்நிலையில், ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கியிருந்த பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைன், தமது மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்று 3-2 என்ற மொத்த கோலெண்ணிக்கை அடிப்படையில் காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நெய்மர், ஜுவான் பேர்னாட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X