2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றும் இளமையாக இருக்கும் 'சின்னமாமியே' புகழ் நித்தி கனகரத்தினம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'சிறந்த கலைஞனுக்கு சமூகம் நல்லதொரு அங்கிகாரத்தை வழங்குவதில்லை. எனது மண்ணில் நானும் அப்படிதான். பரிசையும் பாரட்டையும் எதிர்பார்த்து எதனையும் செய்பவன் நான் அல்ல. ஆனால் கலைஞனுக்குரிய அடையாளத்தை இந்த மண் எனக்கு தராமல் போனது. பல சமயங்களில் என்னைச் சார்ந்தவர்கள் எனது திறமைக்கு முட்டுக்கட்டைகளை இட்டனர். அவற்றை தகர்த்தெறிந்து என்னாலும் முடியும் என்பதை நிரூபித்து இன்று பாடகனாக, பாடலாசிரியனாக, ஆய்வாளனாக, மருத்துவனாக நான் வளர்ந்து நிற்கின்றேன்' என்கிறார் பொப்பிசைப் பிதா நித்திக்கனகரத்தினம்.

1967ஆம் ஆண்டு 'சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே...' எனும் பொப்பிசைப் பாடலை பாடியதன் மூலம் பலரது மனங்களில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் 'பொப்பிசை பிதா' நித்தி கனகரத்தினம். பல்வேறு திறமைகளை தனக்குள்ளே கொண்டிருந்தாலும் அவரை பொப்பிசை பாடகர் நித்தி கனகரத்தினமாக பலரிற்கு அறிமுகப்படுத்தியது இந்த 'சின்ன மாமியே...' பாடல்தான்.

தென்னிந்திய திரைப்பட பாடல்களில் கூட இப்பாடல் பல இடங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுற்றுலா செல்லும் குழுக்களில் இந்த பாடலை முணுமுணுக்காத வாய்கள் இல்லையென்றே கூறவேண்டும். இன்றும் கூட புலம்பெயர் நாடுகளில் உள்ள வானொலிகளில் நேயர்கள் அதிகமாக விரும்பிக் கேட்கும் பாடலாக இப்பாடல் உள்ளது. 43 வருடங்கள் கடந்த பின்னும் கூட இந்த பாடல் இளமையுடன் இருப்பது என்றால் அந்தப் பெருமை அந்தப் பாடலை இசைத்த குரல் நித்தி கனகரத்தினத்திற்கே போய்ச் சேர வேண்டும்.

இவர் பாடிய 'கள்ளுக்கடைப் பக்கம் போகாதே...' பாடல் சின்னமாமிக்கு அடுத்தபடியாக இவருக்கு புகழையும் பெயரையும் தேடிக்கொடுத்த பாடல். தமிழகத்தின் மது ஒழிப்பு பிரசாரத்திற்காக இப்பாடலை எம்ஜிஆர் பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்க பெருமைக்குரிய விடயமாகும். இசைதுறையின் அனுபம் குறைவாக இருந்தாலும் இவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் அவரை உலகம் முழுதும் அறியச் செய்துள்ளது.

இவர் சிறந்த பாடகர் என்பதை தாண்டி சிறந்த பாடலாசிரியர் என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும். 'கள்ளுக்கடை பக்கம் போகாதே...' என்ற பாடல் இவர் எழுதி இவரே இசையமைத்து பாடிய பாடல். அந்நிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற இவர் நல்லதொரு மொழி ஆய்வலராகவும் உள்ளார்.

நல்லதொரு பாடகராய் மட்டும் இல்லாமல், இதயம் குறித்த நோய்களும், உணவு பதனிடுதல் சம்பந்தமான விரிவுரையாளராகவும் கடமையாற்றுகிறார். தற்போது ஈடுப்பட்டிருக்கும் துறையாக ஆய்வுத்துறை காணப்படுகிறது. ஏனைய மொழிகளில் தமிழ் மொழியின் ஆதிக்கம் குறித்து இவரது ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

பல்வேறு திறமைகளை கொண்டிருந்தாலும் தனக்கான சரியான களமும் அங்கிகாரமும் தனது தாய் நாட்டிலே தனக்கு வழங்கப்படவில்லையென்ற ஆதங்கம் இவருக்குள் இருந்து கொண்டிருக்கிறது. பொதுவாக நல்லதொரு கலைஞனின் பின்புலத்தை மீட்டுப்பார்த்தால் அவனது வாழ்வில் இந்த சமூகம் அவனுக்கு வழங்கிய முட்டுக்கட்டைகளும் அவமானங்களும் எப்போதும் இருக்கும். அந்த அவமானங்களே அவனை நற்கலைஞனாக உருவாவதற்கு அடித்தளமிட்டிருக்கும். இந்த கலைஞனது வாழ்விலும் சமூகமும் முட்டுக்கட்டையாகவே அமைந்துள்ளது.

சரி... 'பொப்பிசை பிதா' நித்தி கனகரத்தினத்தின் நேர்காணலையும் அவரின் புகழ்பெற்ற 'சின்னமாமியே...' பாடலையும் காணொளியில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • suresh Friday, 15 October 2010 09:59 PM

    மிகவும் நல்ல பேட்டி. நித்தியை நேரில் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி . வாழ்க தமிழ் .

    Reply : 0       0

    sivanesan Saturday, 16 October 2010 02:38 AM

    இவரை கண்டது மிக்க மகிழ்சியாக இருக்கிறது. என்னுடைய வாத்தியாராக யாழ் மத்திய கல்லூரியில் இருந்தார். நான் இரண்டாம் குருக்கு; தெருவில் வசித்தேன். நீங்கள் சப்பல் தெருவில் இருந்தீர்கள். நான் இப்போது ஜெர்மனியில் முப்பது வருடமாய் இருக்கிறேன். sivanesan@arcor.de

    Reply : 0       0

    Ragavan Monday, 08 November 2010 03:53 PM

    திரு நித்தி கனகரட்னத்தை நாம் கௌரவிக்க விரும்புகிறோம். அவர் இலங்கையில் இருந்தால் தயவு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளவும் tamilwriters@hotmail.com

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .