2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டிஜிட்டல் துறையில் ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும்: ஓவியர் கோபிரமணன்

Kogilavani   / 2011 மே 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'டிஜிட்டல் யுகத்தினால் ஓவியத்துறை வீழ்ச்சியை நோக்கித்தள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல்துறை ஓவியங்களை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றதோ, எம்மை முன்னேறவிடாமல் செய்கின்றதோ, அதேயளவிற்கு டிஜிட்டல் துறைக்குள் ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே எனது  இலக்காகும்' என்கிறார் ஓவியர் கோபிரமணன்.

ஓவியம், சிற்பம், கவிதை, மிமிக்கிரி, மெஜிக் என பல துறைகளிலும் தனது திறமைகளை பறைசாற்றி வரும் இளம் கலைஞரான இவர், மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்டவர். கலைக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலேயே இவரை கலைகள் ஆக்கிரமித்துவிட்டன.

பல்துறைசார் கலைஞராக விளங்கினாலும் இவர் தம்மை வெளிப்படுத்தும் பிரதான கலைதுறையாக ஓவியத்தையே தேர்ந்தெடுத்துள்ளார். கிறுக்கல் சித்திரம், கற்பனைச் சித்திரம், வர்ணச் சிதறலினூடான சித்திரம், பார்த்துக் கீறும் சித்திரம் என பல கோணங்களிலிருந்து சித்திரம் வரைவது இவரது திறமையை பறைசாற்றி நிற்கின்றன.

திறமையை வெளிப்படுத்துவதற்குச் சான்றாக இருந்த இவரது ஓவியங்களில் பல, கடற்கோளில் கரைந்து போயின. எனினும் இவர் துவண்டுவிடாமல் மீண்டும் எழுந்து ஓவியத் துறையில் எழுச்சி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றார்.

வெறுமனே கலையை மட்டும் வாழ்க்கையாக கொள்ளாமல் பொதுத் தொண்டுகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் இவர், உளவடுக்களை நீக்கும் நிலையமான 'வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா'வில் சேவையாற்றி வருகின்றார்.

ஒரே தளத்தில் நின்று ஓவியனாகவும், கவிஞனாகவும் செயற்பட்டு ஓவியம் கலந்த கவிதைத் தொகுப்பொன்றை வெளியிடவேண்டும், அதேவேளை ஓவியம், சிற்பம் சார் கண்காட்சிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இவரது எதிர்கால கனவாக உள்ளது.

தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு கோபிரமணன் வழங்கிய நேர்காணல்  பின்வருமாறு:

கேள்வி : ஓவியக் கலையில் நீங்கள் எவ்வாறு உள்வாங்கப்பட்டீர்கள்?

பதில்: எனது தந்தை ஒரு கூத்துக் கலைஞர். இதனால் கலையென்பது சிறுவயதிலே எனது மனதில் பதிந்து போய்விட்டது. எனது தந்தை கூத்துக்களில் 'பீமன்' வேடத்தையே ஏற்பார். அவருக்கு அந்த பீமன் வேடம் மிகவும் பொருத்தமாக இருக்கும். எனது பெரிய தந்தை கூத்துக்குரிய ஒப்பனை கலைஞராக இருந்தார். அவர் ஒப்பனை வேலைகளில் ஈடுபடும்போது அதனை நான் அதிகமாக பார்த்திருக்கிறேன். பலர் என்னை எனது பெயர் கூறி அழைக்கமாட்டார்கள். 'பீமனின் மகன்' என்றே அழைப்பார்கள். இதுவே நாளடைவில் கலை மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

முதலில் நான் எனது தந்தையின் படங்களையே வரைவதற்கு ஆரம்பித்தேன். அவர் பீமன் வேடமிட்ட படங்களை அதிகமாக வரைந்திருக்கிறேன். பின்பு பாடசாலைக் காலங்களில் ஓவியப் போட்டிகளில் பங்குபற்றினேன். அந்நேரத்தில் இளம் ஓவியராக இருந்த  நிர்மலவாசனின் மாணவனாக இருந்தேன். ஓவியம் குறித்த பல விடயங்களை அவர் எனக்கு கற்பித்துக் கொடுத்தார். அவரின் வழிக்காட்டலில் 'தேநரேக ஓவிய ஒன்றியம்' எனும் அமைப்பில் தரம் 10இல் கல்வி கற்கும்போது இணைந்து கொண்டேன். இவ்வாறு சிறிதளவில் ஆரம்பித்ததுதான் என்னை இன்று இளம் ஓவியராக இனம் காட்ட வைத்துள்ளது.

கேள்வி: ஓவியத்தில் நீங்கள் மேற்கொண்ட புதுமுயற்சிகள், சாதனைகள் குறித்து கூறுங்கள்.

பதில்: ஓவியப் போட்டிகள் பலவற்றில் பங்குபற்றி பரிசில்களை வென்றுள்ளேன். எனது ஆக்கங்கள் அனைத்தும் சுனாமி ஏற்பட்டபோது கடலோடு போய்விட்டன. இனிவரும் காலங்களில்தான் ஓவியக் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யவேண்டும். இதைத் தவிர எனது ஓவியங்களை அமெரிக்கா, லண்டன் போன்ற வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளேன். 'கிரியேடிவ் ஸடுபிட்' எனும் நிறுவனத்தை நான் ஏற்படுத்தியுள்ளேன்.

 

கேள்வி: ஓவியங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கூறினீர்கள். நீங்கள் ஓவியத்தை ஒரு விற்பனைக் கலையாக பார்க்கின்றீர்களா?

பதில்: உண்மையில் நான் ஓவியக்கலையை விற்பனை கலையாக பார்க்கவில்லை. ஆனால் ஓவியம் ஒன்றை வரையவேண்டும் எனும் போது அதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு கைகளில் பணம் தேவைப்படுகின்றது. ஒவ்வொரு கலைஞனுக்கும் வருமானமின்மை என்பது இங்கு பெரியதொரு தடையாக காணப்படுகின்றது.

ஓவியர் ஒருவர் அதிகமான ஓவியங்களை வரைந்து அதனை அவரது வீட்டின் சுவற்றில் மாட்டியிருந்தால் மட்டும் போதுமா? அந்த ஓவியத்தை அவர் வெளியில் கொண்டு வரவேண்டும். காட்சிப்படுத்த வேண்டும். பலரது விமர்சனங்களை பெறவேண்டும். ஓவியங்களை இவ்வாறு வெளிக்கொணரும் போதே அது பலரது கவனத்தை ஈர்க்கக் கூடியதாக அமையும். இந்த நிலை ஓவியர்களின் வளர்ச்சியையும் புகழையும் தீர்மானிக்கின்றது.

அதேபோல், ஓவியத்தில் அதிக ஆர்வம் உடையவர்களுக்கு ஓவியங்களை இலவசமாக கொடுத்தால் அதனை பெற்றுக்கொள்ள மறுப்பார்கள். இது எனது அனுபவத்தில் நான் பார்த்த உண்மை. அவர்கள் அதனை பணத்தை செலுத்தியே வாங்க வேண்டுமென்று நினைக்கின்றார்கள். இதற்கு அவர்கள் கூறும் பதில் என்னவெனில், 'ஓர் ஓவியர் ஓவியமொன்றை வரைந்து அது பலரது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்பதற்காக அதிகமாக உழைக்கின்றார். அதிகமானவற்றை இழக்கின்றார். அவ்வாறு மிகவும் கடினப்பட்டு காலம், நேரம், முதலீடு என பலவற்றை இழந்து உருவாக்கும் ஓவியத்தை வெறுமனே நாங்கள் ரசிப்பதற்காக பணத்தை செலுத்தாமல் வாங்கி சென்றால் அது எங்கள் மனசாட்சியை கொன்று விடும்'  என தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறான விற்பனையானது ஓவியர்களுக்கு உற்சாகத்தையே வழங்குகின்றது. அதற்காக விற்பனை செய்வதற்காக ஓவியங்களை வரையவேண்டும் என்று நான் கூறவரவில்லை.

இதனை ஓர் அன்பளிப்பாக நாங்கள் நினைத்துக்கொள்ளலாம். அது தவறென்று நான் நினைக்கவில்லை.

கேள்வி:  கமெரா, டிஜிட்டல் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் வருகை ஓவியக் கலைக்கு ஒரு சவாலாக அமைந்துவிட்டது எனக் கருதுகிறீர்களா?

பதில்: நான் தரம் 8இல் கல்வி பயிலும் போதே ஓவியம் வரைவதற்கு ஆரம்பித்துவிட்டேன். அப்போது படகுகளுக்கு பெயரெழுதுவதற்கு ஓவியர்களே தேவைப்பட்டார்கள். ஆனால் இந்த டிஜிட்டல் உலகம் வந்தபோது அங்கு ஓவியர்களுக்கான வேலை குறைந்து விட்டது. கிழக்கிலங்கையில் அநேகமான ஓவியர்கள் படகுகளுக்கு பெயரெழுதிக் கொடுப்பதையே தமது தொழிலாக முன்னெடுத்தார்கள். ஆனால் அந்த நிலை டிஜிட்டல் துறையின் வருகையுடன் இன்று இல்லாமல் போய்விட்டது.
மன்னர்கள் ஆட்சி செய்த காலங்களில் ஒருவரை பார்த்து அச்சுப்பதித்தது போன்று வரைந்த சித்திரங்களை சுவர்களில் தொங்கவிட்டு அழகு பார்த்தார்கள். அதற்குள் ஓவியத்தின் வான்மை மிகச் சிறப்பாகத் தெரியும். அந்த ஓவியத்தில் ஓவியரின் கைப்பக்குவம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அது பார்வைக்கு விருந்தளிப்பதாக அமைந்திருக்கும். அந்த ஓவியத்தில் ஓர் உயிரோட்டம் காணப்படும். ஆனால், இப்போது அவ்வாறான ஓவியங்கள் வேண்டுமானால் ஒருவரைப் பார்த்து நிற்கச்சொல்லி அவரை டிஜிட்டல் கமெராவினூடாக படம் பிடித்து அதனை தொழில் நுட்ப சாதனங்களின் உதவியுடன் மாற்றி சுவர்களில் இயற்கையாக வரைந்த சித்திரத்தை போல மாற்றிவிடுகின்றார்கள். எனவே டிஜிட்டலினால் ஓவியத்துறை வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டுவிட்டது.

கேள்வி : இலங்கையில் ஏராளமான ஓவியர்கள் இருந்தாலும் அவர்கள் இன்னும் வெளியே அறியப்படாமல் இருக்கின்றார்களே? இதற்கான காரணம் என்ன?

பதில்:  அதிகமான ஓவியர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் உண்மையில் வெளிக்கொணரப்படாமலே இருக்கின்றார்கள். சிலர் படங்களை வரைந்து விட்டு அவர்களது வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறு வீட்டினுள்ளே தங்களது படைப்புகளை முடக்கி வைத்துவிட்டால் யாரிடம் அந்த படைப்பு போய்ச் சேரும்?

இதைத்தவிர சில ஓவியர்கள் புதிய புதிய நுட்பங்களுடன் தற்காலத்திற்கு ஏற்ற வகையில் வரைந்து வருகின்றார்கள். ஆனால், இந்த பழமை பேணும் சமூகம் அந்த ஓவியங்களுக்கு சரியான வரவேற்பை வழங்குவதற்கு தவறுகின்றது. இது ஒரு விரக்தி நிலைக்கு அவர்களை தள்ளுவதற்கு அடித்தளமிடுகின்றது.

கேள்வி : எவ்வாறான ஓவியங்களுக்கு இந்தச் சமூகம் முன்னுரிமையை கொடுக்கின்றது எனக் கருதுகிறீர்கள்?

பதில்: ஒன்றைப் பார்த்து வரைவதுதான் ஓவியம் என்ற கருத்து அநேகமானவர்களின் மனதில் வேறூன்றி போய்க் கிடக்கின்றது. இதனால் புதிதாக திட்டமிட்டு வெளிக்கொண்டுவரப்படும் படைப்புகளுக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படாமல் போய்விடுகின்றது. இன்னும் அரசர் காலங்களில் ஒருவரை பார்த்து வரைந்து வைத்த ஓவியங்கள்தான் உண்மையான கருத்துமிக்க ஓவியமாக பார்க்கும் நிலைமையே இருந்துகொண்டு வருகின்றது.

நாங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் கருத்துக்கள் மிக்க ஓவியங்களை வரையும் போது அதை பார்க்கும் பார்வையாளர்கள் 'இது பைத்தியகாரத்தனமாக இருக்கின்றது' என்று விமர்சித்துவிட்டுச் செல்கின்றனர். ஓவியத்தில் ஏற்படுத்தும் புது முயற்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு இன்னும் எமது சமுதாயத்திற்கு வரவில்லை.

ஒருவரை அச்சுப்பிசகாமல் அப்படியே பார்த்து வரையும் ஓவியங்கள், இயற்கைக் காட்சிகள் இவற்றை மட்டுமே இந்த சமூகம் விரும்புகின்றது. அதுதான் ஓவியம் என்ற கருத்தே அவர்களது மனதில் வேறூன்றிப் போயுள்ளது. நாங்கள் எவ்வளவுதான் புதிய முயற்சிகளை எடுத்தாலும் அந்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் நல்லதொரு அங்கீகாரத்தை வழங்கத் தவறுகின்றது.

நவீன ஓவியங்கள் இங்கு இன்னும் வளராமலும், பலராலும் அறியப்படாமலும்  இருப்பதற்கு இதுவே காரணம். நவீன பாங்கில் வரையும் ஓவியங்கள் அவர்களுக்கு சிறுபிள்ளைதனமாக தெரிகின்றது. ஒரு கிறுக்கலினூடாக பல விடயங்களை கூறமுடியும். ஆனால் அந்த கிறுக்கலை கொண்டு சென்று ஓர் ஆசிரியரிடம் காட்டினால் இது தரம் 1 பிள்ளை வரைந்த ஓவியம் என்று கூறுகிறார். இதே ஓவியத்தை வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவரிடம் நீட்டினால் அவர் அதற்கு நல்ல விமர்சனத்தை வழங்கி, நல்ல விலையை கொடுத்து வாங்கிச் செல்கின்றார். அதேபோல் நல்ல ஓவியரிடம் கொண்டு காட்டினால் அவர் அந்த ஓவியத்தின் கருப்பொருளை விளங்கிக்கொள்வார். இதுதான் ஓவியம் சாரந்த சமூகத்தின் நிலைப்பாடாக உள்ளது.

கேள்வி: நவீன ஓவியம் பற்றியும் அதற்கு எமது சமூகத்தில் கொடுக்கப்படும் வரவேற்புக் குறித்தும் கூறுங்கள்.

பதில்: ஓவியத் துறையில் நவீன ஓவியமென்பது இலகுவாக ஒரு விடயத்தை கூறக்கூடியது. நவீன ஓவியங்களை கீறும்போது அதனது கருத்துக்கள் இலகுவாக பிரதிபலித்துவிடும். நவீன ஓவியத்தில் ஒரு சிறு புள்ளிகூட ஒரு விடயத்தையே கூறுகின்றது.

உதாரணத்திற்கு தாயும் சேயும் பற்றிய ஓவியமென்றால் அனைவரும் நினைப்பது ஒரு தாய் சேய்க்கு பாலூட்ட வேண்டும் என்று. ஆனால் நவீன ஓவியத்தில் ஒரு பெரிய வட்டத்திற்குள் சிறிய வட்டமொன்றை வரைந்தால் அதுவே தாய், சேயை பிரதிபலிப்பதாக அமையும். எனவே கருத்துக்களை இலகுவாக பிரதிபலிக்கக் கூடிய வகையில் இந்த நவீன ஓவியங்கள் அமைந்துள்ளன.

வெளிநாடுகளில் இந்த நவீன ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இலங்கையில் இப்போதுதான் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் நவீன ஓவியம் பற்றிய சிந்தனை பரப்பப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில் இலங்கையிலும் இத்தகைய நவீன ஓவியர்கள் அதிகமாக உருவாகலாம்.

தற்போதைக்கு இங்கும் நவீன ஓவியங்களை வரையும் ஓவியர்களாக கிக்கோ, நிர்மலவாசன் ஆகியோர் காணப்படுகின்றனர். 

கேள்வி: ஓவியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

பதில்: ஓர் ஓவியர் வரையும் படம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். ஓவியம், ஓவியரை படமாக்க வேண்டும். இது என்னவென்றால், ஓர் ஓவியரால் வரையப்படும் ஓவியம் இந்த ஓவியரால்தான் வரையப்பட்டது என்று கூறப்படும் அளவிற்கு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டும். இவ்வாறு வரைந்தால்தான் ஓவியர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உடைத்து முன்னேறி வரலாம். உண்மையில் ஒவ்வொரு ஓவியரும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. போராட வேண்டியுள்ளது.

ஒரு பார்வையாளர் ஓவியமொன்றை பார்த்து 'இது நவீன ஓவியம்தானே! இது எனக்கு பிடிக்கவில்லை' என்றால் அதை பார்த்து ஓவியர் சலித்துபோய்விடக் கூடாது. அதைத் தாண்டி எழுந்து வரவேண்டும். நவீன ஓவியங்களுக்கு எமது சமுதாயத்தில் நல்ல மதிப்பு இல்லை. இதே நவீன ஓவியங்களை வெளிநாட்டவர்கள் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி வாங்கிக் கொண்டு செல்கின்றனர். அதுபெரியதொரு சவால். அந்த சவாலை இந்த சமூகத்தினர் எதிர்கொள்ளாவிட்டால் நாம் அப்படியே எம்மை மழுங்கடித்துக் கொள்கின்றோம் என்று நினைத்துக் கொள்ளவேண்டியதுதான்.

கேள்வி: ஓவியத்துறையில் நீங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கபோகும் திட்டங்கள் குறித்து கூறுங்கள்?

பதில்: டிஜிட்டலினால் ஓவியத்துறை வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. டிஜிட்டல் நுட்பத்தின் வருகையினால் ஓவியக்கலை எவ்வளவு வீழ்த்தப்படுகின்றதோ அதற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு என் ஓவியங்களை மாற்றியமைக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

டிஜிட்டல்துறை ஓவியங்களை எவ்வளவு ஆக்கிரமிக்கின்றதோ, எம்மை முன்னேறவிடாமல் செய்கின்றதோ, அதேயளவிற்கு டிஜிட்டல் துறையில் ஓவியங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதாவது அனிமேஷன் போன்ற துறைகளில் ஓவியங்களின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டும். அதுவே எனது இலக்காகும்.

கேள்வி: இறுதியாக நீங்கள் கூற விரும்புவது?

பதில்: ஓவியர் எனும்போது அவர் வெளியுலகிற்கு வரவேண்டும். அடுக்கடுக்காக ஓவியங்களை வரைந்து வீட்டிலே உறங்கவைத்துக் கொண்டு நான் ஓவியரென்று பறைசாற்றி திரிவதில் அர்த்தம் இல்லை. இப்படியிருந்தால் இலை மறை காயாக வாழவேண்டிய நிலைதான் ஏற்படும். ஓர் ஓவியர் வரையும் ஓவியமானது யாரேனும் ஒருவருக்கு பிரயோசனப்படுவதாக அமையவேண்டும்.

நேர்காணல்: க.கோகிலவாணி

pix by: Kushan pathiraja

கோபிரமணனின் கை வண்ணத்தில் எழுந்த ஓவியங்கள்...


You May Also Like

  Comments - 0

  • Music director rajkumar Tuesday, 24 May 2011 01:55 AM

    உண்மையில் என்னை வியக்க வைத்தவர்கள் வரிசையில் உயரமான இடத்தில் நிற்கும் ஒரு கலைஞன் கோபிரமணன் அவர்கள்.பல்துறை சார் திறன்களை சரியான பாதையில் இட்டுச் சென்று அதில் வெற்றியும் காண்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது.சாத்தியப்படுத்தல் என்பது சாத்தியமாகாது என பிறர் கணிக்கும் விடயங்களை சாத்தியப்படுத்துவது தான். இதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    கோபிரமணனின் பயணம் சாதாரண பயணம் அல்ல.மாறாக கலைக்குள் தன்னைப் பணயம் வைத்து செய்யும் பயணம்.இவரது சாதனைகளுக்கு வாழ்த்துக்கள்.

    இசையமைப்பாளர் ராஜ்குமார்

    Reply : 0       0

    m.senthuran Wednesday, 25 May 2011 12:51 AM

    நண்பா உன்னை நினைத்து நான் மிகவும் பெருமை படுகிறேன். காரணம், நீ என் நண்பனாக இருப்பதால் உன் பனி தொடர என் வாழ்த்துக்கள்.
    நண்பன்
    செந்தூரன்

    Reply : 0       0

    Theesan Wednesday, 25 May 2011 07:08 PM

    வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்

    Reply : 0       0

    arafathaik Thursday, 18 August 2011 07:15 PM

    தொடரட்டும் உங்கள் பணி....வாழ்த்துகள்

    Reply : 0       0

    dinesh Tuesday, 03 April 2012 05:52 PM

    கோபி அண்ணா நீங்கள் இன்னும் உங்களது முன்னேட்ட செயட்படுகளை எதிர்கொண்டு மேலும் மேலும் புதிதானவைகளை திறனோடு செய்து மட்டக்களப்புக்கு மட்டுமில்லாமல் மாநிலமெங்கும் மறைந்த்திருகும் கலைஞர்களுக்கு ஒரு புது சக்தியை கொடுத்து உங்கள் வாழ்வில் தலைத்தூங்கி எழுச்சி பெற மனமார பாராட்டி வாழ்த்துகிறேன்- - தினேஷ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X