2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜனநாயக நாடு என்றாலும் எழுத்துக்கு இங்கு சுதந்திரம் இல்லை: மருதூர் அன்சார்

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


'எழுத்திலும் ஒரு சுதந்திர நிலை இல்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல விடயங்களை கூற விளையும்போது எமது பேனாமுனை கட்டுண்டு விடுகின்றது. அதனால் எழுத நினைக்கும் விடயங்களை சுதந்திரமாக கூறமுடிவதில்லை. ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றார்கள். ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு எழுத்துக்கு சுதந்திரம் இல்லை' என்கிறார் ஏ.எல்.அன்சார்.

'மருதூர் அன்சார்' என்ற புனைப் பெயருடன் அம்பாறை, மருதூருக்கு ஒரு கலைஞனாக நின்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார் ஏ.எல்.அன்சார்.

'கவிக்குயில்', 'சானறிழா', 'தென்றல்', 'இளவரசர்' போன்ற பல பெயர்களிலும் இவரது படைப்புகள் ஆர்வலர்களை சென்றடைந்துள்ளன.
கவிஞர், அறிவிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்துறைசார் கலைஞராக மிளிரும் இவர், 'மலரும் மொட்டுக்கள்', 'கனவுகள் தொடரும்' ஆகிய இரு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஒன்று திரட்டி 'உன்னை நினைப்பதற்கு'  என்ற கவிதை தொகுதியொன்றையும் இவரது அமைப்பினூடாக வெளியிட்டுள்ளார்.

தமிழ்- முஸ்லிம்களின் உறவை வலுப்படுத்தும் விதமாக இவர் இயற்றிய 'மங்கா' குறுந்திரைப்படம் வெகுவிரைவில் வெளிவரவுள்ளது.
இவரை தமிழ்மிரரின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதியில் நேர்கண்டபோது அவர் பகிர்ந்துகொண்டவை,


கேள்வி:- கவிஞர், நடிகர், அறிவிப்பாளர் என பல்துறைசார் கலைஞராக விளங்கினாலும் மக்கள் மத்தியில் உங்களுக்கான அறிதலை அதிகமாக ஏற்படுத்திய துறையாக எதனை கருதுகின்றீர்கள்?


பதில்:- கவிதை என்று கூறி அறிவிப்புத் துறையை ஒதுக்கிவிட விரும்பவில்லை. அதேபோல் அறிவிப்புத்துறை என்று கூறி கவிதையை ஒதுக்கிவிட விரும்பவில்லை. எல்லாமே நான் பெற்ற செல்வங்கள் என்றுதான் கூறவேண்டும். நான் அறிவிப்பாளனாக இருக்கும்போது ஏ.எல்.அன்சார் என்ற பெயரில் அதிகமான ஜனரஞ்சக விடயங்களை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளேன். அதேபோல் மருதூர் அன்சார் என்ற பெயரில் கவிதைகளை வழங்கியுள்ளேன். அறிவிப்புத்துறையினூடாக அதிகமானோரின் அறிதல் கிடைத்துள்ளது. எழுத்துத் துறையினூடாக நிறைய விருதுகள் கிடைத்துள்ளன.

நான் தேர்ந்தெடுத்த அனைத்து துறைகளுமே என்னை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்ற துறைகளென்றே கூறவேண்டும்.


கேள்வி:- ஒரு கவிஞர் எவ்வாறான சவால்களை எதிர்கொள்கிறார்?


பதில்:- ஒரு கவிஞர் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள் என்றால் அது கவிதை தொகுதிகளை வெளியிடுவதுதான். அநேகமான கலைஞர்கள்; தமது தொகுதிகளை வெளியிடுவதில் பொருளாதார பிரச்சினையை எதிர்கொள்பவர்களாகதான் இருக்கின்றார்கள்.

குறிப்பாக ஊடகத்துறையை நேசிப்பவர்களும் எழுத்துத்துறையை நேசிப்பவர்களும் பிரதானமாக எதிர்கொள்ளும் பாரிய சவால் என்றால் அது பொருளாதார நெருக்கடிதான்.

இந்த பொருளாதார பிரச்சினையையும் தாண்டி கவிதையை வெளியிட நினைக்கும்போது மற்றுமொரு பிரச்சினையை   வளர்ந்து வரும் கவிஞர்கள் எதிர்கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

வளர்ந்து வரும் கவிஞர் ஒரு கவிதை தொகுதியை வெளியிடுகிறார் என்றால் அங்கே மூத்த கலைஞர்கள் செல்லமாட்டார்கள். அப்படியே சென்றாலும்கூட சரியான பங்களிப்பை வழங்கமாட்டார்கள்.

அதேபோலதான் ஊடகவியலாளர்கள். எல்லோரையும் கூறவில்லை. ஓர் அமைச்;சரின் நிகழ்வென்றால் வரிந்துகட்டிக்கொண்டு செல்லும் சில ஊடகவியலாளர்கள் இவ்வாறான கலைசார் நிகழ்வுகள் என்று வரும்போது அங்கு செல்வதற்கு முன்வருவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். ஒருசில ஊடகங்களை தவிர பல ஊடகங்கள் கலை நிகழ்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படியே ஊடகங்கள் கலை நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தாலும் மேலிடத்தின் பணிப்பின் காரணமாக இவ்வாறான நிகழ்வுகளை கைவிடும் நிலையும் காணப்படுகின்றது. இந்த நிலை மாறவேண்டும்.


கேள்வி:- வளர்ந்து வரும் கலைஞர் என்ற முறையில் எழுத்துத் துறையில் உங்களை நீங்கள் தக்க வைத்துக்கொள்வதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் குறித்து கூறமுடியுமா?

பதில்:- நான் வளர்ந்துவிட்டேனா அல்லது வளர்ந்துகொண்டு வருகின்றேனா என்ற சந்தேகம் எப்போதும் எனக்குள்ளே இருந்துக்கொண்டுதான் இருக்கின்றது. நான் ஆயிரம் கவிதைகள் எழுதியிருந்தாலும் அதேபோல் அறிவிப்பாளனாக இருந்தாலும் இன்னும் நான் ஒரு ரசிகன்தான்.

எத்தனை கவிதைகள் நான் எழுதியிருந்தாலும் என் கவிதைகளில் திருப்திநிலை என்பது இன்னும் ஏற்படவில்லை. என்னுடைய கவிதைகளை வாசித்த பலர் சிறப்பாக உள்ளதாக விமரசித்துள்ளனர். திருப்தி எப்போது ஏற்படும் என்று தெரியாது. ஆனால் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

கவிதை மூலமாக இலாபத்;தை பெருக்கவேண்டுமென்று ஒரு சாராரும், கவிதையினூடாக தனது பெயர் பேசப்படவேண்டுமென்று ஒருசாராரும் கவிதை என்பதே என்னவென்று தெரியாமல் ஒருசாராரும் எழுதிகொண்டு இருக்கின்றார்கள்.

என்னைப்பொறுத்தவரை கவிதைக்கும் ஊடக தர்மமென்பது இருக்க வேண்டும். கவிதை, எழுத்துத்துறை எதுவாக இருந்தாலும் அதில் ஊடகதர்மம் அவசியமானது.

நான்கு வரியில் ஒரு கவிதை எழுதினாலும் அந்த கவிதை சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த தாக்கமானது சமூகத்தில் சீர்திருத்தத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

என்னுடைய கைகளில் பேனை இருக்கின்றது என்பதற்காக எதையும் எழுத முடியாது. அதேபோல் குரல் வளம் இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் பேச முடியாது. சமூகத்திற்கு தேவையான நல்லவிடயங்களை எனது பேனா முனை எழுதிக்கொண்டு இருக்கின்றது.


கேள்வி:- கவிதைகள், சிறுகதைகளை எழுதும் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கூறமுடிமா?


பதில்:- கவிதை எழுதும் போது எந்த தடைகளையும் நான் எதிர்கொள்ளவில்லை. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை 'கழுவின மீனில் நழுவின மீனைப்' போலத்தான் அநேகமான எழுத்தாளர்களும் அரிசியல்வாதிகளும் இருக்கின்றனர். இவ்வாறானவர்கள் முக்கியமான இடத்தில் நின்றுகொண்டு சொல்ல வேண்டிய விடயங்களை சொல்லாமல் விடும்போது அதனை நாங்;கள் ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சொல்ல விளைகிறோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எங்களது கைகளுக்கும் விலங்கிடப்படுகின்றது.

எழுத்திலும் ஒரு சுதந்திர நிலை இல்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல விடயங்களை கூற விளையும்போது எமது பேனாமுனை கட்டுண்டு விடுகின்றது. அதனால் எழுத நினைக்கும் விடயங்களை சுதந்திரமாக கூறமுடிவதில்லை. ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கிறார்கள். ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு எழுத்துக்கு ஒரு சுதந்திரம் இல்லை.

கேள்வி: எதற்கும் மாற்று நிலைகாணப்படுவது போல சுந்திரமாக கூறமுடியாத விடயங்களை வேறுவடிவில் எடுத்துரைப்பதற்கு பல வடிவங்கள் எழுத்துத் துறையிலும் காணப்படுகின்றன. இவற்றை எழுத்துலகில் முயன்று பார்க்கலாமே?

பதில்:- இதனையும் முயன்று பார்க்கலாம். ஆனால், அதனை உள்வாங்கிக்கொள்பவர்கள் அரிது. இன்று இளைஞர்கள் பலர் முதுகெலும்பு இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். நாங்;கள் ஒரு விடயத்தை மறைமுகமாக கூறினாலும் அதனை ஏனோதானோ என்று பார்த்துவிட்டு அந்த இடத்திலே மறந்து விட்டு செல்கின்றார். அவ்வாறான படைப்புகளை ஆழ சிந்தித்து தமது வாழ்விலும் அதனை உள்வாங்கிக்கொண்டு சமூகத்தின் சீர்நிலையில் தாமும் பங்கேற்போம் என்ற நிலையில் தற்போதைய பல இளைஞர்கள் இல்லையென்றே கூறவேண்டும். இந்த இடத்தில் நாங்கள் ஏன் எழுதுகின்றோம் என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலை மாறவேண்டும். ஒரு விடயத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் அதன் ஆழமான கருத்துக்களை விளங்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். சிந்தித்து செயற்பட வேண்டும்.


கேள்வி:- கவிதை வடிவங்களில் உங்களுக்கென நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கவிதை வடிவம் எது?


பதில்:- புதுக்கவிதை, மரபுக் கவிதை, நவீன கவிதை என அனைத்து கவிதை வடிவங்களையும் நேசிக்கின்றேன். அதேபோல இந்த வடிவங்களில் கவிதை எழுதுபவர்களையும் நான் நேசிக்கின்றேன். எனது எழுத்துலக பிரவேசம் புதுக்கவிதையிலே ஆரம்பமானது.

மரபுக் கவிதை எழுதலாம். மரபுக் கவிதை எனும் போது எல்லோருக்கும் விளங்கிடுவது இல்லை.
உதாரணத்திற்கு ஒன்றை கூறலாம். உலகம் என்றால் எல்லோருக்கும் விளங்கும். அதையே பரம் என்றால் விளங்காது. புதுக்கவிதைகளை தற்போதைய சந்ததி இலகுவாக விளங்கிக்கொள்ளும். என்னைப்பொறுத்தவரை நான் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் புதுக்கவிதையையும் எழுதுவேன். மரபுக் கவிதையையும் எழுதுவேன்.

கேள்வி: உங்களது நடிப்புத்துறை சார்ந்து கூறுங்கள்?

பதில்:- நாடகங்களுக்கு நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் என்னுடைய வேலைப்பளு காரணமாக என்னால் அவற்றுக்கு நடிக்க முடியாத ஒரு துரதிஷ்ட நிலை காணப்படுகின்றது.

நோன்பு பெருநாளின்போது நாடகம் ஒன்றில் வைத்தியர் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. வானொலியில் இதுவரையில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.

அந்த வானொலி நிகழ்ச்சிகளினூடாக மருதூர் அன்சாரின் குரல் மட்டுமே பலருக்கு பரீட்சயமாகியிருக்கும். ஆனால், வைத்தியர் பாத்திரத்தின் பின் என்னைப் பற்றி பலர் அறிந்துகொண்டனர். என்னிடம் நடிப்புத்திறமையும் சிறப்பாக காணப்படுவதாக சிலர் வாழ்த்தினர்.

அறிவிப்பினூடாக பலருக்கு எமது குரல் நன்கு பரீட்சயமாகியிருக்கும். அதனூடாக தினம் நாம்;
ஒவ்வொருவரினதும் வீடுகளுக்கு சென்று விடுகிறோம். ஆனால் நாடகங்களில் நடிப்பதனூடாக அதகிமானவர்கள் இவர்தான் அன்சார் என்பதை அறிந்துகொண்டுள்ளனர். எனது நடிப்பிற்கு கிடைக்கப்பெற்ற பாராட்டுதல்களை என்னால் மறக்க முடியாது. இரண்டு கரங்களும் கூடும்போது கிடைக்கும் பாராட்டுதல்களைவிட பெரிதான ஒரு விடயம் இல்லையென்றே கூறவேண்டும். அந்த கரகோஷங்கள் கலைஞனுக்கான மகுடங்கள். 

கேள்வி:- கலைத்துறைசார்ந்து நீங்கள் செய்யும் சமூகசேவைகள் குறித்து கூறுமுடியுமா?


பதில்:- வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை நான் அதிகமாக நேசிக்கின்றேன். புதிய எழுத்தாளர்களின் வரவு மங்கிக்கொண்டு செல்கின்றது. ஆனால் வருகின்ற எழுத்தாளர்களை தட்டிக்கொடுத்து எழுத்து துறையில் அவர்களுக்கேயான ஓர் இடத்தை தக்கச்செய்வதற்கான பல்வேறு முயற்சிகளில் நான் ஈடுபட்டு வருகின்றேன்.

'உன்னை நினைப்பதற்கு' என்ற கவிதை தொகுதியினூடாக பல கவிஞர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இந்த தொகுதியை எனது தனிப்பட்ட தொகுதியாக வெளியிட்டிருந்தால் எனக்கு விருது கிடைத்திருக்கும். விருதுகளுக்கு ஆசைப்பட்டவன் நானல்ல. என்னுடைய  'கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஊடக வலைப்பின்னல்; நிறுவனத்தினூடாக வருடா வருடம் 'ஒற்றுமைக்கான உறவுப் பாலம்' என்ற மகுடத்ததுடன் பல்துறைசார்ந்தவர்களையும் நாம் கௌரவித்து வருகின்றோம்.

எதிர்வரும் 2013ஆம் ஆண்டு கல்முனையில் விருது வழங்கும் நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் நான் தலைவராக பொறுப்பேற்று ஏழு வருடங்கள் ஆகின்றன. இந்நிறுவனத்தினூடாக பல எழுத்தாளர்களின் நூல்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

இதேபோல் அறிவிப்புத்துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர்களுக்கு அத்துறைசார்ந்த பயிற்சிகளை வழங்கி அவர்களை பல ஊடகங்களில் இணைத்துவிட்ட பெருமை எமது நிறுவனத்துக்கு உண்டு.

எதிர்வரும் காலத்தில் நாடகக்கலையை வளர்ப்பதற்காக நாடகக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான எண்ணம் உள்ளது.

நேர்காணல்:- க.கோகிலவாணி
படங்கள்:- குஷான்பதிராஜ, பிரதீப் பத்திரண


You May Also Like

  Comments - 0

  • subair Sunday, 20 January 2013 03:39 PM

    உமது கருத்து உமக்கு ஊருக்கு மட்டும் தனா? உமக்கு இல்லையா?

    Reply : 0       0

    Kamal Monday, 28 January 2013 05:29 PM

    கேள்வி:- வளர்ந்து வரும் கலைஞர் என்ற முறையில் எழுத்துத் துறையில் உங்களை நீங்கள் தக்க வைத்துக்கொள்வதற்காக எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் குறித்து கூறமுடியுமா?

    பதில்:- நான் வளர்ந்துவிட்டேனா?

    நீங்கள் வளர்ந்துவிட்டதாக உங்களுக்கு நினைப்பு. கேள்வியை மறுபடி பார்க்கவும்.

    கமலசபேசன்

    Reply : 0       0

    aram Saturday, 16 February 2013 03:04 AM

    இது போட்டோ விளம்பரம் போல் இருக்கு,கடுமையாகத்தான் எக்சன் கொடுத்திருக்கிறீர்.
    நீங்கள் வளர்ந்துவிட்டதாக உங்களுக்கு நினைப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X