2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

2020 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல், பொருளாதாரம், அபிவிருத்தி, வாழ்க்கைத் தேர்ச்சி, கல்வி, முன்னேற்றம் எனப் பல புதிய எதிர்பார்ப்புகள், சிந்தனைகளுடன், இந்த இரட்டை 20 புத்தாண்டு பிறந்திருக்கிறது. 

2020ஆம் ஆண்டு பிறக்கும் போதே, கும்பத்தில் சந்திரன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய், தனுசு லக்னத்தில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் என, கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

2020ஆம் புத்தாண்டில், முக்கியமான கிரகப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சிதான். ஆண்டின் ஆரம்ப மாதமான ஜனவரியிலேயே, தனுசு இராசியில் இருந்து மகரத்துக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான், தனுசு இராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். 
அதிசாரமாக மகரத்துக்குச்  சென்று சில மாதம் சஞ்சரிக்கிறார். பின்னர், தனுசுக்கு வந்து மீண்டும் ஆண்டு இறுதியில் மகரத்துக்கு இடம்பெயர்கிறார். 

ராகு - கேது பெயர்ச்சி, 2020ஆம் ஆண்டில் இல்லை. இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சிப்படி, மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிக்காரர்களுக்கும் புத்தாண்டு பலன்கள் தனித்தனியாக வழங்கப்படுகின்றது.

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ இராசிக்காரர்களே, பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு, அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. சனி பகவான், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டுக்கு  வரப்போகிறார். பத்தாம் அதிபதி, பத்தில் அமரப்போகிறார். குருபகவான் பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில்  அமரப்போகிறார். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். 

உங்களது தன்னம்பிக்கை கூடும். நீங்கள் பட்ட கடன்கள் அடைபடும். திருமணம் கைகூடிவரும். அரசாங்கத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு, அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. 

தொழில் செய்வர்களுக்கு இலாபம் கூடும். 90 கிட்ஸ்கள் கவலைப்பட வேண்டாம். 2020இல் பலருக்கு கெட்டிமேளம் கொட்டும். திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்துக்காகத் தவமிருப்பவர்களுக்கு, கை மேல் பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். மொத்தத்தில்,  2020ஆம் புத்தாண்டு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. 

மலைமேல் இருக்கும் முருகனை தரிசனம் செய்யுங்கள்.

ரிஷபம் 

சுக்கிரனை இராசி நாதனாகக் கொண்ட ரிஷப இராசிக்காரர்களே, ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது என்று பாடப்போகிறீர்கள். காரணம், அஷ்டம சனி இடப்பெயர்ச்சியாகி, பாக்ய சனியாக ஒன்பதாம் வீட்டில் அமரப்போகிறார். அதிர்ஷ்டம் கைகூடி வரப்போகிறது. 

தடைப்பட்டு வந்த காரியங்கள், தடங்கள் இன்றி நிறைவேறும். குருபகவான் 8இல் அமர்வதால், கவலை வேண்டாம். அவரும் அதிசாரமாகவும் வருட இறுதியிலும் ஒன்பதாம் வீட்டுக்கு மாறுவதால், பொருளாதார வளர்ச்சி அதி அற்புதமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த நெருக்கடிகள் விலகும். 

கடன்கள் குறையும். சினிமா, ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையும். காரணம், 2ஆம் வீட்டில் உள்ள ராகு மீது குருவின் பார்வை விழுவதால், வெற்றிகள் தேடி வரும். அறுபடை வீட்டுக்கும் சென்று வாருங்கள்; அற்புதங்கள் நடக்கும்.

மிதுனம் 

புதனை இராசி நாதனாகக் கொண்ட மிதுனம் இராசிக்காரர்களே. 2020ஆம் ஆண்டில் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி, களத்திர ஸ்தானத்தில் குரு இருந்தாலும், உங்கள் இராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால், எந்த பிரச்சினை வந்தாலும், எளிதில் கடந்து விடுவீர்கள். 

தடைகள் எல்லாம் தகர்ந்துவிடும். நன்மைகள் அதிகம் நடக்கும். பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். எந்தச் செயலையும், செய்யும் முன்பும் பொறுமையாக யோசித்து நிதானமாக செய்யுங்கள். 

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றியடையும். வீடு, சொத்து வாங்கும் முன் யோசிப்பது அவசியம். தொழில் இலாபம் அதிகரிக்கும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் குறைய திருநள்ளாறு சென்று வாருங்கள்; நன்மைகள் கிட்டும்.

கடகம் 

சந்திரனை இராசி நாதனாகக் கொண்ட கடக இராசிக்காரர்களே, கடந்த பல ஆண்டுகளாகவே அதி அற்புதமான பலன்களை அனுபவித்து வந்த கடக இராசிக்காரர்களே... 2020ஆம் ஆண்டு உங்களுக்கு சனி பகவான் கண்டச்சனியாக அமர்கிறார். ஆறாம் வீட்டில் குருபகவான் அமர்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக இல்லாவிட்டாலும், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறும் தெம்பு கிடைக்கும். போட்டிகளில் எதிர்ப்பு இருந்தால்தான் அதைக் கடந்து வெற்றி பெறும் வேகம் அதிகரிக்கும். 

உடல் நலத்தில் கவனம் தேவை. உடம்புக்குள் இருந்த நோய்கள் வெளிப்படும். கடன்கள் வாங்க வேண்டாம். மருத்துவ ச் செலவுகள் வரும். 2020ஆம் ஆண்டு, கடகம் இராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும். எனவே சவாலைச் சமாளிக்க, திருச்செந்தூர் சுப்ரமணியரை சரணடையுங்கள். நன்மைகள் அதிகம் நடைபெறும்.

சிம்மம்

சூரியனை இராசிநாதனாகக் கொண்ட சிம்ம இராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. காரணம், கிரகங்களின் சஞ்சாரம் அற்புதமாக அமைந்துள்ளது. ஆண்டின் ஆரம்பத்தில், பஞ்சம ஸ்தானத்தில் குரு, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சனி அமைவதால், வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீர்கள். 

கடந்த சில ஆண்டுகளாகப் பட்ட கடன்கள் இன்று அடைபடும். வருடம் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள். புதிய வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடங்க முயற்சி செய்வீர்கள். கடன்கள் தீரும். வருடம் முழுவதும் கோள்களின் சஞ்சாரத்தினால் வெற்றிகள் கைகூடி வரும். அதிகம் வெற்றிகள் கிடைக்க, இந்த ஆண்டு சோலைமலையில் எழுந்தருளும் முருகப்பெருமானையும் அழகர் மலையில் குடிகொண்டிருக்கும் சுந்தரராஜ பெருமாளையும் வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

கன்னி 

புதனை இராசி நாதனாகக் கொண்ட கன்னி இராசிக்காரர்களே, அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு, இந்த ஆண்டு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. காரணம், ஐந்தாம் வீட்டில் சனிபகவான் அமரப்போகிறார். உங்களின் கஷ்டங்கள் குறையும், கவலைகள் மாறும். நான்காம் வீட்டில் குரு அமர்ந்தாலும், குருவின் பார்வையால் திருமண முயற்சிகள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் கை கூடி வருகிறது. 

இந்த ஆண்டு அதிகம் சம்பாதிக்கலாம். பொருளாதார வளம் நிறைந்த ஆண்டாக கன்னி இராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது. மேலும், நன்மைகள் நடைபெற அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வாருங்கள். அற்புதங்கள் நிகழும்.

துலாம் 

சுக்கிரனை இராசி நாதனாகக் கொண்ட துலாம் இராசிக்காரர்களே, 2020ஆம் புத்தாண்டில் அர்த்தாஷ்டம சனி காலம் என்றாலும், சனி ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்காது. காரணம், சனிபகவான் உங்கள் இராசியில் உச்சமடைகிறார். குரு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமர்வதாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது. சொத்துகள், வீடு வாங்குவீர்கள். 

பெயர் புகழ் தேடி வரும். குடத்தில் இட்ட விளக்காக இருந்த நீங்கள், இந்த ஆண்டு குன்றில் மேலிட்ட விளக்காக சுடர்விட்டுப் பிரகாசிப்பீர்கள். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெற, நீங்க வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர். சனிக்கிழமையில் ரங்கநாதரை தரிசனம் செய்ய வெற்றிகள் தேடி வரும்.

விருச்சிகம்

செவ்வாய் பகவானை இராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே. கடந்த ஏழரை ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, இன்னல்களால் மூச்சுவிட முடியாமல் தவித்து வந்தீர்கள். எப்படா விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கித்தவித்தீர்கள். பிறக்கப் போகும் புத்தாண்டு, உங்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை சனி முடியப்போகிறது. நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். 

உங்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாட்களாக பட்ட அவமானங்கள், வேதனைகளுக்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. சனி பகவான், முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். குரு பகவான், குடும்ப ஸ்தானத்தில் அமர்கிறார். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் அடைபடும். செய்யும் முயற்சிகளுக்கு, சனி பகவானால் வெற்றி கிடைக்கும். நிம்மதியான வாழ்க்கை நீடிக்க திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

தனுசு

குருபகவானை இராசிநாதனாகக் கொண்ட தனுசு இராசிக்காரர்களே, உங்களுக்கு தலைமேல் ஜென்ம சனியாக அமர்ந்து கொண்டிருந்த சனி பகவான், உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டுக்கு மாறுகிறார். தலைவலி நீங்கும். எதையும் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் பிறக்கும். குடும்பச் சனியால் குழப்பங்கள் தீரும். வாக்குச் சனியால் நீங்கள் பேசும் வார்த்தைகளில் நிதானமாக இருப்பது நல்லது. 

குருபகவான் உங்கள் இராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆட்சி நாதன் ஆட்சி பெற்று அமர்வதால், பல அற்புதங்கள் நிகழும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதையும் நிதானமாகத் தேர்வு செய்து முடிவு செய்யுங்கள். இல்லாவிட்டால், ஏழரைச் சனிக் காலத்தில் படாத கஷ்டங்கள் படவேண்டியிருக்கும். பேச்சிலும் நடையிலும் நிதானம் தேவை. பாதச் சனி படுத்தி எடுக்கும். கால் வலியை ஏற்படுத்தும் என்பதால், ஏழைகள் முதியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். செருப்பு தானம் செய்யுங்கள்.

மகரம் 

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகரம் இராசிக்காரர்களே, பிறக்கப்போகும் புத்தாண்டில், கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே இருக்கிறது என்றாலும் இராசிநாதன் ஆட்சி பெற்று ஜென்ம சனியாக இராசியில் அமர்கிறார். குருப கவான், விரைய குருவாகவும் ஆறாம் வீட்டில் ராகு, விரைய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் இருப்பதால், செய்யும் வேலைகளை யோசனை செய்து நிதானமாக இருப்பது நல்லது. 

புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். செலவுகள் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ப வருமானமும் அதிகமாக வரும். கடவுளின் கருணை அபரிமிதாக இருக்கிறது. நன்மைகள் அதிகம் நடைபெற, நீங்க வணங்க வேண்டிய தெய்வம் குச்சனூர் சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கும்பம் 

சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட கும்பம் இராசிக்காரர்களே, இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. குரு பகவான், உங்க இராசிக்கு இலாப ஸ்தானத்தில் அமர்வது அற்புதம். கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல விடயங்களாகவே நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது சனிபகவான் விரைய சனியாக ஏழரையை தொடங்குவதால், உங்களுக்குப் பெரிதாக பாதிப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை. அதே நேரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைத்து செயற்பட்டால் வெற்றி நிச்சயம். 

பெரிய முதலீடுகள் எதையும் செய்யாதீர்கள். வேலை செய்யும் இடத்திலும் வார்த்தைகளில் நிதானம் தேவை. தொழில் மூலம் கிடைக்கும் இலாபப் பணத்தை சேமித்து வைப்பது நல்லது. சுப விரையச் செலவுக்குப் பயன்படுத்துங்கள். ஏழரைச் சனி பாதிப்பு குறைய, ஆஞ்சநேயரை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

குரு பகவானை இராசி நாதனாகக் கொண்ட மீனம் இராசிக்காரர்களே, 2020ஆம் ஆண்டு உங்களுக்கு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம், குரு, சனியின் சஞ்சாரம் உங்களைக் கைதூக்கி விடும். இலாப ஸ்தானத்தில் வரும் சனியால், தொழிலில் இலாபம் அதிகரிக்கும். வருமானம் கொட்டும். பத்தாம் வீட்டில் அமரும் குரு, புதிய வேலைகளை ஏற்படுத்தித் தருவார். புதிய தொழில் தொடங்கலாம். 

வேலை செய்யும் இடத்திலும் வீட்டிலும், உங்கள் கை ஒங்கியே இருக்கும். எனவே, 2020ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் ஆண்டாகவும் அமையப்போகிறது. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் பெருமாள். கோவிலில் தாயாருக்கு வெள்ளிக்கிழமைகளில் விளக்கு போட்டு வணங்க மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .