2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் கடன் தரப்படுத்தல் என்றால் என்ன?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 நவம்பர் 26 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

Moodys நிறுவனத்தால் வெளியிட்டிருந்த கடன்தரப்படுத்தல் அறிக்கையும் அதற்கு எதிராக மத்திய வங்கி வெளியிட்டிருந்த மறுப்பறிக்கையும், கடந்த வாரத்தில் இலங்கையின் மிகப்பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்தப் புதிய கடன்தரப்படுத்தல் அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் கடன் தகுதிநிலையானது, B1 எனும் நிலையிலிருந்து, B2 எனும் நிலைக்கு தரமிறக்கப்பட்டுள்ளது.

உண்மையில், இந்தக் கடன்தரப்படுத்தல், எதைச் சொல்ல வருகிறது; இதன்மூலமாக இலங்கையிலும், சர்வதேச நாடுகளின் மத்தியிலும், இலங்கைக்கும் எத்தகைய தாக்கங்கள் ஏற்படும் என்பதை அறிந்துகொள்ள, முதலில் இலங்கையின் கடன் தரப்படுத்தல் என்ன என்பதை விளங்கிக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.   

கடன்தரப்படுத்தல் என்றால் என்ன? யார் அதைச் செய்கிறார்கள்?

இன்றைய நிலையில், இலங்கையிலும் சரி, சர்வதேச ரீதியிலும் சரி, பிரசித்திபெற்ற மூன்று முக்கிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள், இந்த மதிப்பீட்டுச் சேவையைச் செய்கின்றன. அவை, விட்ச் (Fitch Credit Agency), மூடி (Moodi’s Credit Agency), ஸ்டான்ரட் அண்ட் பூவர்ஸ் (Standars & Poor’s) ஆகியவையாகும்.

இவை, பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு, தங்களது முதலீடுகளுக்கு எவ்வகையான வருமானம், அபாயம் உள்ளன எனும் அடிப்படையில், நாட்டின் அல்லது நிறுவனத்தின் கடன் மதிப்பீட்டு நிலையை அறிக்கையிடுகின்றன. இந்த மதிப்பீட்டை, இலகுவாக முதலீட்டாளர்களும் ஏனையவர்களும் விளங்கிக்கொள்ள கூடியவகையில், இந்தக் குறியீட்டை பயன்படுத்துகிறார்கள்.  

இவ்வாறு நாடுகளையும் நிறுவனங்களையும், அதன் கடன்தன்மைக்கு ஏற்ப மதிப்பீடு செய்து தரப்படுத்தும் இந்த மூன்று வகை நிறுவனங்களில், விட்ச் (Fitch) நிறுவனமானது, இலங்கையின் கடன்தரப்படுத்தல் நிலையில், கடந்த ஆண்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதன் பிரகாரம், கடந்த 2016இல் இந்த நிறுவனம், இலங்கையின் கடன்தரப்படுத்தலை B+ எனும் நிலையிலிருந்து, BB- எனும் நிலைக்கு தரமிறக்கியிருந்தது. பின்பு, மீண்டும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில், B+ எனும் ஸ்திரத்தன்மை வாய்ந்த நிலைக்குத் தரமுயர்த்துவதாக அறிவித்திருந்தது. அத்துடன், கடந்த காலத்தில், எதற்காக இலங்கையின் கடன்தரப்படுத்தலானது குறைக்கப்பட்டது என்பதையும் வெளியிட்டிருந்தது.  

தரமிறக்கப்பட்டமைக்கான காரணங்கள் என்ன?

மீள்நிதியளித்தல் அபாயம்

விட்ச் நிறுவனத்தின் கணிப்பின் பிரகாரம், 2016-17ஆம் ஆண்டளவில், இலங்கை பெற்றுக்கொண்ட கடன்களை, மீளவும் செலுத்தக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதுடன், பெற்றுக்கொண்ட கடனை மீளச்செலுத்த, புதிய கடன்களைப் பெறும் செயல்முறையே நடைமுறைப்படுத்துவதாக மதிப்பிட்டிருந்தது. இதற்குத் தீர்வாக, இலங்கையானது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அதற்கு ஒப்பான நிதியங்களின் உதவியுடன், இந்த நிலையை சீர்படுத்த முடியும் என்றும் அந்த நிறுவனம் ஆலோசனைகளை வழங்கியிருந்தது.   

எனினும், 2016இன் பிற்பகுதியிலும், 2017ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியிலும், இலங்கையானது, சர்வதேச நாணய நிதியம் உட்பட ஏனையவர்கள் துணையுடன், கடன்களை மீளசெலுத்தும் பொறிமுறையை உருவாக்கியுள்ளதால், இலங்கை மீளவும் 2017இல் கடன்தரத்தில் தரமுயர்த்தப்பட்டது.  

குறிப்பிடத்தக்களவான கடன்முறிகளின் முதிர்வுகாலம் நெருங்கியமை

கடன்முறியானது, இரண்டு பகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. கடன் முதல், வட்டி என்பன ஆகும். இலங்கை அரசாங்கமானது, கடன்முறிகள் மூலமாக நிதியைச் சேகரித்து கொள்ளும்போது, அதற்கான வட்டியை வருடாந்த அடிப்படையில் வழங்குவதாகவும் கடன் முதலை முதிர்வு திகதியில் வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்ட வகையில்தான், இந்தக் கடன்முறிகள் வடிவமைக்கபட்டதாக இருக்கும்.  

அவ்வாறே, 2016ஆம் ஆண்டளவில் இலங்கையானது, சுமார் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன்முறிகளை மீளசெலுத்தவேண்டிய நிலையில் இருந்தது. இதன்போது, இலங்கையின் கையிருப்பில், வெளிநாட்டு நிதி ஒதுக்கமாக சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர்களே கைவசம் காணப்பட்டது. 

எனவே, இந்தக் கடன்களை மீளசெலுத்துவதன் மூலமாக, இலங்கை அரசாங்கமானது, மேலதிக வெளிநாட்டு ஒதுக்கங்கள் இல்லாத அபாயநிலையை எதிர்கொள்ள வேண்டியதாக இருந்திருக்கும். காரணம், நாளாந்தச் செயற்பாடுகளை அல்லது மிகக் குறுகியகாலச் செயற்பாடுகளைக் கொண்டு நடத்த மீதியாகவுள்ள வெளிநாட்டு ஒதுக்கமானது போதுமானதாகவில்லை என்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, விட்ச் நிறுவனம், இலங்கையின் கடன்தரப்படுத்தலைக் குறைப்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன்போது, குறித்த நிறுவனம், எதிர்கால முதலீட்டாளர்களின் நலனையும் கருத்தில்கொண்டே, குறித்த முடிவை எடுத்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.   

பலவீனமான பொது நிதிவளங்கள்

மிக நீண்டகாலமாக இலங்கையின் கடன்தன்மையைப் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு விடயமாக, இந்தப் பொது நிதிவளங்களின் வினைத்திறனின்மை சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது, அரசாங்க வளங்களைக் கொண்டு, போதிய அல்லது ஆகக்குறைந்த தேவையான வருமானத்தைக் கூடத் திரட்டிக்கொள்ள முடியாதநிலையை, இது சுட்டிகாட்டுகிறது. இதுவும், இலங்கையின் கடன்சுமையை அதிகரிக்கும் ஒரு காரணியாக அமைந்துள்ளது.  

வெளிநாட்டு ஒதுக்கங்களில் ஏற்படும் குறைவு

மேலே குறிப்பிட்டதுபோல, இலங்கை அரசாங்கமானது, தொடர்ச்சியாகக் கடன்களை மீளச்செலுத்தவென, தனது ஒதுக்கங்களைப் பயன்படுத்தி கொள்ளுவதால், ஒதுக்கங்களில் குறைவுநிலை ஏற்படும். எனவே, இது ஒட்டுமொத்த செயற்பாடுகளையும் நேரடியாகவோ, எதிர்மறையாகவோ பாதிப்படையச் செய்யக்கூடும். 

இதன் காரணமாக, ஏற்படக்கூடிய எதிர்காலத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, கடன்தரப்படுத்தல் நிறுவனம், இந்தத் தரக்குறைப்பைச் செய்ய எத்தனித்திருந்தது. ஆனாலும், தற்போதைய நிலையில் பல்வேறு நிதியங்களின் துணையுடன், குறுகியகால சமநிலையை இலங்கை பேணுவதன் விளைவாக, மீளவும் இலங்கையின் கடன்தரபடுத்தலானது தரமுயர்த்தபட்டிருக்கிறது.   

நாணய மாற்று விகிதத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வீழ்ச்சி

இலங்கையின் கடன்தொகை அதிகரித்துச் செல்லுவதில் நாணயப் பெறுமதியில் தொடர்ச்சியாக ஏற்படும் வீழ்ச்சியும் ஒரு காரணமென விட்ச் நிறுவனம் கூறுகிறது. தொடர்ச்சியாக, இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக குறைவடையும்போது, மீளசெலுத்தவேண்டிய கடனின் அளவும் தானாக அதிகரித்து செல்லும். இது மேலும், இலங்கையின் கடன்சுமையை அதிகரித்து, கடன்தரப்படுத்தலைப் பாதிக்கச் செய்யும் என இந்நிறுவனம் குறிப்பிடுகிறது.  

மேற்கூறிய காரணங்கள் அனைத்துமே விட்ச் (Fitch) நிறுவனமானது, தனது தரப்படுத்தல் மாற்றத்தைச் செய்யும்போது, வெளியிட்ட காரணங்களாகும். தற்போது Moodys நிறுவனம், தான் வெளியிட்டுள்ள கடன் தரப்படுத்தல் தரவிறக்கத்துக்கும் மேலே கூறிய காரணங்களுடன், தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற நிலைமை, அரசியல் நெருக்கடி காரணமாக அரசாங்க நிதியும், வெளிநாட்டு நிதி ஒதுக்கங்களும் முறையாகப் பயன்படுத்தபடாமை போன்ற காரணங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஷ

உண்மையில், கடந்த ஜூலை மாதமும் Moody’s நிறுவனம், தனது கடன்தரப்பப்படுத்தலில் சிறிய தரவிறக்கத்தை இலங்கையின் நிதிக்கொள்கைகளில் செய்திருந்தது. அதன்போது, நல்லாட்சி அரசாங்கமே, ஆட்சி பீடத்திலிருந்தது என்பது கவனிக்கப்படவேண்டிய விடயமாகும்.

ஆனாலும், அப்போது, இதுபோன்ற அரசியல் வங்குரோத்து நிலையை, இலங்கை கொண்டிருக்காததன் விளைவாக, இந்தக் கடன் தரப்படுத்தல் அறிக்கையானது பெரிதும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.

ஆனாலும், தற்போதைய அரசியல் நெருக்கடியில் மிகப்பெரும் கடன் தரவிறக்கத்தை Moodys நிறுவனம் செய்திருப்பதும், அதற்கு மத்திய வங்கி உடனடியாகவே மறுப்பறிக்கை வெளியிட்டிருப்பதும் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்திருக்கிறது   

கடன் தரப்படுத்தல் தரவிறக்க செயற்பாடு எவ்வாறு சாமனியர்களைப் பாதிக்கும்?

இலங்கையில் வாழும் சாமானிய மனிதனாக, மேலே குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கும்போது, இவை எதுவுமே எம்மை பாதிக்காதோ? என்கிற எண்ணப்பாடோ, இலங்கை அரசாங்கமே இவற்றையொல்லாம் சமாளித்துக்கொள்ளும் எனும் எண்ணப்பாடோ உருவாகியிருக்கக்கூடும்.

ஆனால், எம்மை அறியாத வகையில், இந்தக் கடன்தரபடுத்தலில் ஏற்படும் வீழ்ச்சியானது, ஒவ்வொரு சாமானிய இலங்கையரையும் பாதிக்கவே செய்யும்.  

இலங்கையின் கடன்தரப்படுத்தலில் தரக்குறைப்பு நிகழும்போது, இலங்கை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையீனம் அதிகரிக்கும். இதனால், இலங்கையின் எதிர்காலம் கேள்விக்குரியதாக மாற, அதிக சாத்தியபாடுகள் ஏற்படுகிறது.

எனவே, கொள்கை வகுப்பாளர்கள் மீளவும் இலங்கையின் கடன்தரப்படுத்தலைத் தரமுயர்த்தி ஏற்படக்கூடிய விளைவுகளைக் குறைக்க முயற்சிப்பார்கள். இதனால், அதற்கான கொள்கைகளை நடைமுறைபடுத்த வேண்டிய தேவைப்பாடும், அந்நியச் செலவாணி ஒதுக்கத்தைச் சமநிலையில் பேணவேண்டிய தேவைப்பாடும் ஏற்படும்.

இதன் ஒரு பகுதியாக, கொள்கைவகுப்பாளர்கள், கடன் விகிதங்களை அதிகரிக்கவே செய்வார்கள். கடன்விகிதங்கள் அதிகரிக்கும்போது, கொள்வனவு செலவீனங்கள் அதிகரிக்கும். இது, சாமானிய மக்களின் கொள்வனவில் தாக்கத்தைச் செலுத்தும். அதாவது, அரசாங்கத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அரசசுமையை வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு எனும் பெயரில் ஏற்கவேண்டியதாக இருக்கும்.  

அண்மைய காலங்களில், நிதிநிறுவனங்கள் வழங்குகின்ற கடன் வட்டிவிகிதங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உற்றுநோக்கின், இதற்கான காரணத்தை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். இது, இந்தக் கடன்தரப்படுத்தலில் ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பிலான சிறு உதாரணம் மட்டுமே. இவ்வாறு, மறைமுகமாகப் பல்வேறு தாக்கங்கள் ஒவ்வொரு சாமானிய இலங்கையரையும் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு என்கிற போர்வையில் பாதிப்படையவே செய்யும்.  

எனவே, இலங்கையின் கடன்தரப்படுத்தலும், அதன் குறியீடுகளும் என்னவாக இருந்தால் என்ன? என்கிற அலட்சியத்தை விடுத்து, அது தொடர்பில் அறிந்துகொள்வது, எதிர்கால இலங்கையில் எம் எதிர்காலம் எப்படி அமைய போகிறது என்பதை அறிந்துகொள்வதாக அமையும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .