2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கையின் பொருளாதார நிலை - டிசெம்பர் 2017

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஜனவரி 15 , மு.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பொருளாதார சூழ்நிலையானது ஒவ்வொரு மாதமும் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில், கடந்த டிசெம்பர் மாதம், இலங்கையின் பொருளாதாரத் துறைகள், பின்வரும் சாதகமான மற்றும் பாதகமான மாற்றங்களைக் கொண்டிருந்தது.  

பொருளாதார வளர்ச்சி  

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ச்சியாக சற்றுத் தொய்வான நிலையையே வெளிப்படுத்திக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.3%த்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இது இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுமிடத்து 0.7% குறைவான வளர்ச்சியாகும். இதற்குப் பிரதான காரணமாக, விவசாயத்துறையில் தொடர்ச்சியாக காணப்படும் வீழ்ச்சி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதலான தரவுகளுடன் ஒப்பிடுமிடத்து, 2017ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பதிவான விவசாயத்துறை சார் தரவுகளே மோசமான பெறுபேற்றைக் கொண்டுள்ள காலப்பகுதியாகும். இதற்கு, தொடர்ச்சியாக நிலவி வந்த சீரற்ற காலநிலையும் பிரதான காரணமாகவுள்ளது.

அதேசமயம், இலங்கையின் சேவைத்துறை குறிப்பிடத்தக்களவில் வளர்ச்சியை காட்டியிருந்தது. 2017ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டின் முடிவில், சேவைத்துறையில் 4.3%மான வளர்ச்சியும் உற்பத்தித்துறையில் 1.9%மான சிறியளவு வளர்ச்சியும் பதிவாகியிருந்தது.   

IMF இன் நிதிப் பங்களிப்பு  

இலங்கைக்கு டிசெம்பர் மாதத்தில் நிதி ரீதியாக மிகப்பெரும் உறுதுணையாக அமைந்த நற்செய்தி சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியாகும். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதியியல் வசதிக்கான உத்திரவாதத்துக்கு அமைய, இலங்கையினால் சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும், அறிக்கைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இந்த நிதி அங்கிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியம், சுமார் 251 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதிப்பங்களிப்பாக வழங்கியிருந்தது. இதன் அடிபப்டையில், இதுவரை இலங்கைக்கு சுமார் 760மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்பு நாணய நிதியத்தினால் வழங்கப்பட்டு உள்ளது.  

நிதி வழங்களின் போது, சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அறிக்கைகளின் பிரகாரம், பொருளாதாரம் மற்றும் நிதியியல் சார் வளர்ச்சி தொடர்ச்சியானதும், நிலையானதும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், எதிர்காலத்தில் மீளச்செலுத்தவேண்டிய அதீத கடனின் அளவும், அரசுக்கு சொந்தமான வினைத்திறனற்ற நிறுவனங்கள் மூலமாக ஏற்படவுள்ள நட்டங்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, நிதியியல் கொள்கைகளை வகுக்கக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இலங்கை நாணயத்தின் பரிமாற்ற விகிதத்தில் பொருத்தமான கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.  

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பு  

சர்வதேச வர்த்தகம் மற்றும் அபிவிருத்திகள் அமைச்சினதும், முதலீட்டு சபையினதும் அறிக்கைகளுக்கு அமைவாக இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் பாரிய முன்னேற்றத்தை காண முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவர்களது அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டின் அறிக்கையிடப்பட்ட முதல் 9 மாதங்களில் மாத்திரம் சுமார் 795.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி முதலீடாகத் தருவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டில் உற்பத்தி மற்றும் சேவைத் தொழிற்துறையில் சுமார் 397 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு மற்றும் பயன்பாட்டு துறையில் (infrastructure and utilities sector) சுமார் 353 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டில். இலங்கைக்கு அதீத வெளிநாட்டு நேரடி முதலீட்டை கொணர்ந்த முதலீட்டாளர்கள் பட்டியலில் சீன முதலீட்டாளர்கள் முதலிடத்தில் உள்ளனர். இவர்கள் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 35%த்தை உட்கொணர்ந்துள்ளதுடன், இவர்களுக்கு அடுத்த இடத்தில் 16.4% முதலீட்டு செயல்பாடுகள் மூலம் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளார்கள்.

இவர்களைத் தொடர்ந்து நெதர்லாந்து , ஐக்கிய இராச்சியம், ஜப்பான், மலேசியா, ஸ்வீடன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் வரிசையில் உள்ளன.  

பணவீக்க நிலை  

இலங்கையின் பணவீக்க நிலை ஓரளவுக்கு டிசெம்பர் மாதத்தில் குறைவடைந்திருந்தாலும், எதிர்பார்ப்பு அடைவு மட்டத்தை அடையவில்லை என்பதே உண்மை நிலையாகும். குறிப்பாக, இலங்கையின் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியானது 7.6% பணவீக்கத் தன்மையை டிசெம்பர் மாதத்தில் சுட்டிக்காட்டி இருந்தது.

இது கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுமிடத்து 0.2% வீழ்ச்சியாகும். அதுபோல, முக்கிய பணவீக்க அளவீடுகளும் இலங்கையின் டிசெம்பர் மாத பணவீக்க அளவு 5.2% என பதிவாகியிருந்தன. இது கடந்த ஒக்டோபரில் 5.8%மாக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.  

கணினியறிவில் இலங்கையின் வளர்ச்சி 

டிசெம்பர் மாதத்தில் இலங்கையின் தொகைமதிப்பு புள்ளிவிவரத் திணைக்களத்தினால் (Department of Census and Statistics) வெளியிடப்பட்ட கணினிக் கல்வி தொடர்பான அறிக்கைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டுப் பகுதியில் இலங்கையின் குடித்தொகையில் ஒவ்வொரு 5 நபருக்கு ஒருவர் குறைந்தது மேசைக் கணினி அல்லது மடிக்கணினியை கொண்டுள்ளார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த குடித்தொகையில் 23.5%மானவர்கள் கணினி உரிமையாளர்களாக இருப்பதைச்  சுட்டிக்காட்டுகிறது. இதில் அதீத கணினிப் பாவனை மற்றும் உரிமையைக் கொண்டுள்ள மாகாணமாக மேல் மாகாணம் பதிவாகியுள்ளதுடன், குறைந்தநிலை பயன்பாட்டைக் கொண்டுள்ள மாகாணமாக ஊவா மாகாணம் பதிவாகியுள்ளது. இவ்வாய்வு அறிக்கைகளின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டில், இலங்கையின் கணினிக் கல்விவீதமானது 28.3% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, 2016 ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டுடன் ஒப்பிடுமிடத்து சுமார் 0.8% வளர்ச்சியாகும். இந்தக் கணினி  கல்வியில் கொழும்பு மாவட்டம் 48.9%த்துடன் முதலாமிடத்தில் உள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டம் 6.7%த்துடன் இறுதிநிலையிலும் பின்தங்கியுள்ளது.  

மேலும், குறித்த கணினிக் கல்வி தொடர்பான அறிக்கையில், பாலின வாரியாக வெளிப்படுத்தப்பட்ட தரவுகளின் பிரகாரம், இலங்கையில் ஆண்களின் கணினிப் பாவனை பெண்களுடன் ஒப்பிடுமிடத்து அதிகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வயதுரீதியாக 15-19 வயதுக்குட்பட்டவர்களின் கணினி அறிவு மேம்பட்ட நிலையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இணையப்பாவனையைப் பொறுத்தவரையில் கொழும்பு மாவட்டம் 44.6%த்துடன் முன்னணியில் உள்ளதுடன், பதுளை மாவட்டம் 4.9%த்துடன் இறுதிநிலையில் உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.   

சுற்றுலா பயணிகள் வருகை  

இலங்கையின் சுற்றுலாத்துறையினால் கடந்த டிசெம்பர் மாதத்தில்தான் நவம்பர் மாதத்துக்கான பூரண சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதன்பிரகாரம், கடந்த நவம்பரில் சுமார் 167,511 உல்லாசப்பயணிகள் இலங்கைக்கு வருகைதந்ததாக பதிவாகியுள்ளது.

இது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுமிடத்து 0.2%மான வளர்ச்சி மட்டுமே ஆகும். 2017ஆம் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரை பதிவான சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சுமார் 1,871,871 ஆகும். இது 2016 ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து 2.5%மான அதிகரிப்பாகும்.  

கடந்த நவம்பரில் இலங்கைக்கு ஆசிய நாட்டவர்களே அதிகளவில் சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 32,243 என முன்னிலை வகிப்பதுடன், இரண்டாமிடத்தில் சீனர்கள் 19,237 என்கிற எண்ணிக்கையுடன் உள்ளார்கள்.

ஜரோப்பாக் கண்டத்தைப் பொறுத்தவரையில், ஐக்கிய இராச்சியமே இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சுமார் 13,634 பேருடன் முன்னிலை பெறுகிறது.  

கடந்த டிசெம்பர் மாதத்தில் மூடிஸ் முதலீட்டு நிறுவனம் இலங்கையின் கடன்தரப்படுத்தல்களை வெளியிட்டிருந்தது. இந்தக் கடன்தரப்படுத்தல்களின் பிரகாரம், இலங்கையின் கடன்நிலை B1 என தரப்படுத்தப்பட்டிருந்தது. இது இலங்கையின் கடன்தரப்படுத்தல்களில் எதிர்மறையான பெறுபேற்றை வழங்கும். 

இதற்குப் பிரதான காரணமாக, இலங்கையில் நிலவும் வெளிப்புற அபாயக் காரணிகளும், அரசாங்கத்தின் உயரிய கடன்படுநிலையுமே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தத் தரப்படுத்தல் நிச்சயமாக இலங்கைக்குப் பிறந்துள்ள 2018ஆம் ஆண்டில், மகிழ்வான செய்தியாக அமையப்போவதில்லை என்பதுடன், இந்தத் தரப்படுத்தல்கள் நிச்சயம் இலங்கையின் கடன்கோரல் செயல்பாடுகளிலும் தாக்கத்தை செல்லுத்தும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .