2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஏற்றுமதி அதிகரிப்பும் அரசியல் தளம்பல் நிலையும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஏப்ரல் 04 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் கடந்தமாத அரசியல் நிலைமைகள், மிகமோசமானதோர் இலங்கையின் முகத்தை, உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டியிருந்தது.

இனரீதியான பிரச்சினைகள் இன்னமும் தொடர்ந்துகொண்டிருப்பதுடன், அது அரசியல், பொருளாதார ரீதியாக, இன்னமும் இலங்கையைப் பாதிப்புக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை, கண்டியில் இடம்பெற்ற சம்பவமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வங்குரோத்து நிலையும் காட்டி நிற்கின்றன. 

இந்தநிலை, இலங்கையின் ஊசலாடிக்கொண்டிருக்கும் பொருளாதாரத்தின்மீது, பலத்த அடியாகவே மாறியிருக்கிறது எனலாம். தற்போதுதான், இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்த வகையில் ஏற்றுமதி உட்பட, பொருளாதார மீள்எழுச்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஆரம்பித்த இடத்துக்கே, இந்த அரசியல் களநிலைவரங்கள் கொண்டுவந்து விட்டிருக்கின்றன.  

கடந்தகாலப் பொருளாதார நிலைமைகளின் பிரகாரம், விவசாயத்துறையில் ஒருசதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததுடன், தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியிலும் முன்னேற்றகரமானநிலை காணப்பட்டது.கூடவே, அதிகரித்துவரும் தொழில்துறைசார் உற்பத்திகள் மற்றும் ஏற்றுமதி ஆகியன பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கிக் கொண்டு செல்லும் ஊக்கிகளாக அமைந்திருந்தன. ஆனால், மறுபுறத்தில், இனரீதியான மோதல்கள் காரணமாக, சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட பின்னடைவு, வெளிநாட்டு நாணய உள்வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சி, எதிர்பார்த்ததிலும் பார்க்க குறைவான வெளிநாட்டு முதலீடுகள் என்பன, பொருளாதாரத்தைத் தளம்பல்நிலைக்கு இட்டுசெல்லும் காரணிகளாக மாறியுள்ளன.  

விவசாயத்துறை   

இலங்கையின் விவசாயத்துறையானது கடந்த இரண்டு வருடங்களில் ஏற்பட்ட தொய்வுநிலையிலிருந்து 2018ஆம் ஆண்டின் முதற்காலாண்டுப் பகுதியில் மீண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வரட்சி,   வெள்ளப்பெருக்கு என்பன இலங்கையின் விவசாயத்துறையில் உள்ளடங்கியுள்ள பல்வேறு பயிர்செய்கைகளையும் பாதித்திருந்தது. இதன்விளைவாக, இலங்கை அதிகளவில் நெல் இறக்குமதி செய்யவேண்டியதாகியிருந்தது. ஆனால், 2018ஆம் ஆண்டுக்கான நெல் பயிர்ச்செய்கை விளைச்சலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 57%மான நெற்பயிர் செய்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.   

அதுபோல, இலங்கையின் தேயிலைப் பயிர்செய்கையிலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 11% மேலதிக அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம், தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை சுமார் 111 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.  

இவ்வாறு, உணவுசார் உற்பத்தியிலும் சரி, ஏற்றுமதி சார் பயிர்செய்கையான தேயிலை உற்பத்தியிலும் சரி முன்னேற்றகரமான நிலை காணப்படுவது, இலங்கையின் இறக்குமதி செலவீனங்களை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வழிகோலும். இவற்றுக்கும் அப்பால், இலங்கையின் கிராமம்சார் சமூகத்துக்கான வருவாயும் இதன் விளைவாக அதிகரிக்கும். இது நாட்டின் உட்கட்டமைப்பு மாற்றத்துக்கு மிகப்பெரும் உசாத்துணையாக அமையும் என்பதில் ஜயமில்லை.  

தொழிற்துறை உற்பத்தி  

இலங்கையின் தொழிற்துறைசார் உற்பத்திகளில் தொடர்ச்சியாக நல்லதோர் அபிவிருத்திநிலையே காணப்படுகிறது. 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டிலும், 2018ஆம் ஆண்டுக்கான முதற்பகுதியிலும் இந்தச் சீரான வளர்ச்சி தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, மாபிள், ஆடைக் கைத்தொழில்துறை, இறப்பர் மற்றும் தோல்சார் உற்பத்தி என்பனவற்றில் தொடர்ச்சியான உற்பத்தி அதிகரிப்பும் ஏற்றுமதி அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன.  

சேவைத்துறை  

இலங்கையின் சேவைத்துறை ஒன்றே, பல்வேறு புறக்காரணிகளின் தாக்கங்களின் விளைவால் எவ்வித பாதிப்புமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்துக்கு மிக அதிகளவில் பங்களிப்புச் செய்துவரும் துறையாக மாறியுள்ளது. ஆனால், கண்டியில் ஏற்பட்ட சம்பவங்களும் அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையில்லாத தன்மையும் இந்த நிலையை மாற்றியுள்ளன. இதன்விளைவாக, இலங்கையின் சுற்றுலாத்துறை, மிகப்பாரிய சரிவைக் கண்டுள்ளது. இந்தநிலையிலிருந்து இன்னும் சில மாதங்களில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்ப்பு உண்டு.  சுற்றுலாத் துறை தவிர்த்து, கணினி தொழில்நுட்பம், போக்குவரத்து என ஏனைய சேவைத்துறைகள் கடந்த காலங்களைப் போலவே அதிரித்து செல்லும் வளர்ச்சியையே காட்டி நிற்கின்றன.  

ஏற்றுமதி வளர்ச்சி  

இலங்கையைப் பொறுத்தவரையில், கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிகபட்சமாக 11.4% என்கிற ஏற்றுமதி வளர்ச்சி எல்லையைத் தொட்டிருந்தது. 2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சி 6.2%மாகவே இருந்துள்ளது. ஆனாலும், இது கடந்த வருடங்களின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுமிடத்து அதிகமான வளர்ச்சியாகும். இது மீளவும், இலங்கையின் ஏற்றுமதி, படிப்படியாக உச்சநிலையை அடையக்கூடும் என்கிற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.  

ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளின் பிரகாரம், எதிர்பார்க்கப்படும் ஒட்டுமொத்த ஏற்றுமதியின் அளவு 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பார்க்கப்படும் ஏற்றுமதியில் 13 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது அடையப்படக்கூடிய இலக்காக உள்ளபோதிலும், உற்பத்திதுறை மற்றும் விவசாயத்துறையில் இவ்வாண்டு மேலதிக ஏற்றுமதி வருமானம் கிடைக்கக்கூடும் என்பதன் அடிப்படையில் இந்த இலக்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை நிர்ணயித்து இருக்கிறது.  

அதுபோல, இலங்கையின் ஆடை மற்றும் கைத்தொழில் துறையிலும் இவ்வாண்டில் முன்னேற்றகரமான ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளமையானது இலங்கை பொருளாதாரத்துக்கு பலமான ஒரு செய்தியாகும். 

இவ்வாண்டு ஜனவரியில் ஆடைத்துறையில் ஏற்பட்ட 1.8% மேலதிக வளர்ச்சியானது 433 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வருவாயாக ஈட்டித் தந்துள்ளது. அதுபோல, இலங்கையின் GSP PLUS சலுகையையும் மீளவும் ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ள சலுகையும் பூரணமாக பயன்படுத்தத் தொடங்கியதும் இந்த அதிகரிப்பில் மேலதிக வளர்ச்சியைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். 

எனவே, மேற்கூறிய நிலைகள் இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையில்லாத மேலும், கீழுமாகச் செல்லக்கூடிய தளம்பல் தன்மையைக் கொண்ட பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ள நிலையையே உறுதி செய்கிறது.

குறிப்பாக, இவ்வாண்டில் எதிர்பார்த்திராத பொருளாதார நலன்கள் மற்றும் வருமானங்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளபோதிலும், அவற்றுக்கு எதிராக இலங்கையின் கடந்தகாலக் கடன்களும் அதற்கான மீளச்செலுத்தல் தொகைகளும் வளர்ந்து நிற்கின்றது. 

அத்துடன், இலங்கையில் அடிக்கடி ஏற்படும் இனமத ரீதியான பிரச்சினைகள் இலங்கையின் பொருளாதாரத்தை ஒரு சீராக உயர்த்திச் செல்வதில் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளன. இதன் விளைவு, இலங்கையால் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு முதலீடுகள் உட்பட வருமானங்களைப் பெறமுடியாது போவதுடன், அதன் சுமையை இலங்கையின் சாதாரண மக்களும் மிக நீண்டகாலத்தில் அனுபவிக்க நேரிடுகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .