2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கவனிக்கப்படவேண்டிய, வெளிநாட்டிலுள்ள இலங்கை தொழிலாளர்களின் வருமானம்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தரும் மூலங்களில், மிக முக்கியமானவர்கள், வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் ஆவர். தங்களது குடும்பச் சூழ்நிலைக் காரணமாகவும் தங்களது கனவுகளை மெய்ப்படுத்திக் கொள்ளவும், உறவுகளையும் உணர்வுகளையும் தியாகம் செய்து, வெளிநாடுகளில் தஞ்சம்புகும் இவர்களால், இலங்கையிலுள்ள உறவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் வெளிநாட்டு நாணய வருமானத்தில்தான், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தடங்கல்கள் இல்லாத வகையில், கொண்டு செல்லப்படுகிறது என்று கூறினால், நம்ப முடிகிறதா.   ஆனால், அதுதான் உண்மை.

இலங்கையின் நாணயப்பெறுமதியின் ஸ்திரத்தன்மையை, சர்வதேசச் சந்தையில் பேணுவதற்கு, இலங்கைக்கு வெளிநாட்டு நாணயத்தின் கையிருப்பு அவசியமாகிறது. இதற்கு, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களால், இலங்கைக்கு கொண்டுவரப்படும் நிதி அல்லது வெளிநாட்டு பணம், பெரிதும் கைகொடுக்கிறது. இதன் காரணமாகத்தான், இலங்கை, ஏற்றுமதிகளை மட்டுமல்லாது, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கிறது. ஆனால், ஊக்குவிப்பதற்கு அமைவாக, வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களுக்கு, போதுமான வசதிகளும் சட்டங்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளனவா எனக் கேட்டால், அதற்கு உண்மையில் பதிலேயில்லை என்றுதான் கூற வேண்டும். 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு தூணாகவிருக்கும் இந்த வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானத்தில், தற்போது ஒரு வீழ்ச்சிநிலை ஏற்பட்டுள்ளது. வருமானத்தைச் சீராக தந்தபோது, தனது ஊழியப்படை பற்றி கவலைகொள்ளாத அரசாங்கம், வருமானம் அவசியமானபோது, அதில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, தனது ஊழியப்படையைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துள்ளது.  

இலங்கையின் இறக்குமதி/ஏற்றுமதி தரவுகளானது, 2017இல், ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், ஒரு கலவையான தரவுகளையே வெளிப்படுத்தியுள்ளது. ஆனாலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானத்தில், அது, தொடர்ச்சியாக வீழ்ச்சியான போக்கையே காட்டி நிற்கிறது.

இந்த வீழ்ச்சி நிலையிலும், இலங்கையின் வெளிநாட்டு நாணய வர்த்தகத்தில், இந்த வருமானமே முதன்மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக, 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில்,  ஐ.அ​ெமரிக்க டொலர் 4,503.3 மில்லியனாக உள்ள வருமானம், 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில்,  ஐ.அ​ெமரிக்க டொலர் 4,804.1 மில்லியனாகவும் 2015ஆம் ஆண்டு, ஐ.அ​ெமரிக்க டொலர் 4,598 மில்லியனாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்த வருமான வீழ்ச்சிக்குப் பிரதானமாக இரண்டு காரணங்களைக் குறிப்பிட முடியும். ஒன்று, உலக எண்ணெய் விலையிலும் பரிமாற்றத்திலும் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றத்தன்மைகள் காரணமாக, மேற்கு ஆசியாவின் சுமார் 1.5 மில்லியன் தொழிலாளர்களைக் கொண்ட தொழில்கள் நிறுத்தப்பட்டு உள்ளன அல்லது அவற்றின் திறன் குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான சட்டங்கள் மற்றும் அங்கிகாரம், வழங்களில் கொண்டுவரப்பட்ட இறுக்கமான கட்டுப்பாடுகள் காரணமாக, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரின், குறிப்பாக பெண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும் காரணமாகிறது.  

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால், அங்கிகாரம் பெற்ற தனியார் முகவர்களின் தரவுகள் பிரகாரம் 2013இல் 118,053 பெண்களும் 2014இல் 110,486 பெண்களும், 2015இல் 90,677 பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றுள்ளனரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017இல் இந்தத்தொகை மேலும் குறைவடைந்ததுள்ளதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விகிதாராச வெளியீடுகளின் பிரகாரம், 2015இல் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையானது, 34.4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. 2016இலும், இதற்குச் சமமாக அல்லது இதைவிட அதிகமாக வேலைவாய்ப்புக்குச் செல்லுவோர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது எனவும் மேலதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

2017ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் மாதாந்த பொருளாதாரத் தரவுகளின் பிரகாரம், இலங்கையின் சுற்றுலாத்துறை மூலமான அந்நிய செலவாணி அதிகரித்து, வர்த்தகப் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அதற்குச் சமமான அளவில், வெளிநாட்டுத் தொழில் மூலமான வருவாய் குறைவடைந்ததன் விளைவாக, வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளதே தவிர, குறைவடையவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

எனினும், குறித்த சென்மதி நிலுவை நிலையானது, அரசாங்கத்தின் வெளிநாட்டு நிதி வழங்கல் முறையோயூடாகவும் கொழும்பு பங்குகள் பரிவர்த்தனை செயல்பாடுகள் மூலமாகத் திரட்டப்பட்ட நிதி மூலங்கள் வாயிலாகவும், சீர் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், ஏற்றுமதி வருமானமானது, 6.5சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இதற்கு பிரதான காரணமாக, இலங்கை தேயிலைக்கு, சர்வதேச சந்தையில் ஏற்பட்ட கேள்வி, போக்குவரத்து சாதனங்களின் உபகரண ஏற்றுமதி, பெற்றோலியப் பொருட்களிலான அதிகரிப்பு, ஜரோப்பிய சந்தைக்கான கடலுணவு மற்றும் நறுமண பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு என்பவற்றை சுட்டிக்காட்ட முடியும். 2017இல் பங்குனி மாதத்தின் பின்புதான், உண்மையான ஏற்றுமதி அதிகரிப்பானது ஏற்பட ஆரம்பித்திருந்தது. இதற்கு பிரதான காரணங்களில் ஒன்று, ஜரோப்பிய சந்தைக்கானத் தடை நீக்கமாகும். இந்த நிலை, தொடர்ச்சியாக தொடருமானால், ஏற்றுமதி வருமானமானது, மாதமொன்றுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டும் நிலையையும் சராசரியாக வருடமொன்றுக்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக பெற்றுத்தரும் நிலையாகவும், இது மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திச் செயல்பாடுகளின் விளைவாகவே, இறக்குமதி அளவு அதிகரித்துள்ளது எனலாம். ஆனால், அதற்கும் மேலதிகமாக, உணவு சார்ந்த பொருட்களும் கூட இறக்குமதி செய்யப்படும் நிலையானது, இலங்கையில் உள்ளது. உதாரணமாக, அரிசிசார் உணவுப் பொருட்களில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரட்டிப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாது, எரிபொருள் இறக்குமதியானது, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தின் கணிப்பீட்டின் பிரகாரம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து, 73 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. எரிபொருளின் விலையையும் கூட 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து ஐ.அ​ெமரிக்க டொலர் 46.71 டொலரிலிருந்து ஐ.அ​ெமரிக்க டொலர் 53.07 டொலராக அதிகரித்துள்ளது. இவை எல்லாமே, இறுதியாக வர்த்தகப் பற்றாக்குறையைப் பாதிக்கக்கூடிய காரணிகளாகவே உள்ளன.  

மேற்கூறிய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறைபாட்டை சமநிலைபடுத்தும் ஒரு மிக முக்கிய காரணியாக, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலமாக ஈட்டப்படும் வருமானம் உள்ளது என்றால் மிகையில்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு முதலான தரவுகளை ஒப்பிடும்போது, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் சில முன்னேற்றங்களும் பல்வேறு வீழ்ச்சிகளும் கலந்துள்ளன. குறிப்பாக, பெண்கள் வேலைக்குச் செல்லும் அளவு, 34 சதவீதத்தால் குறைவடைந்தது போல, வீட்டுப் பணியாளர்களாக வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் சுமார் 28 சதவீதத்தால் குறைவடைந்து இருக்கிறது. ஆனால், அண்மையக்காலத்தில் இலங்கையில் திறன்மிகு தொழிலாளர்களின் இடப்பெயர்வு அல்லது அவர்கள் வேலைக்கு செல்லும் வீதமானது, சுமார் 31சதவீதத்தால் அதிகரித்துள்ளது. திறன்மிகு தொழிலாளர்களின் வெளிச்செல்லுகை வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டபோதிலும், அவர்களால் வெளிநாட்டு வருமான வீழ்ச்சியை குறைக்க முடியவில்லை.  

வெளிநாட்டு வருமானத்தில் ஆண் தொழிலாளர்களைப் பார்க்கிலும், பெண்கள் மூலமாக கிடைக்கப்பெறுகின்ற வருமானம் நம்பகமானதும், நிரந்தரமானதுமான வகையில் ஒருநாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாக உலக தொழிலாளர் சங்கத்தின் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திறன்மிகு தொழிலாளர்களில் பெருவாரியானவர்கள் ஆண்களாகவே உள்ளார்கள். அதுபோல, வெளிநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் செல்லும் பெண்களின் அளவில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. எனவே, நம்பகமான வருமான மூலத்தை தருபவர்களது, எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் விளைவாக, திறன்மிகு தொழிலாளர்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளபோதிலும் அவர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான அளவை இலங்கைக்குள் கொண்டுவர இயலவில்லை.  

எனவே, இலங்கை அரசாங்கமானது, வெளிநாட்டு வேலையாட்கள் நலன் தொடர்பிலும், அங்கு பணிபுரியும் ஊழியப்படையின் வருமானம் தொடர்பிலும் தாமதிக்காது கவனத்தைச் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்நலனை எவ்வகையிலும் பாதிக்காத எத்தகைய சட்டதிட்டங்களையும் நடைமுறைப்படுத்தி அதன் ஊடாக, தொழிலார்களை ஊக்குவிப்பதன் மூலமாக மட்டுமே, இலங்கை அரசு, வெளிநாட்டு வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடிவதுடன், தனது எதிர்கால பொருளாதார வளர்ச்சியை தடைகளின்றி முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X