2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நுண்பாக நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநோக்கு 

தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பயன்படுத்தும் நிதியியல் பணிகளின் (வெறுமனே அவற்றை அடையக்கூடியதாக இருக்கும் தன்மையல்ல) விகிதமொன்று, என எளிமையாக வரைவிலக்கணம் செய்யப்படும் நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள், உலகின் எந்தவொரு பகுதியிலும் நிதியியல் துறையின் அபிவிருத்தியில் இன்றியமையாததோர் அம்சமாக விளங்குகின்றன.  

முறைசார்ந்த நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத பின்தங்கிய சமூகத்திலுள்ள பிரிவினர், பொருளாதார வளர்ச்சி மற்றும் அதன் நன்மைகளைப் பெறுவதிலிருந்தும் புறம்தள்ளப்பட்டுவிடுவதுடன், முறைசாரா நிதியியல் துறையால் கவரப்பட்டுமிருக்கின்றனர். குறைந்த வருமானத்தைக் கொண்ட வாடிக்கையாளர்களும் நுண்பாக தொழில்முயற்சிகளும், அவற்றின் குறைந்த வருமானம் மற்றும் பிணைகளை வழங்கமுடியாத அவற்றின் தன்மை என்பனவற்றின் காரணமாக, முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்களால் பொதுவாகப் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, அடிப்படை நிதியியல் பணிகளைப் பெறமுடியாமல் இருக்கின்றனர். இருப்பினும்கூட, பல்வேறுபட்ட நிதியியல் பணிகளையும் வழங்குவதன் மூலம், நிதியியல் பணிகளை வழங்குகின்ற கருவியொன்றாக விளங்கும் நுண்பாக தொழிற்பாடுகள், இக்குறைந்த வருமான வாடிக்கையாளர்களையும் நுண்பாக தொழில் முயற்சிகளையும் இலக்காகக்கொண்டு கடன்கள், சேமிப்புக்கள், காப்புறுதி, பணவனுப்பல் மற்றும் பயிற்சியளித்தல் மற்றும் ஆலோசனைகள் போன்ற ஏனைய பணிகள் என்பனவற்றை வழங்குகின்றன. நிதியியல் பணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை வழங்குவதன் மூலம், நுண்பாக நிதியானது குறைந்த வருமானம் பெறுபவர்களினதும் நுண்பாக தொழில் முயற்சிகளினதும் வருமான உருவாக்க நடவடிக்கைகளையும் இயலாற்றலையும் விரிவுபடுத்தி மேம்படுத்த எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம் பொருளாதார மூலவளத்தின் காத்திரமான ஒதுக்குகளினூடாக சமூகம் முழுவதுக்கும் நன்மைகளையும் உறுதிப்படுத்துகின்றன.  

இலங்கையில், ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நுண்பாக நிதி நடவடிக்கைகள், மிகையான வட்டி வீதங்கள் மற்றும் ஒழுக்கவியலற்ற அறவிடல் முறைகள் என்பனவற்றினூடாக சட்டத்துக்கு முரணாக வைப்புக்களைத் திரட்டுவதற்கும் வாடிக்கையாளர்களைச் சுரண்டுவதற்கும் வழிவகுக்கின்றன. மேலும், மோசமான கம்பனி ஆளுகை, இந்நிறுவனங்களில் காணப்படும் முறைமை மற்றும் கட்டுப்பாடுகள் என்பன, பலவீனமான கொடுகடன் பகிர்ந்தளிப்பு நியமங்கள், குறைந்த மீள்கொடுப்பனவு வீதங்கள், உயர்ந்த கொடுக்கல்வாங்கல் செலவுகள் மற்றும் இழப்புக்களை ஏற்படுத்தல் என்பனவற்றைத் தோற்றுவித்து, நிறுவனங்களை இடர்ப்பாடுகளுக்கு இட்டுச்செல்கின்றன. 

ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நிறுவனங்களால் வாடிக்கையாளர்கள் சுரண்டப்படுவது, நுண்பாக நிதியைப் பெறுபவர்களை மோசமாகப் பாதிப்பதுடன், குறைந்த வருமானம் பெறும் பிரிவினரை ‘வறுமைச் சுழற்சி வட்டத்துக்குள்’ உழலவும் செய்துவிடுகிறது. அதேவேளை, அத்தகைய நடைமுறைகள், முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட துறை உட்பட, நிதியியல் துறையில் நுகர்வோரின் நம்பிக்கையைப் பாதித்துவிடக்கூடும். ஆகவே, இலங்கையில் நுண்பாக நிதி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மேற்குறிப்பிட்ட நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வது அவசியமானதாகக் காணப்பட்டது.  

ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையூடாக, நுண்பாக நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது நுண்பாக நிதி நிறுவனங்களின் தொழிற்பாடுகளிலிருந்து கிடைக்கும் உண்மையான நன்மைகளை காத்திரமான முறையில் சமூகத்துக்கு மாற்றம் செய்வதற்கு இன்றியமையாததாகும். ஆற்றல்வாய்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இச்சட்டமானது குறைந்த வருமானம் பெறும் ஆட்களுக்கும் நுண்பாக தொழில்முயற்சிகளுக்குமான நிதியியல் பணிகளின் வழங்கலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், அனைத்து மக்களுக்குமான நிதியியல் பணிகளின் கிடைப்பனவு அதிகரிக்கப்படுவதுடன், நுண்பாக நிதிநிறுவனங்களின் ஆற்றல்வாய்ந்த தன்மையும் முறைமைகளும் வலுப்படுத்தப்படுகின்றன. பரந்தளவு நிதியிடல் மூலங்களை (அரசு, இலங்கை மத்திய வங்கி, கொடை வழங்குநர்கள் மற்றும் கொடுகடனுக்கான ஏனைய நிறுவனங்கள், கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்கள் என்பன பங்குடமையாளர்களாக மாறுவது உட்பட) பெற்றுக்கொள்ள நுண்பாக நிதி நிறுவனங்களுக்கு வசதியளிப்பதுடன், நுகர்வோரின் பாதுகாப்பு நியமங்களையும் வைப்புக்களின் பாதுகாப்பையும் மேம்படுத்தி, இறுதியில் பாதுகாப்பான, வினைத்திறன்மிக்க, உறுதியான நிதியியல் முறைமையை ஊக்குவிக்கிறது. 

2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதியளிப்புச் சட்டம் 

2016 ஜூலை 15ஆம் நாள் நடைமுறைக்கு வந்த 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நுண்பாக நிதியளிப்புச் சட்டம் இலங்கையிலுள்ள நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு உரிமம் வழங்கி, ஒதுக்கு முறைப்படுத்தி மற்றும் மேற்பார்வை செய்யும் பொறுப்புக்களை இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைத்திருக்கிறது.  

 இச்சட்டமானது, மேலும் மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற அரசு சாரா நிறுவனங்களை, அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்களாக (அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்கள்) தன்னார்வ சமூகப் பணி அமைப்புக்களின் பதிவாளரால் பதிவுசெய்யப்படுவதற்கான அதிகாரத்தையும் வழங்குகிறது. இச்சட்டமானது, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையால் (நாணயச் சபை) அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்களின் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்வதற்கான கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை உருவாக்குவதற்கான அதிகாரங்களையும் வழங்குகிறது. 

சட்டத்தின் சிறப்புப் பண்புகள் 

(i) நுண்பாக நிதி வியாபாரத்தின் வரைவிலக்கணம் 

நுண்பாக நிதி வியாபாரம் என்பது, வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் முக்கியமாக தாழ்ந்த வருமானம் கொண்ட ஆட்களுக்கும் நுண்பாக தொழில் முயற்சிகளுக்கும் ஏதேனும் வடிவத்தில் நிதியியல் கடன் வசதிகளை வழங்குதல் அத்துடன் / அல்லது ஏனைய நிதியியல் பணிகளை வழங்குதல். 

(ii) நுண்பாக நிதித் தொழிலை மேற்கொள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நபர்கள் 

உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனி, அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்கள் அல்லது சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள் தவிர்ந்த மற்றைய எவரும் நுண்பாக நிதி வியாபாரத்தை மேற்கொள்ளக்கூடாது என, சட்டம் குறிப்பிடுகிறது. அத்தகைய ஆள் நீதவான் ஒருவரின் முன்னால் சுருக்கமான விசாரனையொன்றின் பின் குற்றத்தீர்ப்பொன்றுக்கு பொறுப்பாதல் வேண்டும் என்பதுடன், ஒரு மில்லியனை விஞ்சாத தண்டமொன்றுக்கும் அத்துடன் /அல்லது ஒரு வருடத்தை விஞ்சாத சிறைத் தண்டனைக்கு ஆளாதலும் வேண்டும்.  

எனினும், இச்சட்டம் தொழிற்பாட்டுக்கு வந்த திகதிக்கு முற்போந்த நாளில், அதாவது, 2016.07.14ஆம் நாளுக்கு முன்பாக, நுண்பாக நிதி வியாபாரத்தை மேற்கொண்ட ஏவரேனும் ஆள், அத்தகைய திகதியிலிருந்து 18 மாத காலப்பகுதிக்குள் அத்தகைய தொழிலைத் தொடர்ந்தும் நடத்தலாம் என்பதுடன், அக்காலப்பகுதிக்குள் சட்டத்தின் கீழ் உரிமமொன்றுக்காக அல்லது பதிவுசெய்தலுக்காக விண்ணப்பித்தலும் வேண்டும். 

(iii) ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை அமைப்பியல்  

சட்டமானது, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினூடாக (நாணயச் சபை) உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு உரிமம் வழங்கல், ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை என்பனவற்றை வழங்குகிறது. அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்கள் தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளரால் பதிவுசெய்யப்பட்டு, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்படுகின்றன. எனினும், நாணயச் சபையானது கோட்பாடுகளையும் நியமங்களையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு அல்லது அவற்றின் மேற்பார்வைக்காக வழிகாட்டல்களை விடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், இவற்றினூடாகத் தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளர் அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்களுக்கு விதிகளை வழங்குவதன் மூலம் காத்திரமான தன்மையினை ஏற்படுத்தலாம். நுண்பாக நிதித் தொழில் துறையின் ஒழுங்குபடுத்தல் மற்றும் மேற்பார்வைக்காக சட்டத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பியலானது, கீழே தரப்பட்டுள்ள வரைபடத்தில் விபரிக்கப்படுகிறது. 

(iv) உரிமம் வழங்குகின்ற தேவைப்பாடுகள் 

உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு 

சட்டத்தின்படி, நுண்பாக நிதிக் கம்பனியொன்றுக்கு உரிமம் வழங்குவதற்கான அடிப்படைத் தேவைப்பாடாக, 2017ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியமாக இருப்பதுடன், உத்தரவாதத்தின் மூலமான வரையறுக்கப்பட்ட கம்பனிகளாக தனியார் கம்பனியாக கரைகடந்த கம்பனியாக அல்லது வெளிநாட்டுக் கம்பனியாக இருத்தல்கூடாது. 

அரசு சாரா நுண்பாக நிதிக் கம்பனிகளுக்கு 

1980ஆம் ஆண்டின் 31ஆம் வலிந்துதவும் சமூக சேவைகள் அமைப்புக்களின் (பதிவுசெய்தலும் மேற்பார்வையும்) சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா நிறுவனமொன்று அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனமாக பதிவுசெய்யப்படுவதற்கான சான்றிதழுக்காக விண்ணப்பிக்கத் தகைமையுடையதாகும். 

(v) சட்டத்தினூடாக விழிப்புணர்வு 

உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனி, அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனம் அல்லது சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் விலக்களிக்கப்பட்ட நிறுவனமொன்று தவிர்ந்த வேறு எவரேனும் ஆட்கள் நுண்பாக நிதி என்ற பதத்தையோ அல்லது அதிலிருந்தான வருவிக்கப்பட்ட ஏதேனும் சொற்களையோ, உருப்பெயர்ப்புக்களையோ அல்லது வேறு ஏதேனும் மொழியில் அதற்குச் சமமான வார்த்தையையோ நாணயச் சபையின் எழுத்து மூலமான முன்னொப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது. மேலும், இது ஒவ்வோர் உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியும் அதன் பிரதான வியாபாரத் தலத்தில் அதன் உரிமத்தை துலாம்பரமான இடத்தில் வைத்தல் வேண்டுமெனவும் அத்தகைய உரிமத்தின் பிரதியை அதன் ஒவ்வொரு கிளையிலும் வைக்க வேண்டுமெனவும் மற்றும் ஒவ்வோர் அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனமும் பதிவுச் சான்றிதழை அதன் பிரதான வியாபாரத் தலத்திலும் அச்சான்றிதழின் பிரதியை ஒவ்வொரு கிளையிலும் காட்சிப்படுத்தல் வேண்டுமெனவும் தேவைப்படுத்துகிறது. 

(vi) விதிகள், பணிப்புரைகள், கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை விடுத்தல் 

உரிமம்பெற்ற நுண்பாக நிதிக் கம்பனிகளுக்காக 

நாணயச் சபை 2 விதிகளையும் 8 பணிப்புரைகளையும் விடுத்திருக்கிறது. இதில் 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்ட விதிகள், உரிமம் வழங்கல் பிரமாணம் தொடர்பில் விடுக்கப்பட்டது. விண்ணப்பதாரர் கம்பனியொன்று ஆரம்ப மைய மூலதனமாக, ரூ.100 மில்லியனை அல்லது காலத்துக்குக் காலம் நாணயச் சபையால் தீர்மானிக்கப்படும் தொகை எதுவோ, அதைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பதுடன், அதன் நுண்பாக நிதி தொடர்பான நடவடிக்கைள் தொடர்பில் கடந்த மூன்றாண்டுகளுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களையும் அறிக்கையையும் வழங்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும் என, அது மேலும் தேவைப்படுத்துகிறது (புதிய நுண்பாக நிதி நிறுவனங்கள் உரிமத்துக்கு விண்ணப்பிக்க முன்னர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது நுண்பாக நிதி நிறுவனங்களுடன் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருத்தல் வேண்டும்). வைப்புக்கள் தொடர்பான 2016ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க நுண்பாகச் சட்டப் பணிப்புரையின்படி, உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியொன்று தனியொரு வைப்பாளரிடமிருந்து தனியாகவோ கூட்டாகவோ உயர்ந்தபட்சம் வைத்திருக்ககூடிய வைப்புத்தொகை ரூ.300,000 ஆகும். கடன் வசதிக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பு தொடர்பில் 2016ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்டப் பணிப்புரையானது உரிமம் பெற்ற நுண்பாக நிதிக் கம்பனியின் மூலதன மட்டம் மற்றும் வாடிக்கையாளர் வகை என்பனவற்றின் அடிப்படையில், உயர்ந்தபட்ச கடன்வழங்கல் வரையறையை குறித்துரைக்கிறது. 

பதிவு செய்யப்பட்ட அரசுசாரா நுண்பாக நிதி நிறுவனங்களுக்காக 

சட்டத்தின் பிரிவு 28 (i) கீழ் நாணயச் சபை, தன்னார்வ சமூகப் பணி நிறுவனங்களின் பதிவாளருக்கு கோட்பாடுகள், நியமங்கள் மற்றும் வழிகாட்டல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்படி, அரசு சாரா நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச நிகரமதிப்புத் தேவைப்பாடு அதன் செயற்பரப்பில் தங்கியிருக்கிறது. மாவட்ட மட்டத்திலான அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனத்துக்கு ரூ.2 மில்லியன் கொண்ட நிகரமதிப்பும் தேசிய மட்டத்திலான அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனத்துக்கு நிகரமதிப்பாக ரூ.5 மில்லியனும் குறித்துரைக்கப்பட்டிருக்கின்றன. அதற்குப்புறம்பாக, விண்ணப்பதாரர், அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனம், தன்னார்வ சமூகப் பணி நிறுவனத்தின் பதிவாளரால் குறித்துரைக்கப்பட்டவாறான குறைந்தபட்சக் காலப்பகுதியொன்றுக்கு நுண்பாக நிதி தொடர்பான நடவடிக்கைகளில் சிறந்த பதிவைக் கொண்டிருத்தல் வேண்டும். சட்டத்தின் கீழ் அரசு சாரா நுண்பாக நிதி நிறுவனங்கள் ‘வரையறுக்கப்பட்டளவிலான சேமிப்பு வைப்புக்களை’ ஏற்றுக்கொள்ள மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. 

நன்றி- மத்திய வங்கி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X