2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பங்கு வர்த்தகத்தின் வகைகளும் Warren Buffet இன் அறிவுரைகளும்

Editorial   / 2019 ஜனவரி 03 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மற்றைய வர்த்தகங்களை போலவே பங்கு வர்த்தகமும் பொதுவாக வாங்கி விற்பதிலேயே தங்கியிருக்கின்றது. இவ்வாறு வாங்கி விற்பதை நாம் இரண்டு முறையாக பிரிக்கலாம். முதலாவது தினசரி வர்த்தகம் மற்றையது நீண்டகால முதலீடு.   

தினசரி வர்த்தகம் (Day Trading) - பங்குகளை வாங்கிய அதே நாளே விற்பனை செய்தலை, தினசரி வர்த்தகம் எனக் குறிப்பிடலாம். இவர்களை Day Traders என அழைப்போம். புதிதாக பங்கு வர்த்தகத்தில் இணைந்தவர்களுக்கு இது உகந்த ஒரு முறையல்ல. தினசரி வர்த்தகம் செய்வதற்கு மிக முக்கியமாக சிறந்த அனுபவம் தேவை. அத்துடன், பொறுமையும் சந்தர்ப்பங்களை விளங்கிக் கொள்ளக்கூடிய தன்மை, ஆசைகளை மட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய தன்மையும் காணப்பட வேண்டும்.  

உதாரணமாக - முதலீட்டாளர் ஒருவர் நிறுனமொன்றின் பங்குகளை 100 ரூபாய் விலையில் 1,000 பங்குகளை காலையில் கொள்வனவு செய்கின்றார் என வைத்துக்கொள்வோம் அத்துடன், மதியமளவில் அப்பங்கின் விலை 110 ரூபாயாக உயர்வடை கின்றவேளை, விற்பனை செய்தால் அவருக்கு ஒரு பங்குக்கு 10 ரூபாய் படி 1,000 பங்குகளுக்கும் மொத்தமாக 10,000 ரூபாய் இலாபமாக பெறுவார். இதனை இரட்டிப்பாக்க அடுத்த நாள் 105 ரூபாய் விலையில் 10,000 பங்குகளை காலையில் கொள்வனவு செய்கின்றார். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கொன்றின் விலை 100 ரூபாய்களாக குறைந்தால் அவர் பங்கொன்றுக்கு 5 ரூபாய் விகிதம் மொத்தமாக 50,000 ரூபாய் நட்டமடைய வேண்டி ஏற்படும். இவ்வாறு அனுபவம் இல்லாமல் நட்டமடையும் பொழுது அவர் அடுத்த நாளே சந்தையை விட்டு ஓடிவிட வாய்ப்புள்ளது. ஆகவேதான், தினசரி அல்லது குறுங்கால வர்த்தகத்துக்கு அனுபவம், சந்தை, கம்பனிகள் பற்றிய அறிவு இன்றியமையாததாக காணப்படுகின்றது.  

நீண்டகால முதலீடு (Long Term Investment) - இது ஒரு சிறந்த வர்த்தக முறை. ஒருபங்கை வாங்குவதற்கு முன் அந்த நிறுவனத்தை பற்றியும் அதனுடைய நிர்வாகத்தில் உள்ளவர்கள் பற்றியும் அந்த நிறுவனம் சார்ந்துள்ள தொழில் துறைக்கு எதிர்காலத்தில் உள்ள பிரகாசமான வளர்ச்சி வாய்ப்புகள் பற்றியும் தௌ்ளத் தெளிவாக அலசி ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பங்கை வாங்கி 2 அல்லது 3 வருடங்கள் கழித்து விற்கும் முறை. பங்குச்சந்தை ஜாம்பவானான Warren Buffetஇன் உத்தியும் இந்த நீண்டகால முதலீட்டு முறையாகும்.

ஒரு தரமான நிறுவனம், சிறந்த துறையில் உள்ள நிறுவனம், வளமான எதிர்காலம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை சரியான நேரத்தில் அல்லது இவ்வாறான நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏதேனும் ஒரு காரணத்தால் வீழ்ச்சியடைந்திருக்கும் தருணம் பார்த்து கொள்வனவு செய்து ஒருசில அல்லது பல வருடங்கள் கழித்து பல மடங்கு அதிகவிலையில் விற்பனை செய்யலாம்.  
பங்குச் சந்தையின் தந்தை Warren Buffe இன் பொன் மொழிகள்:

‘ஒரு சிறந்த தொழில் துறையில் உள்ள தரமான நிறுவனம் வீழ்ச்சியில் இருக்கம் நேரம், அப்பங்கை வாங்க சரியான நேரமாகும்’ - அந்த நிறுவனம் தரமான, ஒன்று அதன் தொழில் துறையும் சிறந்தது. ஆகவே, அந்நிறுவனம் சில ஆண்டுகளில் மீண்டெழும் வாய்ப்புகள் அதிகமாகும். இப்படிப்பட்ட நிறுவனங்களின் வீழ்ச்சியில் இருக்கும் பொழுது, விலையும் அதிமாகச் சரிந்திருக்கும். எனவே, பங்கை வாங்க அதுமிகச் சரியான தருணமாகும்.  

‘எல்லோரும் பேராசைப்படும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் பின்வாங்கும் பொழுது பேராசைப்படவேண்டும் - எல்லோரும் பேராசைப்படும் பொழுது எதனையும் பற்றி பார்க்காமல் அனைவரும் பங்குகளை வாங்குவார்கள். 

ஒரு பங்கை அதற்கு உரிய விலையை விட அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஏனென்றால் பங்கின் விலை உயர்ந்து வருகிறது. அனைவருக்கும் தங்களின் முதலீட்டை குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கும் பேராசை. 

எனவே, அந்த குறிப்பிட்ட பங்கு உயர்ந்து கொண்டே போகும் என்ற ஆசையில், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, வியாபார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பற்றிக் கவலைப்படாமல், வாங்குவார்கள்; ஒரு எதிர்மறை நிகழ்வு நடந்தால் அப்போதுதான் பங்கிற்கு தகுதியான விலை என்ன என்று ஆராய்ச்சி நடக்கும். பங்கின் விலை ஊதி பெரிதாக்கப்பட்ட நிலைவரம் தெரிய வரும்.  


- இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X