2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாற்றீடில்லாமலே தடையா?

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மத்திய சூழல் அதிகார சபை பொலிதீன் பைகள், உணவு கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் பொலிதீன் மற்றும் ரெஜிஃபோம் பெட்டிகள் போன்றவற்றுக்கான பாவனைத்தடையை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தது.

நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் ஆராய்ந்து, அதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானத்தை அரசுடன் இணைந்து மத்திய சூழல் அதிகார சபை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளாஸ்ரிக், பொலிதீன் தொடர்பான புதிய விதிமுறைகளின் நீடித்ததன்மை, அவை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு, அவை முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பான கண்காணிப்பு மற்றும் அவற்றுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப்பொருட்களின் பரந்தளவில் கிடைக்கும் தன்மை என்பவற்றை பொறுத்து அமைந்திருக்கும்.

2018 இல் நாட்டில் பொலிதீன் பாவனையை முற்றாக இல்லாமல் செய்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015 ஓகஸ்ட் மாதமளவில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணித்திருந்தார். இவ்வாறு பணிக்கப்பட்டு இரு வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அண்மைக் காலங்களில் நாட்டில் ஏற்பட்ட திண்மக்கழிவு தொடர்பிலான பிரச்சினைகள் காரணமாக இந்தத் தடை தொடர்பில் உடனடியாகச் செயலாற்ற வேண்டிய நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

ஆயினும் சந்தையில் பொலிதீன் பொருட்களுக்கு மாற்றான தயாரிப்புகள் போதியளவு உள்ளனவா? அவற்றுக்குப் பொது மக்கள் மத்தியில் எவ்வாறானதொரு வரவேற்பு காணப்படும்? பொலிதீன் பைகளுடன் ஒப்பிடுகையில், மாற்றுத்தயாரிப்புகளின் விலைகள் எந்த வகையில் அமைந்திருக்கும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தப் பொலிதீன் பைகள் பெருமளவில் பயன்படுத்தப்படும் பகுதிகளாக சுப்பர் மார்க்கெட் தொடர்களை குறிப்பிடலாம். குறிப்பாக மேல் மாகாணத்தில் சுப்பர் மார்க்கெட்கள் பெருமளவில் பரந்து காணப்படுகின்றன. இவற்றுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தமது சௌகரியம் கருதி, கொள்வனவு செய்யும் பொருட்களை பொலிதீன் பைகளில் கொண்டு செல்கின்றனர். சில சுப்பர் மார்க்கெட்களில் பொலிதீன் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை கொண்டு வருமாறு அறிவுறுத்தல்களும், அவற்றை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பெருமளவானோரை ஊக்குவிப்பதற்கு அந்த செயற்பாடுகள் கவர்ச்சிகரமானதாக இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் பொலிதீன்கள் என்பதில் பொலிதீன் பைகள் மட்டுமின்றி, உணவுப்பொருட்கள், சலவைப்பொருட்கள், விளையாட்டுப்பொருட்கள் போன்ற வெவ்வேறு தயாரிப்புகளை அடைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மேலுறைகளும் இந்த ரகத்தில் அடங்கும். இவற்றுக்கு மாற்றுத்தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பிலும் குறித்த உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்த மாற்றுச் செயற்பாடுகளின் மூலமாக நுகர்வோருக்கு பாதிப்பின்றிய வகையில் புதிய புத்தாக்கமான தீர்வுகளை சந்தையில் நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டியது தேவையாக அமைந்துள்ளது.

நாட்டில் எழுந்துள்ள திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வாக பொலிதீன், பிளாஸ்ரிக் பாவனையை ஒரே தடவையில் இடைநிறுத்துவதற்கு பதிலாகப் படிப்படியாக அவற்றைக் குறைத்து, சந்தையில் அவற்றுக்குப் பதிலான மாற்றுப்பொருட்களின் பாவனையை அறிமுகம் செய்வது குறித்தும் அரசு கவனம் செலுத்தலாம்.

உலகளாவிய ரீதியில்  நாடுகளை எடுத்துக்கொண்டால், ஆசியப் பிராந்தியம் மற்றும் மேலைத்தேய நாடுகளிலும் பொலிதீன் பாவனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்நாடுகளில் பின்பற்றப்படும் வழிமுறைகளைக் கவனிக்கும் போது, டென்மார்க் 1994 ஆம் ஆண்டு பொலிதீன் பைகளின் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தயாரிப்புகளின் மீது வரி அறவிடும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்த வரி அறவீட்டு முறை அமுலுக்கு வந்ததன் பின்னர், அந்நாட்டின் பொலிதீன் பாவனை ஐம்பது சதவீதத்தால் குறைந்திருந்தது. அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பொலிதீன் பாவனைக்கு குறைந்தளவு நுகர்வை கொண்ட நாடாக டென்மார்க் திகழச் செய்தது. ஆசிய நாடுகளைப் பொறுத்தமட்டில், பங்களாதேஷ் 2002 இல் பொலிதீன் பாவனைக்குத் தடை விதித்திருந்தது. அந்நாட்டில் 1989 மற்றும் 1998 ஆகிய வருடங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களுக்கு பொலிதீன் பைகள் முக்கிய காரணிகளாக அமைந்திருந்தன. ஆனாலும் சட்ட விதிமுறைகள் இன்மை மற்றும் மாற்று பாவனைப்பொருட்கள் இன்மை காரணமாக பொலிதீன் பைகள் தொடர்ந்தும் உபயோகப்படுத்தப்படுகின்றன.

அதுபோன்று, 2008 இல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக சீனாவில் பொலிதீன் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொலிதீன் பாவனை நாட்டில் 66 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக சீனா நாட்டு அதிகார அமைப்புகள் அறிவித்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .