2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்தத் திட்டம்

Menaka Mookandi   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவற்றுக்குத் தேவையான சார்ஜ் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில், மின்சாரத்தில் இயங்கும் 5500 வாகனங்கள், இலங்கையில் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், அவ்வாகனங்களுக்குத் தேவையான சார்ஜ் நிலையங்கள், 70 காணப்படுகின்றன.

படிப்படியாக, மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை, அவற்றுக்கான சார்ஜ் நிலையங்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது.

படிப்படியாக, மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை, அவற்றுக்கான சார்ஜ் நிலையங்களுக்கான கேள்வியும் அதிகரித்துள்ளது. இதனால், இத்துறையை மென்மேலும் அபிவிருத்தி செய்வதற்காக, முறையான ஒழுங்குபடுத்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில், அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இந்த ஒழுங்குபடுத்தல் முறையை மேற்கொள்ளும் பொறுப்பு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, மின்வலுச் சட்டம் மறுசீரமைக்கப்படவுள்ளது. அதனூடாக,  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் மேலும் சில அதிகாரங்கள் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, மின் விநியோகம் என்பதன் அர்த்தம் மாற்றப்பட்டு, அதற்குள் வாகனங்களுக்கான மின்சாரத்தை வழங்கலும் உள்ளடக்கப்பட உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்களை ஒழுங்குபடுத்துவதன் ஊடாக, கட்டணங்கள், பாவனையாளர்களின் பாதுகாப்பு, பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், நிலையங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற தீர்வுகளை, தன் மீதான நம்பிக்கையாளர்களுக்கு வழங்க, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அந்தவகையில், ஆணைக்குழுவினால் தற்போதைக்கு கண்டுபிடிக்கப்பட்ட பிரச்சினைகள் சிலவும் காணப்படுகின்றன. தொடர் மின் விநியோகம் வழங்கப்படாமை, அப்பிரச்சினைகளில் ஒன்றாகும். மின்சாரத் தடை ஏற்படுகின்ற போதிலும், அவற்றைச் சீர் செய்வதற்கான மத்திய நிலையங்கள் வரையறுக்கப்பட்ட அளவிலேயே காணப்படுவதால், பாவனையாளர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்.  

சார்ஜ் நிலையங்களில் காணப்படும் சார்ஜ் இயந்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மை தொடர்பில், பொதுமக்கள் திருப்திகொண்டிருப்பதில்லை. அங்கு வழங்கப்படும் வோட்டளவை அளவிட்டுக்கொள்வதில் அங்கு காணப்படும் சிரமமே, இந்த அதிருப்திக்குக் காரணமாகியுள்ளது. அதனால், சார்ஜ் நிலையங்களில், சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னரான வாசிப்பு மற்றும் சார்ஜ் செய்யப்பட்டதன் பின்னரான வாசிப்பு என, அளவீடுகளைக் குறித்துக் காட்டும் வசதிகளின் தேவை அவசியமாகின்றது.

சாதாரணமாக, இவ்வாறான நிலையங்களில், கட்டண அறவீட்டுக்கு இரு முறைகள் கையாளப்படுகின்றன. மணித்தியாலத்துக்கான கிலோவோட் அளவுக்கான அறவீடு மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டண அறவீடு என்ற இரு முறைகளே இங்கு கையாளப்படுகின்றன. இவற்றில், நேரத்துக்கு ஏற்ப கட்டண அறவீட்டில், பயனாளர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. இதனால், நம்பிக்கைக்குரிய அளவீட்டு முறையொன்று தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களைக் கொள்வனவு செய்பவர்களில் பெரும்பாலானோர், அதனை மின்சாரத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியும் என்றே நினைக்கின்றனர். இருப்பினும், இவ்வாகனங்களின் பிளக்குகள், வாகனத்துக்கு வாகனம் வேறுபட்டே காணப்படுகின்றன. உதாரணமாக, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லீப் ரக கார்களில், 20 அம்பியர் ரக செருக்கிகளே காணப்படுகின்றன. இதற்குப் பொறுத்தமான செருக்கியொன்றின் விலை, சந்தையில் 10,000 ரூபாய்க்கும் அதிகமாகவே விற்பனைக்கு உள்ளது. இதன் விலை அதிகம் என்பதால், தரம் குறைந்த செருக்கிகளைக் கொள்வனவு செய்வதில், பாவனையாளர்கள் அக்கறை செலுத்துகின்றனர். இது, மிகவும் அபாயகரமான நிலைமையாகும். வாகனமொன்று, தொடர்ந்து சுமார் 10 மணித்தியாலங்கள் சார்ஜ் செய்யப்படும் போது, இந்த தரம் குறைந்த செருக்கிகள் சூடாகி, உருகிப்போய்விட வாய்ப்புள்ளது.

மேற்குறிப்பிட்ட விடயங்களை அவதானத்திற்கொண்டே, அனைத்து மின்சார வாகன சார்ஜ் நிலையங்களையும் ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கொன்றும் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் பிரகாரம், மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட, மின்சார வாகனப் பயனாளர்கள் மற்றும் சார்ஜ் நிலையங்களின் உரிமையாளர்கள் ஆகியோரும், தங்களது கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளும் அளிக்கப்படவுள்ளன. இது தொடர்பில், பல்வேறு தரப்பினரும் வழங்கும் யோசனைகளைத் அவதானத்திற்கொண்டு, தேவையான வரையறைகள், வழிமுறைகள், தரம் மற்றுட் கட்டள அறவீட்டு முறைகள் தயாரிக்கப்படவுள்ளன. பொதுமக்களுக்கான இந்தக் கருத்தரங்கு, எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டம், இவ்வருட பிற்பகுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முதற்பகுதியில் செயற்படுத்தப்படவுள்ளன. நிலையங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலம், கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படப் போவதில்லை. அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே கட்டண அறவீடே அறிமுகப்படுத்தப்படும்.

தற்போது இலங்கையில், பல்வேறு வகையில் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான கட்டணம் அறவிடப்படுகின்றது. உதாரணமாக, கொழும்பை அண்மித்தப் பகுதிகளில், கிலோவோட்டுக்கு 50 ரூபாய் அறவிடப்படும் அதேவேளை, வெளிப் பிரதேசங்களில் 70 ரூபாய் அறிவிடப்படுகிறது. நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும், மின்சாரக் கட்டணம் ஒரே அளவில் காணப்படுகின்ற போதிலும், வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கு மாத்திரம், வௌ;வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. இது அசாதாரண நடவடிக்கையாகும். இது தொடர்பில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது. இதனால், ஒழுங்குபடுத்தல் மூலம், சார்ஜ் நிலையங்களை நடத்தி வருபவர்களைப் போன்றே, அவற்றின் சேவைகளைப் பெறும் பொதுமக்களும் நன்மை அடைய முடியும்.

தகவல்:

ஜயநாத் ஏரத்

பணிப்பாளர் (தகவல் தொடர்பாடல்)

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .