2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முதலீ்ட்டின் ஆதாரமும் வருமானத்தின் அடித்தளமும் சேமிப்பாகும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர் நமக்கு, சேமிப்பின் மகத்துவத்தைத் தனியாகச் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நமது அன்றாட வாழ்வில் இந்தச் சேமிப்பும் ஓர் அங்கமாகத்தான் உள்ளது. குறிப்பாக,பிள்ளைப் பராயத்தில் சில்லறைகளைச் சேமிப்பதில் தொடங்குகின்ற இப்பழக்கம், நாம் வளர்ந்து பெரியவர்களாகி தமது வருமானத்துக்கு அமைவாகச் செலவினங்களைக் கட்டுப்படுத்தி, எமது எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிப்பதுவரையும் தொடர்கிறது.  

இலங்கையர்கள் பெரும்பாலானவர்களின் சேமிப்பு, அவர்களது திடீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது திட்டமிடப்பட்ட செலவுகளைப் பூர்த்தி செய்வதற்காகவோ பயன்படுத்தப்படுகிறது. மாறாக,சேமிப்பையும் ஒரு வருமான மூலமாக எப்படி மாற்றியமைத்துகொள்ளுவது என்பது தொடர்பில் பெரிதும் அக்கறையற்றவர்களாகவே இருக்கிறோம்.

இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின்படி, தனிநபர் சேமிப்பானது 2012ஆம் ஆண்டில் 27.2 % மாகவிருந்த போதிலும், 2015ஆம் ஆண்டில் 22.6% மாகக் குறைவடைந்துள்ளது. 

ஆனால், இக்காலப்பகுதியில் சராசரியாக  தனிநபர் ஒருவரின் வருமானம், மாதமொன்றுக்கு  25,900/- (2012) இலிருந்து 30,900/- (2015)ரூபாவாக அதிகரித்துள்ளது. அதிகரித்த செலவினங்கள், வருடந்தோறும் கூடிச்செல்வது சேமிப்பை ஒரு குறிப்பிட்ட அளவில் தொடர்ச்சியாகப் பேண முடியாதநிலையையும் உருவாக்கியுள்ளது. இதற்கு மிகமுக்கிய காரணமாகவிருப்பது, பெரும்பாலான சிறிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள், மூலாதாரமாக ஒரு வருமானவழியை அல்லது மாதசம்பளத்தை மாத்திரமே நம்பியுள்ளமை ஆகும்.

ஆகவே, சிறிய மற்றும் நடுத்தர வருமானமுள்ள குடும்பங்கள் உட்பட யாவரும் ஸ்திரத்தன்மையைப் பேணிக்கொள்ளத்தக்கவகையில், தங்களுடைய சிறிய சேமிப்புகளையும் எவ்வாறு வருமானம் ஈட்டக்கூடியவகையில் முதலீடு செய்யமுடியும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகிறது.  

முதலீட்டு தயக்கம்

நிலையற்ற வட்டிவீதங்கள், பங்குசந்தையின் வீழ்ச்சி, கடந்தகால ஏமாற்று அனுபவங்கள், போதிய அனுபவமின்மையோடு மேற்கொண்ட புதிய முயற்சிகள் என்பன சேமிப்பை முதலீடாக மாற்றுவதில் சிக்கல் நிலைமையை இலங்கையில் ஏற்படுத்தி இருக்கிறது. தேசிய சேமிப்பின் 80% சதவீதமானவை வங்கிகளில் சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகளில் தங்கி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வங்கி சேமிப்புகள் ஒப்பீட்டளவில் பாதுகாப்பானவை என்கிறபோதிலும், வட்டிவீதங்கள் பணவீக்கங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகவே உள்ளது. 

வட்டி வீதங்கள் குறைவாகவுள்ளபோதிலும், தொடர்ச்சியாக வங்கிகளிலேயே பணத்தினை தேக்கிவைத்திருக்க மக்கள் விரும்புகின்றமைக்கு, மிகமுக்கிய காரணம் பாதுகாப்பும், முதலீட்டு திட்டங்கள் தொடர்பான போதிய அறிவைக் கொண்டிருக்காமையும் ஆகும்.

 பாதுகாப்பான முதலீடுகள்  

இலங்கையில் அனைத்து பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்களுமே இலங்கை மத்திய வங்கியின் பூரண கண்காணிப்பில் உள்ளதால், பாதுகாப்பானதாகவே உள்ளது. 

கடந்தகால வங்கிகளின் நிதிப் பிரச்சினைகளின் பின்பு, மத்தியவங்கியின் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக , நிதி உபகரணங்களில் (Financial Instruments) முதலீடு செய்வதென்பது பாதுகாப்பானதாக மாற்றமடைந்துள்ளது. ஆயினும், முதலீட்டின் மூலமாக வருமானத்தைப் பெறுவதில் தனியே மத்தியவங்கியின் பாதுகாப்பு மாத்திரம் போதுமான ஒன்றல்ல. 

மக்களுக்கு முதலீடுகள் தொடர்பிலும், சந்தையில் ஏற்படுகின்ற மாற்றங்கள், முதலீட்டு காலம் தொடர்பிலும் போதிய விளக்கத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகிறது. 

உதாரணமாக, அரச நிதி உபகரணங்கள் (Government Securities) மிகப்பாதுகாப்பானவை. நீண்ட மற்றும் குறுகியகாலத்தில் முதலீட்டை நிச்சயம் மீளப்பெறக்கூடிய உத்தரவாதத்தை அரசே வழங்கும். எனவே, இதற்கான வட்டிவீதம் சந்தை நிலவரத்துடன் ஒப்பிடுமிடத்துக் குறைவானதாக இருக்கும். அதுபோல, தனியார் நிதி உபகரணங்கள் (Private Securities & Debts) அரச உத்திரவாதத்தை கொண்டவை அல்ல.

தனியார் நிறுவனங்களின் தொழில்சார் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவென பொதுமக்களிடமிருந்து நிதியைப்பெறப் பயன்படுகின்ற நிதிமூலங்களான இவை ஒப்பீட்டளவில் அதிக வட்டிவீதத்தை மக்களுக்கு வழங்கும். காரணம், அரச உபகரணங்களுடன் ஒப்பிடும்போது, பாதுகாப்புதன்மை குறைந்தவையாக உள்ளமையே இதற்குக் காரணமாகும். எனவே, முதலீட்டு வழிகளைத் தெரிவு செய்யும்போது, தனியே கவர்ச்சிகரமான வருமான வீதங்களை மட்டுமே கவனத்தில் கொள்ளாமல், முதலீட்டின் காலம் மற்றும் முதலீட்டு அபாயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அப்போதுதான், சேமிப்புகளைப் பாதுகாப்பான முதலீட்டு வழிமுறைகள் மூலமாக, வருமானமாக மாற்றிக்கொள்ள முடியும். அவ்வாறுசேமிப்புக்களை வருமானமாக மாற்றிக்கொள்ளக்கூடிய வழிமுறைகளைச் சற்றே பார்க்கலாம். 

செல்வ மேலாண்மை (Wealth Management)  

அண்மைக் காலத்தில் இலங்கையில் பிரசித்தம் பெறுகின்ற இன்னுமொரு சேமிப்பு சார்ந்த முதலீட்டு முறை இதுவாகும். எதிர்காலத்தை நோக்கிய ஒரு திட்டத்துக்கு வருமான அளவைப்பொறுத்து, சேமிப்பை முன்னதாகவே நிலையாகத் தெரிவு செய்துகொண்டு சேமிக்கும் திட்டம் இதுவாகும்.

குறித்த சேமிப்புக் காலத்துக்கான வட்டிவீதமும் வங்கிகளை விட இம்முறையில் அதிகமாக வழங்கப்படும். கூடவே, Withholding Tax வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. எனவே, சரியான கால அளவில் எதிர்காலத் திட்டத்தை வகுத்துக்கொண்டு வாழ்பவர்களுக்கும், நிலையான சேமிப்பை மாதமாதம் மேற்கொள்ளவேண்டும் என்பவர்களுக்கும் இது மிகசரியான வழிமுறைகளில் ஒன்று. 

 பங்குச்சந்தை (Share Market)  

பங்குப்பரிவர்த்தனை மூலமான வருமானம் ஈட்டல் முறைமை இதுவாகும். குறித்த நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குசந்தையின் சரியான சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம், இலாபப்பங்கையும் (Dividend), மீண்டும் அதை விற்பதன் மூலமாக மூலதன இலாபத்தையும் (Capital Gain) பெற்றுக்கொள்ளக் கூடிய வழிமுறை இதுவாகும். 

எந்தவொரு தனிநபரும் பங்குச்சந்தையில் தனது கொடுக்கல்,வாங்கல்களுக்குத் தானே பொறுப்பாவார்கள் என்றவகையில், பங்குப் பரிவர்த்தனை தொடர்பிலான அடிப்படை அறிவை முதலீட்டாளர்கள் பெற்றிருத்தல் அவசியமாகிறது. 

பங்கு கொடுக்கல்வாங்கல் மற்றும் பங்குச்சந்தைக்கு என நேரஒதுக்கலை மேற்கொள்ள முடியாதவர்கள் நம்பிக்கை நிதியங்களின் பங்குகள் (Unit Trust) மீது முதலீடுகளை மேற்கொள்ளலாம். 

 அசையாச் சொத்துகளில் முதலீடுகள் 

 தற்காலத்தில் அசையா சொத்துகள் மீதான முதலீடுகள்அதிகரித்துச் செல்லும் வருமானத்தையும் எதிர்காலத்தில் மூலதன இலாபத்தையும் தரக்கூடியனவாக உள்ளன. குறிப்பாக, அசையா சொத்துகளான காணி, கட்டடங்கள் மீதான சரியான முதலீடு நிலையான வருமானத்தையும் முதலீட்டு இலாபத்தையும் தரக்கூடியனவாக உள்ளன. இன்றைய நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் தொழில்சார்துறைகளின் வளர்ச்சி காணிகள் மற்றும் கட்டிடங்கள் மீதான கேள்வியை அதிகரித்து கொண்டே செல்கிறது.

அசையும் சொத்துகளில் முதலீடுகள்   

பணமாகவோ, வங்கிகளிலோ அல்லது உடனடிப் பணமாகவோ மாற்ற முடியாத சொத்துகளில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு உரித்தான மற்றுமொரு முதலீட்டு வழிமுறை இதுவாகும். சேமிப்புக்கு ஏற்றவகையில், முதலீடுகளை மேற்கொண்டு சந்தையின் மாற்றங்களுக்கு ஏற்ப, வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். 

உதாரணமாக, தங்கம் மீதான முதலீடு; தங்கம் விலைகுறைவான காலத்தில் கொள்வனவு செய்து, விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில் விற்பனை செய்கின்ற எளிய முறைமை இது.

  புதுவணிகங்கள் மீதான முதலீடு (Startup Business Investment)  

ஒரு சில வருடத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள மிகமுக்கியமான முதலீட்டு முறைமை இதுவாகும். மிகச்சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட வணிகங்களுக்கு முதலீடுகளை மேற்கொண்டு அதன்மூலமாக வருமானத்தைப் பெருக்குவதுடன், முதலீட்டு இலாபத்தையும் பெற்றுக்கொள்வதாகும். இத்தகைய முதலீட்டாளர்களை, ‘தேவதை முதலீட்டாளர்கள்’ (Angel Investors) என்றும் அழைப்பார்கள்.

ஆரம்பிக்கின்ற அனைத்து வணிகங்களுமே சமூகத்தில் வெற்றியடைவதில்லை. எனவே, வணிகங்கள்மீதான முதலீடுகள் அதிக வருமானத்தைத் தரும் அதேவேளை, அதிகஆபத்தையும் கொண்டதாக உள்ளது. குறித்த வணிகத்தின் வணிகத்திட்டம் (Business Plan), அவர்களின் கடந்தகால வணிக நடத்தை (Business Activity) மற்றும் எதிர்கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட நிதி அறிக்கைகள் (Forecast Financial Statement) என்பவற்றைக் கவனமாக ஆய்வு செய்வதன் மூலமாக, வணிகத்தின் ஸ்திரத்தன்மையை அறிந்துகொண்டு முதலீட்டை செய்ய முடியும். 

இப்படியான, பல்வேறு முதலீட்டுத் திட்டங்களூடாகத் தனியே சேமிப்பது மட்டுமின்றி, அந்தச் சேமிப்பின் ஊடாகவும் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இதற்குத் தனியாக, சுயவேலைத் திட்டங்களை திட்டமிடவோ, ஆரம்பிக்கவோ தேவையில்லை. மாறாக, முறையாக முதலீட்டுத் திட்டங்களை ஆய்வு செய்து, நமது சேமிப்புக்கு ஏற்ற வகையில் ஒன்றைத் தெரிவு செய்வதன் மூலம், சேமிப்பை அதிகரிப்பதுடன் வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .