2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூலதனச் சந்தை முதலீடுகள்: அனுபவத்துடன் இணைந்த அறிவுச் செல்வத்தின் பிறப்பிடம்

Editorial   / 2018 மார்ச் 08 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. திலீபன்   
கொழும்பு பங்குச் சந்தை - யாழ் கிளை  


நாம் அனைவரும் முதலீட்டுப்பிரியர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. சில முதலீடுகளினால் நாம் கவரப்பட்டு முதலீடு செய்கின்றோம் அல்லது முதலீடு செய்ய உத்தேசிக்கின்றோம். எமக்குப் பரிச்சயமற்ற முதலீடுகளில் முதலீடு செய்ய உத்தேசிக்கின்ற பொழுது ஒன்றுக்கு இரண்டு தடவைகள் தகுதியானவர்களுடன் அவற்றின் சாதக மற்றும் பாதக நிலைமைகள் பற்றி கலந்து ஆலோசித்து தீர்மானத்துக்கு வருதல் ஆரோக்கியமானதாகும். 

மாறாக முன்அனுபவமுடைய அல்லது பாரம்பரிய தொழில் முயற்சியைப் பொறுத்த வரையில் எனக்கு நிகர் நாங்களே என்ற தன்னம்பிக்கையுடன் ஆரம்பிக்க முடியும். ஒரு முயற்சியின் வெற்றி மதிப்பீடு செய்யும் முதன்மையான காரணியாக வருமானம் அமைகின்றது. ஆனால், முதலீடுகளிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானங்களைப் பொதுவாக நாம் எதிர்வு கூறமுடியும், ஆனால், முன்னராக உறுதிப்படுத்திக் கொள்ளுதல் கடினம். அதாவது முதலீடு என்பது பணத்தை வருமானத்தைத் தோற்றிவிக்கக் கூடிய சொத்தாக அல்லது முயற்சியாக மாற்றுவதைக் குறிக்கும்.   

முதலீட்டுக்கான பிறப்பிடமாக சேமிப்பு அமைகின்றது. சேமிப்பு பொதுவாக, பணத்தை வங்கிசார் நிதி நிறுவனங்களில் பணம்சந்தைக் கருவிகளில் பேணுவதனைக் குறிக்கின்றது. செலவிடத்தக்க வருமானத்தில் இருந்து நாளாந்த நுகர்விற்குச் செலவுசெய்தது போக எஞ்சிய வருமானம் சேமிப்பாக கொள்ளலாம். அல்லது நிகழ்கால நுகர்வினை தியாகம் செய்வதன் மூலமாக அல்லது காலம்தாழ்த்திச் செலவு செய்வதன் ஊடாகச் சேமிப்புகளை நாம் பெருக்கிக்கொள்ள முடியும்.

இன்றைய காலகட்டத்தில் செலவுக்குப் பின்பான வருமானம் என்பது ஒரு வகையில் பலப்பரீட்சையாக அமைந்துள்ளமையை நாம் ஒவ்வொருவரும் பாடமாக கொண்டுள்ளோம். ஆனால் உணரத்தவறவில்லை. இத்தகைய சேமிப்புகள் இன்றி எமது வாழ்க்கைத்தரத்தை உயர்வாகப் பேணிப்பாதுகாத்தல் சாத்தியமன்று. ஆதலால் இன்று தொடக்கம் வருமானத்தில் சிறு பகுதியை முதலில் சேமிப்பிற்காக ஒதுக்கிய பின்னர் எஞ்சியுள்ள வருமானத்தைச் செலவு செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டும்.   

நீங்கள் நிதிச் சுதந்திரம் உள்ளவரா?   

பல முதலீட்டுத் தெரிவுகள் உங்களுக்குப் பலமாக அமையினும், அவை உங்களுக்கு பூரண நிதிச் சுதந்திரத்தைப் பெற்றுத் தருகின்றதா என்பது பற்றிச்சிந்திக்க மறக்காதீர்கள். திட்டமிட்டு செலவீனங்களை குறைத்து அல்லது காலம் தாழ்த்தி பணத்தைச் சேமிக்க முடியும். அவற்றில் சிறு தொகையைக் கிரமமாக முதலீடு செய்யப்பழகிக் கொள்வதன் ஊடாக நாம் ஒவ்வொருவரும் நிச்சயமாக நிதிச்சுதந்திரத்தை அடைந்து கொள்ளலாம். உண்மையில் நிதிச்சுதந்திரம் என்பது எம்மிடமுள்ள சேமிப்புத் திரட்டைக் கருதவில்லை என்பதனை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

உதாரணமாக ஒருவர் தனது வாழ்நாள் சம்பாத்தியமாக ரூபா 50 இலட்சம் பெறுமதியான வங்கிசேமிப்பினையோ அல்லது அதற்கு நிகரான பெறுமதியான தங்க ஆபரணத்தினைக் கொண்டிருத்தல் நிதிச்சுதந்திரமாக அமைந்துவிடுமா? இல்லை.   

உண்மையில் நிதிச்சுதந்திரம் என்பது முயற்சி இன்றி உங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்வாகப் பேணக்கூடிய வகையில் நாளாந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடிய நிலையானதும் நிலைத்திருக்கக் கூடியதுமான வருமானத்தினைப் வழங்கக்கூடிய முதலீட்டுத் தேக்கத்தை (Portfolio investment) நீங்கள் கொண்டிருப்பீர்களேயானால் அதுதான் உண்மையில் உங்களுக்குரிய நிதிச்சுதந்திரமாக அமையும்.

எளிய வழியில் குறிப்பிடுவதானால், நாம் பணத்திற்காக வேலை செய்வதனைக் படிப்படியாக் குறைத்து பணத்தினை எமக்கான வேலை செய்யக்கூடிய வகையில் முதலீட்டு மூலங்களை எமது முதலீட்டுத் தேக்கத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். இது காத்திரமான முதலீட்டுத் திரும்பல்களை உச்சப்படுத்துவதுடன், இடர்நேர்வுகளை இழிவுபடுத்தி முதலீடுகளைப் பன்முகப்படுத்தவும் உதவும். நிதிச் சுதந்திரத்தினை அடைந்து கொள்ளும் வகையில் எமது முதலீட்டுத் திட்டமிடல்கள் முறைமைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு பின்வருவனவற்றை நாம் குறிப்பிடலாம்.   

 இயற்கையால் வரையறுக்கப்பட்ட எமது உடல் மற்றும் உளரீதியான இயலுமை:

அதாவது பணம் உழைக்க வேண்டும் என்ற விருப்பம் அல்லது தேவைகள் இருந்தும் எம்மால் ஒர் எல்லைக்கு அப்பால் தொடர்ச்சியாக முயற்சி செய்ய இயலாமை.

 எதிர்கால நிச்சயமற்ற தன்மைகள்: 

பல்வேறு நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியில் எமது வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்கின்றோம். எல்லாம் நாம் எதிர்பார்ப்பது போல் எல்லாம் அமைந்து விடுவதில்லை. இவ்வாறான நிலைமைகளைச் சமாளிக்க அல்லது எதிர்கொள்ள நாம் எம்மை தயார்ப்படுத்த வேண்டும்.   

தங்கிவாழ்வோர் நலன்:

 எம்மைச் சார்ந்துள்ளவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எம்மில் பலருக்கு உண்டு. அக்கடமைகளை திருப்திகரமாக நிறைவுசெய்வதற்கு அர்ப்பணிப்புகள் அவசியம்.

நிரந்தரமான மற்றும் சமாதானமான ஓய்வு:

 எமது ஓய்வூதிய காலத்தில் எமது வாழ்க்கையை வசதியாகவும் கௌரவமாகவும் வாழவேண்டும் என்ற தன்னம்பிக்கை போன்ற சிலவற்றை குறிப்பிட முடிகின்றது.   

இவற்றைத் திருப்திகரமாக அடைந்துகொள்ள நிதிச்சுதந்திரம் எமக்கு வேண்டுமல்லவா! எப்படி எம்மை நாம் தயார்படுத்திக் கொள்வது? சிந்தியுங்கள் உங்கள் வருமானத்தை எப்படி பெருக்கிக்கொள்ள முடியும். உங்கள் நடுத்தர வயதில் (25 - 50) வாழ்க்கையில் மிக உயர்ந்த வருமானத்தினைப் பெற்றுக்கொள்ளும் பொற்காலம். 

இக்காலத்தில் உங்கள் உடல் ரீதியான மற்றும் உள ரீதியான ஆற்றல்களைப் பயன்படுத்தி செயற்படு வருமானமாக (Active income) அதாவது கூலி அல்லது ஊதியம் அல்லது இலாபத்தைப் பெறுகின்றீர்கள் அல்லவா? இவ் வருமானம் உங்கள் உடல் இயக்கத்துடன் சார்ந்து உருவாக்கப்படுவதனை நீங்கள் அறிவீர்கள். எனவே, எமது இயக்கம் இன்றி இவ்வகையான செயற்படு வருமானங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியாது.   

எனவே நாம் உழைக்கக் கூடிய அதாவது செயற்பாடு வருமானமான கூலி அல்லது இலாபம் பெற்றுக்கொள்ளும் காலத்தில் செயலற்ற வருமானத்திற்கான (Passive income) விதையை விதைக்க வேண்டும். எமது முயற்சி இன்றி எமது முதலீட்டின் மூலமாக வருமானம் பிறப்பிக்கப்படுவதனால் அதனை நாம் செயலற்ற வருமானம் என்கின்றோம். உதாரணமாக நீங்கள் கட்டடத் தொகுதி ஒன்றினை வாடகைக்கு விடுவதன் ஊடாகக் கிடைக்கும் வாடகைப்பணம் அல்லது பங்குச்சந்தையில் கம்பனியின் பங்குகளின் முதலீடுசெய்து கிடைக்கும் பங்குலாபம் போன்ற வருமானங்கள் உங்கள் செயற்பாட்டு வருமானத்திற்கு மேலதிகமான ஒரு செயலற்ற வருமானமாக கருதலாம். எமது பிரதேசத்தில் அதிகளவான மக்கள் அரசதுறைசார்ந்த நிறுவனங்களில் வேலைசெய்ய விரும்புவதனை நாம் அறிவோம். விருப்பத்திற்கான பலகாரணங்கள் இருப்பினும் ஓய்வூதியத்திற்கு முக்கிய பங்குண்டு. அவ்வாறான ஓர் ஓய்வூதியரின் நிதிச்சுதந்திரம் என்பது தமது ஓய்வூதிய கால நிதியத்தினை (Retirement Fund) தமது நாளாந்த தேவைகளுக்காக செலவு செய்து கரைக்காது தொடர்சியான வருமானத்தினைத் தரக்கூடியதும், வளரக்கூடியதுமான சிறந்த பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டுத் தேக்கங்களினைத் தெரிவுசெய்து முதலீடுசெய்தால் ஒர் சிறந்த ஓய்வூதியகால முதலீட்டுத்தேக்கத்தினை (Retirement Portfolio) பேணமுடியும்.   

எமது இளமைக்காலம் தொடக்கம் வருமானத்தினைத் திட்டமிட்டு, செலவுகளை முன்னுரிமையடிப்படையில் வகைப்படுத்தி, வருமானத்தினை மிச்சப்படுத்தக்கூடிய சிறந்த தனியாள் நிதித்திட்டமிடல்களை (Perosoanl Financial Planning) ஒவ்வொருவரும் தமக்கென பிரத்தியேகமாக இன்றைய காலத்தில் தயாரித்தல் நன்று.

விவேகமான முதலீட்டாளர் யார்?   

பொருளாதார நிலைகளை முதலீட்டிற்கு சாதகமாக மாற்றியமைக்கும் திறன் கொண்ட முதலீட்டாளன் விவேகமானவன். எம்மை அவ்வாறான முதலீட்டாளனான நாம் எப்படி மாற்றிக்கொள்ள முடியும்? அது சாத்தியமாகுமா? பொதுவாக நீண்டகால அனுபவம், உலகத் தரத்திலான பகுப்பாய்வுத்திறன் மற்றும் விரைவான தகவல் அறிந்துகொள்ளும் வசதிகளைக் கொண்டவர்கள் தொடர்ந்து முதலீடுகளில் தேர்ச்சியானவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.

மேலும், இவர்கள் சந்தைகால அசைவுகளுக்கு முக்கியம் கொடுப்படுடன் அவற்றை மிகவும் துல்லியமாக அவதானித்து வழமைக்கு மாறாக, அதிக இலபத்தினை ஈட்டுவார்கள். அப்படியானால் எப்படிச் சிறிய முதலீட்டாளன் இவ்வாறான வசதிகள் இன்றி இலாபம் காணமுடியும். அதற்கான ஒரே விடை நீங்கள் நம்பிக்கையுடன் பொறுமையான கிரமமான முதலீட்டுத் திட்டத்தினை (Systematic Investment Plan) பின்பற்றத் தொடங்குங்கள். 

கிரமமான முதலீட்டு திட்டம் என்றால் என்ன?   

கிரமமான முதலீட்டுத் திட்டத்தின் மூலமாக முதலீட்டாளர்களின் முதலீடுகள் தன்னிச்சையாக பெருகுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமைவதுடன், முதலீட்டாளன் நேரத்தினை வாழ்க்கையின் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யவும் வழியமைக்கின்றது. 

மேலும் சந்தைகால அசைவுகளுடன் வினைத்திறன் குன்றிய தீர்மானங்களை இழிவுபடுத்தும் முக்கிய தகுதியினை இத்திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், சந்தைக்கால வரையறைக்குள் பல எதிர்மறையான விளைவுகளை சந்தை வெளிக்கொணருகின்றதே ஒழிய, மிகச்சிறந்த தீர்மானங்களுக்கான வாய்ப்புக்கள் அரிதாகவே அமைந்திருப்பதனை அவதானிக்கலாம். நீண்டகால அடிப்படையில் கிரமமான முதலீட்டுத் திட்டத்தின் வருமான விளைவானது மிகவும் காத்திரமானதாக அமைகின்றது.

கிரமமான சேமிப்புத் தந்திரோபாயம் இத்திட்டத்திற்கு அடிப்படையாக அமைகின்றது. குறிப்பாக முதலீட்டாளன் உத்தேசித்து முதலீட்டுத் தொகையை அல்லது பங்குகளை வாராந்தம் அல்லது மாதம் தோறும் திட்டத்திற்கு அமைவாக முதலீடாக மாற்றி தனது முதலீட்டுத் தேக்கத்துடன் இணைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தச் செயலொழுங்கு தொடர்ச்சியானதாக குறிப்பிட்ட காலத்திற்கு அமைந்திருக்கும். 

நிலுவைப்பணமானது மிகவும் திரவத்தன்மை வாய்ந்த பணச்சந்தை சார் முதலீட்டுக்கருவிகளில் அதாவது சேமிப்புக்கணக்கு அல்லது தவணையிட்ட வங்கி வைப்புக்களில் பேணிக்கொண்டால் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். உங்களுடைய முதலீட்டுத்தேக்கம் தொடர்ந்து காலத்துடன் இணைந்தவகையில் தன்னிச்சையான வளர்ந்து செல்வதனை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். இத்திட்டத்தின் முக்கிய நன்மையாக, சராசரிக் கிரயம் மற்றும் உணர்வு போன்றன அமைகின்றன.   

கிரமமான முதலீடும் ரூபாய் சராசரிக் கிரயமும்:

 கிரமமான முதலீட்டுச் செயலொழுங்களில் முதலீடுகளின் சராசரிக் கிரயமானது தொடர்ந்து குறைவடைந்து செல்கின்றது. அதவாது முதலீட்டுச் சராசரிக் கிரயத்தின் முக்கிய தோற்றப்பாடாக கிரமமான முதலீட்டுத் திட்டம் அமைகின்றது. மேலும், இவ் முதலீட்டுத் தந்திரோபாயம் முதலீட்டாளர்களை தொடர்ச்சியாக பங்குகள் மற்றும் நம்பிக்கை அலகுகளை காலக்கிரமமாக கொள்வனவு செய்யத்தூண்டுகின்றது. முதலீட்டுத் தேக்கத்தில் உள்ள பங்குகளின் சராசரிச் செலவு தொடர்ச்சியாகக் குறைவடையச் செய்கின்றது.

கிரமமான முதலீடும் முதலீட்டாளன் நடத்தையும்:

 முதலீட்டாளர்களின் நடத்ததை நிதியில் (Behavioral Finance) பாதிப்பினை எற்படுத்தவல்ல ‘பயம்’, ‘பேராசை’ மற்றும் ‘தன்னிறைவு’ போன்ற எதிரிகளை வெற்றிகொள்வதற்கு அதாவது உணர்ச்சிவயப்பட்ட (Emotion) தீர்மானங்களை குறைப்பதற்கு கிரமமான முதலீட்டுத் திட்டம் உதவுகின்றது. முதலீட்டுத் தெரிவினைக் காட்டிலும் முதலீட்டுத்தேக்கத்தின் செயற்திறன் மீது அதிக தாக்கத்தை முதலீட்டாளர் நடத்தை விளைவிக்கின்றது.   

உதாரணமாக:  முதலீட்டாளர்கள் மிக மோசமான முடிவுகளை தீவிர உணர்வின் வெளிப்பாடாக எடுப்பதனை அவதானிக்க முடிகின்றது. பங்குகளின் விலைகள் தொடர்ச்சியான உயர்வடைந்து செல்லும் போது பங்குச்சந்தைச் சுட்டிகளின் வரலாற்று அடைவுகளை கோடிட்டுக்காட்டும் பத்திரிகைச் செய்திகள் மற்றும் மாறுபட்ட சூழ் நிலையிலும் இலாபத்திற்கான ஒரு வெளித்தோற்றப்பாடு போன்றன முதலீட்டாளர்கள் அதிக இடர்நேர்வுடைய சொத்துகளை  அதாவது பிணையங்களைப் பாதகமான சூழ்நிலையிலும் வாங்க முனைகின்றனர்.

ஆனால் உண்மையில் எதிர்மறையான விளைவுகளே நிகழ்வதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமானால் பங்குகளின் அதிகரித்த விலைகள் தொடர்ச்சியாக வியக்கத்தக்க வகையில் விழ்ச்சியடைகின்றன. இச்சூழ்நிலை தொடருகின்ற போது பல முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்பனை செய்கின்றனர். இங்கு அவர்கள் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்கநேரிடும்.

இவ்வாறான சூழ்நிலைகளைத் தவிர்க்க, விலைத்தளம்பல்களை பொருட்படுத்தாது, அடிப்படையற்ற ஊடகங்களின் செய்திகளை கருத்தல் கொள்ளாது கிரமமாக முதலீட்டுத் திட்டத்தின் ஊடாக எமக்குரிய தனித்துவமான முதலீட்டுத் தந்திரோபாயத்தை வகுத்துக்கொள்ளுதல் சாலச்சிறந்தது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X