2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வங்கிகளின் பங்களிப்பும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 ஒக்டோபர் 15 , மு.ப. 02:53 - 2     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையராகிய நமக்கும் வங்கிகளுக்குமான தொடர்பு, நீண்ட வரலாற்றைக் கொண்டதாகவே இருக்கிறது.

நீர்வளம் நிரம்பிய இலங்கையில், சிறுதுளி பெருவெள்ளம் என்பதுபோல, சிறுசிறு சேமிப்புகள்தான், இன்றைய நாட்டின் பொருளாதாரத் தூண்களாகவும் அபிவிருத்திகளாகவும் இருக்கின்றன.

இங்கே வங்கிகளும் மக்களும்,  எந்தவொரு வகையிலும், ஒன்றோடு ஒன்று இணைந்தவர்களாகவே உள்ளனர். சேமிப்பு என்பது, இலங்கையர் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகவேயுள்ளது. ஆனால், முதலீடு என்று வரும்போது, இலங்கையர்கள், ஒரு தயக்கத்துடன் பின்நிற்பவர்களாக உள்ளனர்.

காரணம், முதலீடுகள் தொடர்பான பயம் என்று கூறலாம். இதன் காரணமாக, சேமிப்பின் விளைவாகக் கொடுக்கல் வாங்கலிலிருந்து வெளியேறும் பணம், முதலீடாக மீளவும் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளுக்குள் வருவதில்லை.

சேமிப்பு எனும் பெயரில், மக்களிடம் தங்கியுள்ள பணத்தை வெளிக்கொண்டு வருவதில், வங்கிகளின் செயற்பாடுகள் மிக முக்கியமானவையாகும். வட்டி எனும் கவர்ச்சி, வருமானத்தை வழங்கி, சேமிப்புகளை முதலீடாகக் கொண்டு வருவதில்,  இவற்றின் பங்களிப்பு மிகப் பெரிதாகும். அப்படியான வங்கிகளுக்குக் கிடைக்கப்பெறும் நிதியும் அவை பொருளாதாரத்துக்கு முதலீடு செய்யும் தன்மையும் போதுமானதாக இருக்கிறதா?

இலங்கையைப் பொறுத்தவரையில், நிதியியல் கொள்கைகளும் வங்கியியல் செயற்பாடுகளும் ஏனைய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, மிகச்சிறந்தத் தரத்தில் உள்ளதென்பதை மறுக்கமுடியாது.

அபிவிருத்தி வங்கிகள்

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அபிவிருத்தி வங்கிகளே கூட்டிணைக்கப்பட்டன. பெரும்பாலும் அபிவிருத்தி வங்கிகளின் முதன்மையான நோக்கமே, சிறிய, நடுத்தர வணிகங்களை ஸ்திரப்படுத்துவதற்காக, நீண்டகாலக் கடன்களை வழங்குவதாக இருக்கும்.

அவை, ஆரம்பகாலத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் துணைகொண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும்,  அவற்றால், தொடர்ச்சியாக, இத்தகைய நிறுவனங்களிடம் நிதியைப் பெற முடியாது. அப்படியாயின், இந்த வகை வங்கிகள் எவ்வாறு தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும்?

மிகப்பெரிய தொகையை, ஒரே தடவையில் வழங்கிவிட்டு, அதை வசூலிக்க,  பல வருடங்களைச் செலவிட வேண்டியிருக்கும். ஆனால், அடுத்தடுத்துக் கடன்களை வழங்க, வங்கிகளுக்கு எப்போதுமே நிதியும் இருக்க வேண்டும். இல்லையெனில், புதிதாக முளைக்கும் வணிகங்களுக்குத் தேவையான நிதியை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுவிடும்.

இதை அடிப்படையாகக்கொண்டு, மாற்றுத்தீர்வாக அபிவிருத்தி வங்கிகள் கண்டறிந்த வழிமுறையே, மிகநீண்டகால முதலீட்டு நிதிச்சேவையாகும். இதன்மூலம், வங்கிகளுக்குத் தேவையான நிதியை, நீண்டகால உறுதிப்பாட்டுடன் மக்களிடமிருந்தே முதலீடு என்கிற பெயரில் பெற முடிந்தது.

வணிக வங்கிகள்

ஆனால், வணிகவங்கிகள் என நம்மோடு அதீத அளவில் இணைந்துள்ள வணிக வங்கிகளின் கதையோ, வேறுமாதிரியாக உள்ளது. வணிக வங்கிகள்,  பெரும்பாலும் வணிகங்களுக்கான நீண்டகாலக் கடன்களை வழங்குவதில் பின்நிற்கின்றன.

இதற்கான பிரதான காரணமே, வணிக வங்கிகளின் நிதியானது, சேமிப்புக் கணக்குகளில்தான் தங்கியிருக்கிறது. பெரும்பாலான வணிக வங்கிகளின் சேமிப்புக் காலம் என்பது, குறுகியதாக இருப்பதன் காரணமாக, மிக நீண்டகாலக் கடன்களை வழங்குவதில், நிதி ரீதியாகப் பிரச்சினைகள் எழுகின்றன.

அதாவது, சேமிப்பு வைப்புகளின் முதிர்ச்சி (maturity) காலமானது, கடன்களது முதிர்ச்சி (maturity) காலத்துடன் ஒப்பிடும்போது, மிக குறுகியதாகும். இதனாலேயே, வணிக வங்கிகள் உயர் வட்டிவீதத்தை, இறுக்கமான ஆவணக் கட்டுபாட்டு முறைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இதன்மூலம், நீண்டகாலக் கடன்களை மிக குறைந்த அளவிலேயே வழங்க முயற்சிக்கிறது.

இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளின் செயற்பாடுகளின் அடிப்படையில்,  அவர்களால் மிக நீண்டகால அடிப்படையில் வழங்கப்படும் நிதிக்கான செலவுகள் (வட்டிவீதம் உட்பட) அதிகமாக இருப்பதன் விளைவாக, சிறிய, நடுத்தர வணிகங்களுக்கு, இந்த வங்கிகளின் கடன் மிகப்பாரிய சுமையாக அமைகின்றன.  

வணிகங்கள் உயர்வட்டி வீதங்களில் கடனைப் பெற்று, வணிகத்தைக் கொண்டு நடத்தும்போது, அதை மீளச்செலுத்த, அதிக வருமானத்தை, இலாபத்தைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், நாளாந்த செயற்பாடுகளுக்கான செலவையும் வட்டிச் செலவீனங்களையும் ஈடுசெய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, இது, நடைமுறைக்கு மிகமிக சாத்தியப்பாடு குறைந்த ஒன்றாகவே, வணிகங்களை பொறுத்தவரையிலும், வங்கிகளை பொறுத்தவரையிலும் உள்ளது.
அப்படியாயின், வங்கிகள் எவ்வாறு தமக்குத் தேவையான நீண்டகால முதலீடுகளை எப்படி திரட்டிக் கொள்ளுகிறது? வணிகங்களுக்கு நிதியை எவ்வாறு வழங்க முனைகிறது?
இதற்கென, பிரத்தியேகமான வழிமுறையை வங்கிகள் கையாளுகின்றன.

மக்களிடமிருந்து மிகநீண்டகாலத்துக்குக் கவர்ச்சிகரமான வட்டிவீதங்களை வழங்குகிறோம் எனும் அடிப்படையில், முதலீடுகளைத் திரட்டி, அவற்றைப் பொதுப் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளுகின்றன.

இதன்மூலம், நாளாந்த பாவனையிலிருந்து ஒரு குறிப்பிட்ட பண அளவானது, காணாமல் செய்யப்பட்டு, மக்கள் பார்வையில் சேமிப்பாகவும் முதலீட்டாளர் பார்வையில் முதலீடாகவும் மாற்றப்பட்டு, மீளவும் பண, முதலீட்டுச் சந்தைக்குள் கொண்டுவரப்படுகிறது.

மேற்கூறிய வழிமுறையில் பணத்தைத் திரட்டிக்கொள்ள முடியாது விடின், நீண்டகால கடன்பத்திரங்களை வெளியிட்டு, தமக்கு தேவையான முதலீட்டை வங்கிகள் திரட்டிக்கொள்ளுகின்றன. இவற்றுக்கும் மேலாக, இலங்கை போன்ற நாட்டில், அதிக நிதியை அரசாங்க நிறுவனங்களான ஊழியர் சேமலாப நிதியம், காப்புறுதி துறையின் பணம் ஆகியவை வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலமாக, வழங்குகின்றன.

இத்தகைய அரசநிதிகள் மிகநீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யப்படுவதால், இவற்றின் மூலம் வங்கிகள் அதீத பயனை பெறமுடியும். இவற்றுக்மேலாக, அரச வங்கிகள் அரசாங்கத்தால் வெளியிடப்படும் திறைசேரி பத்திரங்கள் ஊடாகவும் நிதியை பெற்றுக்கொள்ளுகின்றன.

மேற்கூறிய நிதிகளில், பெரும்பாலும் நீண்டகால முதலீடுகளாக வங்கிகளுக்கு வருகின்ற நிதியானது, இலங்கையில் வாழும் மக்களில் பெரும்பாலானோரது நேரடி, மறைமுக ஓய்வுகாலத்துக்கான தற்போதைய சேமிப்புகளே ஆகும். ஆனால், அவை வெவ்வேறு பெயர்களால் அடையாளப்படுத்தப்பட்டு, வணிகங்களின் செயல்பாடுகளுக்காக வங்கிகளை வந்து சேர்கின்றன.

இதுதான் பெரும்பாலும் எந்தவொரு நாட்டிலும் வங்கிகள் சார்பிலான செயன்முறையாக இருக்கும். ஆனால், இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில், வங்கிகளுடன் இந்த நிதியைப் பங்கிட்டுக் கொள்ளுவதில், போட்டியாளர் ஒருவர் உள்ளார். அவர், வேறு யாருமல்ல “இலங்கை அரசாங்கமே” ஆகும். இதனால், வங்கிகளுக்குக்  கிடைக்கவேண்டிய முழுமையான நிதி கிடைக்காமல் பங்கிடப்படுகிறது.

இலங்கை போன்ற பாதீட்டுக் குறையைக் கொண்டுள்ள நாடுகள், நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி தேவைப்படும் எனும் அடிப்படையில்,  இவ்வாறு வணிகங்களுக்கு வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியை முடக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

பெரும்பாலும், அரசாங்கத்தால் வெளியிடப்படும் முறிகள், கடன்பத்திரங்கள், முதலீட்டு பாதுகாப்பின் அதி உச்சத்தைக் கொண்டிருப்பதால், இவற்றுக்கான முதலீட்டுச் சந்தையானது மிக அதிகமாகவுள்ளது. எனவே, அபிவிருத்தி அடைந்த நாடுகளில், வங்கிகள் அரசாங்கத்துடன் போட்டிபோட்டுக் கொண்டே, தமக்கு தேவையான நிதியைத் திரட்டிக்கொள்ளும் பரிதாபநிலை ஏற்படுகிறது.

அதிலும், பாதீட்டு குறையானது, மிக அதிகமாகவுள்ளபோது, அதை நிவர்த்திக்க, அரசாங்கமும் அதிக வட்டிவிகிதங்களில் கடன்பத்திரங்களை விநியோகிக்கும். இதுவும், வங்கிகளில் நிதி திரட்டல் செயற்பாட்டை பாதிக்கும். அப்படியாயின், வங்கிகள் ஏன் வெளிநாட்டு நிதி மூலங்களிலிருந்து சுயாதீனமாக நிதியைத் திரட்டிக்கொள்ளக் கூடாது?

அடிப்படையில், குறித்த நாட்டின் அரசாங்கமோ, வங்கிகளோ சர்வதேச நியமங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவீடுகளுக்கமைவாக, நிதியைத் திரட்டிக்கொள்ள முடியும். உதாரணத்துக்கு, ஒரு நாடு அபிவிருத்தி அடைந்துவரும் மட்டத்திலோ, அதற்கு கீழாகவோ இருக்குமெனின், அத்தகைய நாடும், வங்கிகளும் மிக அதிகளவில் சர்வதேச ஸ்தாபனங்களிடமிருந்து நிதியை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், குறித்த நாடு, அபிவிருத்தி அடைந்து வரும் அதன்நிலையில் முன்னேற்றத்தைக் காட்டத் தொடங்கும்போது, இந்த நிதி வழங்கல் குறைக்கப்படும் அல்லது கடினமாக்கப்படும். இதன் விளைவாக, அரசாங்கமும் வங்கிகளும் நிதியைப் பெற்றுக்கொள்ளுவதில் சிக்கல் நிலை ஏற்படும். இதனால், உள்நாட்டு நிதியை பெற்றுக்கொள்ளுவதில் போட்டித்தன்மை, நிலை உருவாக்கப்படுகிறது.

இதற்கு பிரதான காரணம், ஒரு நாட்டின் ஒரு நபருக்கான வருமானம் அதிகரிக்கும்போது, மக்களின் வாழ்க்கை மட்டமும் சேர்ந்தே அதிகரிப்பதாகக் கணிக்கப்படுகிறது. இதனால், குறித்த நாடு, தனது நிதித்தேவையை, தானே பூர்த்தி செய்துக்கொள்ளக்கூடிய அடைவுமட்டத்தை நோக்கி நகர்வதாகக் கணிப்பிடப்படுவதால், இந்த நிதிக் குறைப்புச் செய்யப்படுகிறது.

இவற்றுக்கு மாற்றாக, வெளிநாட்டுப் பணச்சந்தை, முதலீட்டுச் சந்தைகள் என்பவற்றின் ஊடாகவும் நிதியைத் திரட்டிக்கொள்ள இயலும். ஆனால், இது சலுகை நிதிகளுடன் ஒப்பிடுமிடத்து அதிக வட்டிவீதங்களை எதிர்பார்க்கும் நிதியாக அமைவதால், இந்த நிதியின் பயன்பாடு, இலங்கை போன்ற நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைவாகவேயுள்ளது. 

வட்டிவிகிதம்

இலங்கை போன்ற நாடுகளில், மிகக் குறுகியகாலத்துக்கு ஆட்சிக்குவரும் ஒவ்வோர் அரசாங்கமுமே வெவ்வேறு வகைக் கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வருகின்றன. அவற்றில் கடந்த காலங்களில் ஆட்சியமைத்த அரசாங்கமும் சரி, தற்போதைய அரசாங்கமும் சரி, தமது நீண்டகாலத்  திட்டங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி உட்படப் பல்வேறு அரசாங்க, தனியார் நிதிமூலங்களை, முற்றாகப் பயன்படுத்துகின்றன அல்லது பயன்படுத்தி விட்டன எனலாம்.

இதன்விளைவாக, குறிப்பாக அபிவிருத்தி வங்கிகளுக்கான நிதி கிடைப்பதில், தடங்கல் ஏற்படுகிறது. இதனால், வங்கிகள் வட்டிவீதத்தை உச்சப்படுத்தி, வணிகங்கள் நிதி பெறுகின்ற நிலையைக் கட்டுபடுத்துகின்றன அல்லது குறைக்கின்றன. இது, வணிகங்கள் மத்தியில், வங்கிகள் தங்கள் இலாபநோக்கத்துக்காக அபிவிருத்தியைப் பற்றி சிந்திக்காது இலாபநலன் கருதிச் செயற்படுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

இந்த நிலையில், வங்கித்துறை மீது, மிக நீண்டகால முதலீடுகளுக்கு வட்டிவீதத்தை கட்டுப்படுத்துவதில்லை எனும் குற்றசாட்டும் சுமத்தப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தக் குற்றசாட்டு அர்த்தமற்றதாகும். இந்தநிலைக்குக் காரணமான அரசாங்கமே, இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

ஆனால், இததை நிவர்த்திக்கிறோம் எனும் பெயரில், இலங்கை போன்ற அரசாங்கங்களும், சிறிய நடுத்தர வணிகங்களுக்காக புதிய அபிவிருத்தி வங்கிகளை உருவாக்குகின்றன. இதனால், போட்டித்தன்மையை உருவாக்கி, வட்டிவீதத்தைக் குறைப்பதாகக் கூறனாலும், நீண்டகாலத்தில் உருவாக்கப்பட்ட புதிய வங்கிகளும், வழியின்றி வட்டிவீதங்களை அதிகரிக்கவே செய்கின்றன. 

உண்மையில், இத்தகைய நிலையைக் கொண்டுள்ள இலங்கை போன்ற அரசாங்கங்கள், ஆக்கபூர்வமாக பாதீட்டுக் குறையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே முயற்சிக்க வேண்டும். இதன் விளைவாக, ஊழியர் சேமலாப நிதி, காப்புறுதி நிதி உட்பட அரசாங்க மற்றும் தனியார் நிதிகளில் ஒரு சேமிப்புத் தன்மையை உருவாக்க முடியும்.

இது, வங்கிகளின் வழியாக மீளவும் நாட்டின் அபிவிருத்திக்கும் வழிவகுக்கக்கூடிய கதவுகளைத் திறக்கும் திறவுகோலாகப் பயன்படும். இதனால், இலங்கை போன்ற நாடுகளின் முதுகெலும்பாகவுள்ள சிறிய, நடுத்தர வணிகங்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிப்பதுடன், வங்கித்துறையும் தங்குதடையின்றிச் செயலாற்ற முடியும்.

 


You May Also Like

  Comments - 2

  • Sam Isaac Monday, 15 October 2018 12:36 PM

    Good info but need to include about the srilankan borrowings which took from foreign countries. this also a main reason for the influence in banking intrest rates

    Reply : 0       0

    R.M. Sivananthan Thursday, 18 October 2018 03:24 AM

    Good information. continue your article on Financial markets.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .