2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுதியும் அளவும்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2018 மார்ச் 12 , மு.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு, இலங்கையினால் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுமதி 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையான ஆண்டுகளில் இலங்கையினால் வருடம்தோறும் ஈட்டப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுதியிலும் பார்க்க அதிகமானது. ஆனாலும், இந்த அளவு நமது பொருளாதார எதிர்பார்க்கைகளுக்கு போதுமானதா? அல்லது ஏனைய உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து நமது வெளிநாட்டு நேரடி முதலீடுகள் போதுமானதா ?   

உலக வெளிநாட்டு நேரடி முதலீடுகள்  

ஐக்கிய நாடுகள் சபை வர்த்தக மற்றும் அபிவிருத்தி பற்றிய ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (UNCTAD) வெளியிட்ட உலக முதலீட்டு அறிக்கையின் பிரகாரம், 2017ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு நேரடி முதலீடாக, 1.8 திரில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியிருந்தது. 

2016ஆம் ஆண்டில் இது 1.75 திரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இவர்களது குறித்த அறிக்கைகளிலேயே, உலக நாடுகளில் ஒட்டுமொத்தமாகத் திரட்டப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டில், இதுவரை அதிகமாக திரட்டப்பட்ட நிதியளவாக 2 திரில்லியன் அமெரிக்க டொலர்கள் 2007ஆம் ஆண்டில் திரட்டப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. 

இதற்குப் பின்னதாக இந்த நிலையைத் தொடர்ச்சியாகப் பேணமுடியாத நிலை 2008-2009ஆம் ஆண்டில் உலகைத் தாக்கிய பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டிருந்தது.  

 இந்த உலக வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் அதிகமானவற்றை தங்கள் நாட்டுக்குள் கொண்டுவருகின்ற முதல் பத்து நாடுகளில் நமது அண்டை நாடான இந்தியாவும் உள்ளடங்கியுள்ளது. இவர்கள் வருடம்தோறும் சராசரியாக 44 பில்லியன் அமெரிக்க டொலர்களை தனது வெளிநாட்டு நேரடி முதலீடாக கொண்டிருக்கின்றனர். 

பெரும்பாலான வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறும் நாடுகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளைக் காட்டிலும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே முன்னிலை பெற்று இருக்கின்றன. இதற்குக் காரணம், பெரும்பாலான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளோ அல்லது அந்த நாட்டின் வெளிநாட்டு முதலீட்டாளர்களோ தங்களது இலாபத்தைப் பெருக்கிக்கொள்ள அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு முதலீடு செய்பவர்களாக இருக்கிறார்கள்.  

 இவற்றை விடவும், இந்த முதலீட்டு அறிக்கையில் மேலும் சில சுவாரசியமான, கவனிக்கத்தக்க விடயங்களும் உள்ளடங்கியுள்ளன. அறிக்கையின் தரப்படுத்தலில் இலங்கையுடன் ஒப்பிடுமிடத்து மிகச் சிறிய நாடுகளும் குறைவான சனத்தொகையைக் கொண்ட நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் கவருகின்ற நாடுகளாக, சில நாடுகள் முதல் பத்து இடங்களுக்குள்ளும் இடம்பெற்றுள்ளமை நமது நாட்டின் சாதனைமிகு வெளிநாடுத் நேரடி முதலீட்டு தொகை ஒன்றுமேயில்லை என்பதற்கு சான்றாகவுள்ளது. 

உதாரணமாக,   கொங்காங் , சிங்கப்பூர் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இலங்கையுடன் ஒப்பிடுமிடத்து மிகக் குறைவான சனத்தொகையையும் நிலப்பரப்பையும் கொண்ட நாடுகளாகும். 

ஆனால், இவை இலங்கையை விடவும் மிக அதிகமாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளாக உள்ளன. இதில், ஏழு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட கொங்காங் சராசரியாக வருடம்தோறும் சுமார் 108 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் 56 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிங்கப்பூர் சராசரியாக வருடம்தோறும் சுமார் 62 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் 17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நெதர்லாந்து சராசரியாக வருடம்தோறும் சுமார் 92 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக பெற்றுக் கொள்ளுகிறது. 

இந்த நாடுகளின் இன்றைய வளர்ச்சி இலங்கையோடு ஒப்பிட முடியாதபோதிலும், இந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளின்றி இந்த நாடுகள் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியாதென்பதே உண்மை.  

 எனவே, இந்த நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து நாம் பெற்றுக்கொள்ளும் அல்லது கவர்ந்திழுக்கும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு மிகக்குறைவாகவே உள்ளது. அப்படியாயின், எங்கே நாம் தவறுகளைச் செய்கின்றோம் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.  

 பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் மிகப்பெரும் ஊழியப்படையையும் சந்தையையும் கொண்டுள்ள நாடுகளை நோக்கிச் செல்வது இயல்பானதாக இருக்கிறது. இதற்கு, மிகப்பிரதான காரணம், இத்தகைய நாடுகளில் முதலீட்டுக்கான இலாபம் ஒப்பீட்டளவில் உறுதியானதும், அதிகமாகக் கிடைக்கப்பெறுவதுமே ஆகும்.  

 இருப்பினும், சிறிய சந்தைகளோடுள்ள சிறு நாடுகள் அவற்றை விடவும் பெரிய நாடுகளுடன் போட்டியிடும் வகையில் சிறிய உள்நாட்டுச் சந்தையின் வரம்பை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், இந்தப் போட்டி நிலையைச் சமாளிக்க முடியும். 

அதன்போது, வெளிநாட்டு உழைப்பை ஈர்ப்பதற்கான ஒழுங்குமுறைகளையும் வழிமுறைகளையும் அமைப்பதன் மூலம், முதலீடுகளைக் கவரும் பெரிய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, நமக்கு இருக்கக்கூடிய தொழிலாளர் பற்றாக்குறையையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.  

 இலங்கை போன்ற ஆசிய நாடுகள்தான், கடந்த சிலவருடங்களில் வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களின் கவனத்துக்குரிய இடமாக மாறியுள்ள நிலையில், ஏனைய ஆசியநாடுகளுடன் போட்டியிட்டுத் தனக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டை இலங்கை பெற்றுக்கொள்ளவேண்டிய போட்டித்தன்மை நிலையொன்றுள்ளது.  

 இலங்கையைப் பொறுத்தவரையில், வெளிநாட்டு நேரடி முதலீடானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதிலும் முக்கியமானதாக இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரையில், அவை இன்னமும் போதிய முதலீட்டாளர்களை இலங்கைக்குள் கொண்டுவராத நிலையிலேயே உள்ளது. 

என்னதான், சாதனைமிகு வெளிநாட்டு நேரடி முதலீட்டை நாம் ஈட்டிகொண்டோம் எனச் சொல்லிக்கொண்டாலும், நமது பொருளாதாரத்தேவையை நிவர்த்திக்கக்கூடிய அளவுக்கு நம்மால் நிதியைத் திரட்டிக்கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. 

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமாக, இலங்கையின் நாணய மாற்றுக் கொள்கைகளில் உறுதித்தன்மையை பேணக்கூடியதாக இருக்கும். இது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முன்னேற்றக்கூடிய உந்துசக்தியாக மாறுமென்பதிலும் ஐயமில்லை.  

1990ஆம் ஆண்டுகளுக்கு பிற்பாடாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் அளவானது, உலகளாவிய ரீதியில் படிப்படியாக அதிகரித்துகொண்டே வந்துள்ளது. குறிப்பாக, 1990களுக்கு முன்னர் சுமார் 200-300 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குள் நேரடி முதலீட்டின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. 

அதற்குப் பின்னதான காலப்பகுதியில் இது வளர்ச்சியடைந்து, 2008ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்வரை, இரண்டு திரில்லியன் அமெரிக்க டொலர்கள் எனும் இலக்கை எட்டியிருந்தது. 

அதுபோல, 2000ஆம் ஆண்டு வரையிலும், ஒட்டுமொத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் சுமார் 20%மட்டுமே அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளால் உள்ளீர்க்கப்பட்டது. 

ஆனால், 2008-2015ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஒட்டுமொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் சுமார் 45-55% மான முதலீடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளால் உள்ளீர்க்கப்படுகின்றது. 

இது வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்களின் பார்வை, அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கித் திரும்பியுள்ளமைக்கு மிகப்பெரும் சான்றாகும். 

இதில் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை, அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கி, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நகரச் செய்திருந்தது. 

ஆனாலும், அவ்வாறு அபிவிருத்தி அடைந்த நாடுகளை நோக்கி நகர்த்தப்பட்ட முதலீடு, மிகப்பெரும் நலனை முதலீட்டாளர்களுக்கும், அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் வழங்கியதன் விளைவாக, தொடர்ச்சியாக நேரடி முதலீடுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளையே குறிவைத்து முதலிடப்படுகிறது.  

எனவே, இலங்கை போன்ற நாடுகள், இந்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில், உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், வெளிநாட்டு நேரடி முதலீட்டை பெற்றுக்கொள்வதென்பது குதிரைக்கொம்பான ஒன்றாகும். 

ஆனால், போர் முடிவுக்கு வந்து அபிவிருத்திப் பாதையை முதன்மையாகக் கொண்டு செயல்படும்நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மிகப்பாரிய அளவில் கவருவதற்கான வழிமுறைகளைக் கையாளவேண்டியது அவசியமாகிறது. 

வெளிநாட்டு நேரடி முதலீடுகள் நிதிரீதியான வளர்ச்சிக்கு மூலாதாரமாக இருக்கின்றது. காரணம், மிகப் பழைமையான காலத்தில் இலங்கை போன்ற நாடுகளின் மூலதனமானது வெறுமனே உள்நாட்டு சேமிப்பு என்பதில்தான் தங்கியிருந்தது. 

அப்போது, இலங்கை தன்னுடைய இலக்குகளை அடைய மிகப்பாரிய காலத்தை வீணாக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலையில், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மூலமாக, மேலதிக நிதியை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பதன் காரணமாக, தமது அபிவிருத்தி செயல்பாடுகளை விரைவாக முன்னெடுக்க கூடியதாக இருக்கிறது. 

அதுமட்டுமல்லாது, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தனித்து, பணமாக மட்டுமே இலங்கைக்குள் வருவதில்லை. முதலீட்டாளர்களின் முதலீட்டுடன் இணைந்ததாக, முகாமைத்துவ திறன், தொழில்நுட்பத் திறன் உட்பட பலவகையான திறன்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. அதுவும், இலங்கை போன்றதொரு நாட்டின் அபிவிருத்திக்கு மிகப் பாரிய பங்களிப்பை வழங்குகிறது.  

இலங்கை போன்ற நாடு, தனது அபிவிருத்தியை முதன்மை நோக்காகக் கொண்டு செயல்படும்போதுதான், இவ்வாறு பல்வேறு நலனை ஒன்றாகத் தரக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்கும்.

அதற்கு, இலங்கையின் அரசியல்சார் உறுதியான கொள்கைகள், அரசியல் ஸ்திரத்தன்மை, இன மற்றும் மதரீதியான இணக்கநிலை சீராகப் பேணப்பட வேண்டும். இல்லையெனில், வெளிநாட்டு நேரடி முதலீடுகளற்ற பழைமைவாத நிலையை நோக்கியே செல்லவேண்டியநிலை உருவாகக்கூடும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .