அதிகரித்துச் செல்லும் பொதியிடல் வரி ‘நுகர்வோருக்கு சுமையாக உள்ளது’

2018     ஆம் ஆண்டுக்காக வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம், பொதியிடல் மூலப்பொருட்களுக்கு வரி அதிகரிப்புக் குறித்த பிரேரணை முன்மொழியப்பட்டுள்ளமை தொடர்பில், இலங்கை லெமினேட்டட் பொதிகள் உற்பத்தியாளர் சம்மேளனம், தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. 

இதன் பிரகாரம், இந்த வரி அதிகரிப்பினால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவதுடன், பொலிதின் பாவனையைக் குறைப்பதற்கான மாற்றீட்டு தீர்வாக அமைந்திருக்காது எனவும், சூழல் பாதுகாப்புக்கு பெருமளவில் பங்களிப்பு வழங்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம், பொதிகள் தயாரிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோகிராம் பிளாஸ்ரிக் மூலப்பொருள் மீதும் 10 ரூபாய் வரியாக அறவிடப்பட பிரேரிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை லெமினேட்டட் பொதிகள் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், ‘இந்த வரவு செலவுத்திட்டம் சூழலுக்கு நட்பான திட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் செயற்பாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், நிஜத்தில் இந்தச் செயற்பாடுகள் பொது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் என்பதுடன், பொருட்களின் விலைகளில் அதிகரிப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

இலங்கையில் கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்த நிலைபேறான தீர்வெதுவும் எமக்கு இல்லை. பலர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி செய்கின்றனர். தூர நோக்கிலான நிகழ்ச்சியொன்று நாட்டுக்குத்தேவை, குறுங்கால சிறந்தனையிலமைந்த தீர்வுகள் பொருத்தமாக அமைந்திடாது.

இந்த விடயத்துக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள், அவ்வாறான நீண்ட காலத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, இந்தக் குறுங்காலத் தீர்வுகளை முன்வைப்பது பாதிப்பை ஏற்படுத்தும். தூர நோக்கிலமைந்த திட்டங்களுக்குக் காலம், திட்டமிடல் மற்றும் அமைதி போன்றன அவசியமாகின்றன.

‘பச்சை பொருளாதாரத்தில்’ வரி விதிப்பு என்பது பாவனையாளர்களுக்குப் பெரும் சுமையாக அமைந்திருக்கும்.’ என்றார்.  

இந்தச் சம்மேளனத்தின் கருத்தின் பிரகாரம், குறித்த வரியின் அடிப்படையில், வெவ்வேறு துறைகளுக்குப் பாதிப்புகள் ஏற்படும், குறிப்பாகப் பொதியிடல் துறையின் சேவைகளில் தங்கியிருக்கும் துறைகள் இதில் அடங்கும்.

இதன் விளைவாக, இறுதியில் பாவனையாளர் இந்தச் சுமையைத் தாங்கிக்கொள்ள நேரிடும். பொதியிடல் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் பிரகாரம், துறையில் காணப்படும் இதர சவால்களுக்கு மேலதிகமாகத் தற்போதைய வரி அதிகரிப்புகள் அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மூலப்பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமுள்ளன. இலங்கை ரூபாயின் பெறுமதி வலுக்குறைவது, மின்சாரச் செலவு அதிகரித்துள்ளமை, வங்கிகளின் உயர் வட்டி வீதங்கள் போன்றன துறையை கஷ்டமான நிலைக்குத் தள்ளியுள்ளன.   

‘கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி போன்றன அரசாங்கத்தின் பொறுப்புக்குரிய நடவடிக்கைகளாக அமைந்துள்ளன. பாரிய பிரச்சினைக்கு வரி விதிப்பது என்பது தீர்வாக அமைந்துவிடாது. கடந்த காலங்களில் பொதியிடலின் மீது சேகரிக்கப்பட்ட வரி வருமானங்கள் இந்தப் பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வொன்றைக் காணப் பயன்படுத்தப்படவில்லை.

இந்தப் பிரச்சினை தொடர்பில், அரசாங்கத்தை ஆராயுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன், இந்த வரி விதிப்பு பற்றி, மீளாய்வு செய்வதுடன், இவை சரியான தீர்வைப் பெற்றுத்தராது என்றார்’ என்றார்.  


அதிகரித்துச் செல்லும் பொதியிடல் வரி ‘நுகர்வோருக்கு சுமையாக உள்ளது’

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.